குஜராத் தேர்தலில் பார்ப்பன பாசிச மோடியின் வெற்றியை குறித்து பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் எழுதிய ஒரு கட்டுரையில், ""குஜராத் இனிமேலும் ஒரு மாநிலமல்ல, அது ஒரு சித்தாந்தம்'' எனக் குறிப்பிட்டார். "இனிமேல்' என்பது 2002லேயே துவங்கி விட்டது. மேற்கு இந்தியாவில் நிலைபெற்றுள்ள அப்பாசிச சித்தாந்தத்தின் இன்னொரு சோதனைச்சாலை கிழக்கு இந்தியாவில், ஒரிசாவில் "வளர்ந்து' வருகிறது.
குஜராத் இனப் படுகொலையை இன்னமும் "சூறாவளி' என்றே குஜராத்திகள் அழைக்கிறார்கள். அத்தகையதொரு சூறாவளியை, புயல், வெள்ளம் என இயற்கைச் சீற்றங்களுக்காக மட்டுமே பெரும்பாலும் செய்தி ஊடகங்களில் இடம் பெறும் ஒரிசா, கடந்த ஆண்டின் டிசம்பர் மாத இறுதியில் கண்டது. இதே ஒரிசாவில், 1999இல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரகாம் ஸ்டெய்ன்ஸ் என்ற கிறிஸ்தவ சேவை நிறுவன ஊழியரும், அவரது இரு பச்சிளம் பாலகர்களும் ஒரு வேனில் வைத்து உயிரோடு கொளுத்தப்பட்டதும், 2002இல் ஒரிசா சட்டசபைக்குள்ளேயே சங்கப் பரிவார கும்பல் புகுந்து எதிர்க்கட்சியினரைத் தாக்கியதும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அடுத்த படிநிலை வளர்ச்சியாக, கந்தமால் மாவட்டம் முழுவதும் தலைவிரித்தாடியது "சூறாவளி'!
கந்தமால் மாவட்டம் தாழ்த்தப்பட்ட பனா கிறிஸ்தவர்களும், கந்தா பழங்குடியினரும் வசித்து வரும் மலைப்பகுதிகள் அடங்கிய பின்தங்கிய மாவட்டமாகும். கடந்த பத்தாண்டுகளாகவே பழங்குடி மக்கள் அதிகம் நிறைந்த ஒரிசாவில், கட்டாய மதமாற்ற எதிர்ப்பு என்ற நச்சுப் பிரச்சாரத்தை முன்வைத்து, விசுவ இந்து பரிசத் (வி.இ.ப.), வனவாசி கல்யாண் ஆசிரமம் (வ.க.ஆ.), பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் இடைவிடாத மதவெறிப் பிரச்சாரத்திலும் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளன.
கடந்த டிசம்பர் 20ஆம் தேதியன்று அம்மாவட்டத்திலுள்ள பாமுனிகான் என்ற சிற்×ரில், தாழ்த்தப்பட்ட பனா கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக ஊரை அலங்கரிக்கத் தொடங்கியதற்கு, வி.இ.ப. எதிர்ப்பு தெரிவித்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தடைகளை ஏற்படுத்துவோம், கிறிஸ்தவர்களுக்குப் பாடம் கற்பிப்போம் எனப் பகிரங்கமாக அறிவித்தது. அதன்படி, டிசம்பர் 24ஆம் தேதியன்று, கோடாரிகள், கழிகள், நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகளோடு, பாமுனிகான் வாரச் சந்தையில் கூடிய 3000க்கும் மேற்பட்ட வி.இ.ப. குண்டர்கள் கடைகளை மூடுமாறு வியாபாரிகளை அச்சுறுத்தினர். இதனை அங்கிருந்த தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ இளைஞர்கள் எதிர்க்க, கல்லெறி சம்பவங்கள் நிகழ்ந்தன. வி.இ.ப. குண்டர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் இரு இளைஞர்கள் காயமடைந்தனர். கிறிஸ்தவர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. கிறிஸ்துமஸ் பந்தல் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
மறுநாள் சில வி.இ.ப. குண்டர்கள் கைது செய்யப்பட்டனர். உடனடியாக, 1000க்கும் மேற்பட்ட வி.இ.ப., பஜ்ரங்தள் வெறியர்கள் பாமுனிகான் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போலீசை மிரட்டினர். தீ வைப்புகளும், தாக்குதல்களும் தொடங்கின. இந்நிலையில் லக்கானந்தா சரஸ்வதி எனும் வி.இ.ப. சாமியாரின் சில ஆதரவாளர்கள், தாசிங்பதி எனும் ஊரின் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நிறுத்துமாறு தகராறு செய்தனர். எண்ணிக்கையில் அதிகமாயிருந்த கிறிஸ்தவர்கள் திருப்பித் தாக்கவே, பின்வாங்கி ஓடினர்.
சிறு கீறல்கூடப் படாமல், தாரிங்பதி வட்டத்தை அடைந்த லக்கானந்தா சரஸ்வதி, தான் தாக்கப்பட்டதாக மருத்துவமனையில் சென்று அமர்ந்து கொண்டான். உடனடியாக சாமியார் தாக்கப்பட்டதாக வதந்தி தொற்றிக் கொண்டது. அங்கே கூடிய பத்திரிகையாளர்கள் போலீசு முன்னிலையிலேயே, ஏற்கெனவே தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கியிருந்த தனது ஆதரவாளர்களைத் தூண்டும் விதத்தில் அவன் செல்போனில் வெறியை கக்கினான். ""நீங்கள் வெறுமனே டயர்களை எரித்துக் கொண்டிருக்கிறீர்கள். எத்தனை கிறிஸ்தவ வீடுகளும் தேவாலயங்களும் கொளுத்தப்பட்டிருக்கின்றன? கலகமில்லாமல் அமைதி இல்லை. மோடி குஜராத்தில் கலகம் செய்தார். அதனால்தான் அங்கே அமைதி இருக்கிறது.''
இதனை ஒரு உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். வெறியன் ஒளிப்பதிவு செய்ய, உடனடியாக கொந்தளிப்பான சூழ்நிலையில் லக்கானந்தாவின் வெறிக் கூச்சல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள்கூட இன்றி, லக்கானந்தா தாக்கப்பட்டார் என ஈடிவியின் ஒரியா மொழி சேனல் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது.
இதனைத் தொடர்ந்து, ஏறத்தாழ 72 மணி நேரத்திற்கு பாமுனிகான், தாரிங்பதி, புல்பானி, ஜிஞ்சிர்குடா, பல்லிகுடா முதலான ஒட்டுமொத்த கந்தமால் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான வி.இ.ப. குண்டர்களின் காட்டுமிராண்டித் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. 5 பெரிய தேவாலயங்கள், 48 கிராமப்புற தேவாலயங்கள், 5 கான்வெண்டுகள், 7 விடுதிகள், 7 தேவாலய நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு, முற்றிலுமாகத் தரைமட்டமாக்கப்பட்டன. திக்காபாலி எனுமிடத்தில் காவல் நிலையமே சூறையாடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 217இல் பெரும் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு மாவட்டமே தனித் தீவானது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ மக்கள் குடும்பங்களோடு காடுகளுக்குத் தப்பியோடினர். பல நாட்களுக்கு உணவின்றி, கடும் குளிரில் காடுகளில் தலைமறைவாக குழந்தைகளோடு பரிதவிக்க விடப்பட்டனர். 11 பேருக்கும் மேல் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தள்இன் பத்தாண்டு நிறைவையொட்டி புவனேஸ்வருக்கும், வேறு சில நிகழ்ச்சிகளுக்கும் பாதுகாப்பு பணிக்கு போலீசு சென்று விட்டதால்தான், இவ்வெறியாட்டத்தை தடுக்க இயலவில்லையென முதலமைச்சர் நவீன் பட்நாயக் நாடகமாடினார். ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க.வோ கட்டாய மதமாற்றம்தான் இவ்வன்முறை நிகழக் காரணமென்றும், அங்கே அமலில் இருக்கும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தில் மேலும் கடுமையான விதிகள் கொண்டு வர வேண்டுமென்றும் கூச்சல் போட்டது. வழக்கம் போல நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, ஆளும் கட்சி இப்பிரச்சினையைக் கை கழுவியது.
இம்முறையும், லக்கானந்தா தாக்கப்பட்டதற்கு "இயல்பான எதிர்வினையாகவே' வன்முறை நிகழ்ந்ததாக தனது வழக்கமான "வினைஎதிர்வினை' வாதத்தை வி.இ.ப. முன்வைத்து நியாயம் கற்பித்தது. ஆனால், இத்தாக்குதல்கள் குஜராத்தைப் போன்றே திட்டமிட்ட தயாரிப்புகளோடு கனகச்சிதமாக நிறைவேற்றப்பட்டன என்பதுதான் உண்மை. டாக்டர் ஜான் தயாள் தலைமையிலான உண்மை அறியும் குழு சமர்ப்பித்துள்ள அரசுசாரா வெள்ளை அறிக்கையானது, டிசம்பர் 9ஆம் தேதியன்றே பாமுனிகானில் லக்கானந்தா நடத்திய இரகசியக் கூட்டம், டிசம்பர் 2123 வரை பாபா ராம்தேவின் "யோகா பயிற்சி', டிசம்பர் 22ம் தேதியன்று அனைத்துப் பஞ்சாயத்து ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் இரகசியக் கூட்டம் எனத் திட்டமிட்ட முறையில் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் நடந்ததை சுட்டிக் காட்டுகிறது. இக்கலவரத்தில் காலாட்படையாக நின்று தாக்குதல் தொடுத்தவர்கள் கந்தா பழங்குடியினர்.
2002இல் குயி மொழி பேசும் மக்கள், அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் என மத்திய அரசு வரையறுத்தது. தாழ்த்தப்பட்ட பனா கிறிஸ்தவர்கள், கந்தா பழங்குடியினர்கள் இருவருமே குயி மொழிதான் பேசுகின்றனர். ஆனால், பனா கிறிஸ்தவர்களைப் பழங்குடியாக அங்கீகரிக்கக் கூடாது என கந்தா பழங்குடியினரின் குயி சமாஜ் அமைப்பு, திட்டமிட்டு டிசம்பர் 25,26 தேதிகளில் பந்த் அறிவித்தனர். வி.இ.ப.வின் தூண்டுதலின் பேரிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக கந்தா பழங்குடியினரை "இந்துமயமாக்கும்' வேலைகளில் ஈடுபட்ட வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் "சேவை', இத்தாக்குதல்களில் அறுவடை செய்யப்பட்டது.
பழங்குடியினரை ஏமாற்றி, மிஷனரிகள் கட்டாய மதமாற்றம் செய்வதாக வெறிக்கூச்சல் போடும் சங்கப் பரிவாரக் கும்பல்தான், பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் 340 ஏகலைவன் கல்விச் சாலைகள், வனவாசி நல அமைப்புகள், விவேகானந்தா கேந்திரங்கள், சேவா சமிதிகள் என பல வண்ணப் பெயர்களில் இயங்குகிறது. இவ்வமைப்புகள் அனைத்தும் பழங்குடியினரின் மரபுகள், வழிபாட்டு முறைகளை அழித்து, அவர்களை இந்துமயமாக்கும், சமஸ்கிருதமயமாக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஒரிசா முழவதும் 6,000 ""ஷாகா''க்களில் 1.5 லட்சம் பேரை அணிதிரட்டியுள்ளது ஆர்.எஸ்.எஸ். ஒரிசாவின் பஜ்ரங் தள் தலைவன் சுபாஷ் சௌகான், ஒரிசா இரண்டாவது இந்து ராஷ்டிரம் என எக்காளமிடுகிறான். பசு வதைத் தடைச் சட்டம், கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் என மேலிருந்தும், வெள்ள நிவாரண நிதி என்ற போர்வையில் வசூலிக்கப்பட்ட கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களின் நிதியோடு இயங்கும் வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற பல அமைப்புகள் கீழிருந்தும் இயங்க, ஒரிசா சோதனைச்சாலை மேலும் பல பரிசோதனைகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறத்தில் சத்தமின்றி கலிங்கா நகர் நிலப் பறிப்பு முதல் காடுகள், கனிமவளங்கள் அனைத்தையும், டாடா, வேதாந்தா, எஸ்ஸார் போன்ற இந்தியத் தரகு முதலைகள் சுற்றி வளைத்து ஏப்பமிட்டு வருகின்றன. மறுகாலனியமும், பார்ப்பன பாசிசமும் தட்டிக் கேட்பாரின்றி தலைவிரித்தாடும் ஒரிசா, "வளர்ந்து' வரும் குஜராத் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
· கவி
No comments:
Post a Comment