ஆஸி. டெஸ்ட் தொடரில் சச்சின் விளையாடுவார்: பி.சி.சி.ஐ! |
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம்பெறுவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த சச்சின், இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம் பெற்றிருந்தாலும், முழங்கை காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் போட்டியில் இருந்து விலகினார். இதனால், ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 9ஆம் தேதி துவங்கும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் சச்சின் பங்கேற்பது சந்தேகம் என கடந்த சனியன்று செய்திகள் வெளியானதால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.சி.ஐ. செயலர் நிரஞ்சன் ஷா, காயம் குணமடைந்துவிட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் ஒரு வார காலம் ஓய்வெடுக்க வேண்டும் என அணியின் உடற்கூறு நிபுணர் வலியுறுத்தியதால் சச்சின் இரானி கோப்பையில் இருந்து விலகினார், எனினும் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் (சச்சின்) நிச்சயம் பங்கேற்பார் என்றார். வதோதராவில் புதனன்று துவங்க உள்ள இரானி கோப்பை (5 நாள்) போட்டியில், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி, ரஞ்சிக் கோப்பை பட்டம் வென்ற மும்பை அணியை எதிர்த்து விளையாடுகிறது. இப்போட்டிக்கு பின்னரே ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான பெங்களூருவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்படுகிறது. |
No comments:
Post a Comment