|
கிரிக்கெட்டிலிருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் கூறினார். மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, ஓய்வு பெறும் திட்டம் ஏதும் உள்ளதா என நிருபர் ஒருவர் கேட்டதற்கு, நீங்கள் இடம் மாறி வந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன் என சச்சின் பதிலளித்தார். அக்டோபர் 9-ம் தேதி ஆஸ்திரேலியாவுடனான தொடர் தொடங்குகிறது. அதற்குத் தகுதி பெறும் நிலையில் முழு உடல் தகுதியை டெண்டுல்கர் பெற்றுள்ளார். உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடிக்கும் வல்லமை இந்தியாவுக்கு மட்டுமே உண்டு என்பதை ஏற்கெனவே நிரூபித்துள்ளோம். ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தரும் அளவுக்கு போட்டியையும், உயர் தரத்தையுமே அந் நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்றார் சச்சின். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற தொடரில் சச்சின், திராவிட், கங்குலி, லட்சுமண் ஆகியோர் சிறப்பாக விளையாடவில்லை. அதையடுத்து இரானி கோப்பை போட்டிக்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு கங்குலி தேர்வு செய்யப்படவில்லை. டெண்டுல்கரும் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான ஒரு தினத் தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் ஆட்டங்களில் டெண்டுல்கர் இதுவரை 11877 ரன்களை எடுத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் பிரையன் லாரா 11953 ரன்களை எடுத்துள்ளார். டெஸ்ட் ஆட்டங்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற சச்சினுக்கு இன்னும் 76 ரன்களே தேவை என்பது குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment