Saturday, September 20, 2008

பீகாரில் வினோதம்: கோழி முட்டைக்குள் பாம்பு?

 
 
 
 
 
 
கோழி ஈன்ற முட்டைக்குள் பாம்புக் குட்டிகள் இருந்ததாக பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்புடன் பீதியும் ஏற்பட்டதால் அப்பகுதியில் முட்டை விலை இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாக சந்தித்ததைப் போல் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன.

பீகார் சாமஸ்திபூர் மாவட்டத்தின் அங்கர்காட் பகுதியில் சம்து கிராமத்தில் பஹதூர் ராம் என்பவரிடம் இருந்து கிஷோர் ஜக்தீஷ் குமார் சில முட்டைகளை வாங்கினார். அவற்றை சமைப்பதற்காக உடைத்த போது அதில் ஒரு முட்டையில் இருந்து 4 முதல் 5 அங்குலம் நீளமுள்ள பாம்புக் குட்டி வெளிப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து இந்த விடயத்தை பஹதூர் ராமிடம், கிஷோர் தெரிவித்ததைத் தொடர்ந்து, அன்றைய தினம் காலையில் தனது வீட்டில் வளர்த்த கோழி ஈன்ற முட்டையை பஹதூர் ராம் உடைத்துப் பார்த்தார். இதில் ஒரு முட்டையில் 2 முதல் 3 அங்குலம் நீளமுள்ள பாம்புக்குட்டி இரு‌ந்தது.

இத்தகவல் அந்தப் பகுதி முழுவதும் பரவியதைத் தொடர்ந்து கால்நடைத்துறை அதிகாரி மருத்துவர் அஜய்குமார் தலைமையிலான கால்நடை மருத்துவர்கள் குழு, பஹதூர் ராம் வீட்டிற்கு வந்து சம்பந்தப்பட்ட கோழியையும், அது ஈன்றதாக கூறப்பட்ட முட்டைகளையும் ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.

கோழி முட்டையில் இருந்து பாம்புக் குட்டிகள் வெளிப்பட்டது நம்பமுடியாத அதேசமயம் வினோதமான நிகழ்வு என மருத்துவர் அஜய்குமார் தெரிவித்தார்.

இதற்கிடையில், கோழி முட்டைக்குள் பாம்பு இருந்த செய்தி அம்மாவட்டம் முழுவதும் பரவியதால் மக்கள் பீதியடைந்துள்ளதாகவும், முட்டைகளின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளதாகவும் முட்டை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/national/0809/19/1080919069_1.htm

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails