மழை:உ.பி.யில் 44 பேர் சாவு;ஒரிசாவில் 10லட்சம் பேர் பாதிப்பு |
|
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் கடும் மழைக்கு 44 பேர் பலியானார்கள். ஒரிசாவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உத்தரப் பிரதேசத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதில் வீடு மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்ததில் சீதாபூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்களும், விளம்பரப் பலகைகளும் பெயர்ந்து விழுந்ததால் மின்சார விநியோகமும், தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரிசாவில்:ஒரிசாவில் கடும் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், மஹாநதி மற்றும் அதன் கிளை ஆறுகளில் 31 இடங்களில் உடைப்பு ஏற்பட்டதாலும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹிராகுட் அணையின் 64 மதகுகளில் 46 மதகுகள் திறக்கப்பட்டு 6.93 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மஹாநதியில் 31 இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால் கட்டக், புரி, கேந்திரபாரா,அங்குல், ஜகத்சிங்புர், ஜஜ்புர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 4 ஆயிரம் கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 8 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக இதுவரை 7பேர் இறந்துள்ளதாக அரசு கூறினாலும், 13 பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணியிலும், நிவாரணப் பணிகளிலும் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் |
No comments:
Post a Comment