Saturday, September 13, 2008

நிங் சியா ஹுய் இனத்தின் பண்பாட்டுப் பூங்கா

வட மேற்குச் சீனாவிலுள்ள நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவின் ஹுய் இன மக்கள் குழுமி வாழும் ஒரே மாநில நிலைத் தன்னாட்சிப் பிரதேசமாகும். தனிச்சிறப்பு வாய்ந்த இப்பிரதேச மக்களின் பண்பாட்டால், நிங் சியா, சீனாவில் முஸ்லிம் மக்கள் நடையுடை பாவனையை உணர்ந்து கொள்ளும் மிகச் சிறந்த இடமாக மாறியுள்ளது.
2005ம் ஆண்டு செப்டம்பர் திங்கள், அங்கு பண்பாட்டுப் பூங்கா, கட்டியமைக்கப்பட்டது. தற்போது, இது, சீனாவின் ஹுய் இனத்தின் பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்களைக் வெளிப்படுத்தும் ஒரே ஒரு இடமாகும். அதை அமைத்த நோக்கம் பற்றி, பொறுப்பாளர் Lei Runze கூறியதாவது,
நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவின் ஹுய் இன மக்கள் வாழும் இடமாகும். சீனாவின் ஹுய் இன மக்கள் தொகை, சுமார் ஒரு கோடி ஆகும். அவற்றில் 21 இலட்சத்துக்கு மேலான மக்கள், நிங் சியாவில் வாழ்ந்து வருகின்றனர். ஹுய் இனத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், இப்பிரதேசத்தின் அரசு, ஹுய் இனத்தின் பண்பாட்டுப் பூங்கா மற்றும் ஹுய் இன அருங்காட்சியகத்தைக் கட்டியமைத்துள்ளது என்றார் அவர்.
அப்பூங்கா அமைக்கப்பட்டது முதல், உள்ளூர் அரசால் அதிகமாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. Lei Runze கூறியதாவது,
சீன மக்கள் குடியரசு, பல தேசிய இனங்களைக் கொண்ட நாடாகும். 55 சிறுபான்மைத் தேசிய இனங்களில், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டில் ஹுய் இனம் மிகவும் வளர்ந்த இனங்களில் ஒன்றாகும். ஹுய் இனத்தின் பண்பாடு, இஸ்லாமியத்தின் பண்பாடும், பாரம்பரிய ஹான் மற்றும் தாங் வம்சக்காலங்களின் பண்பாடும் ஒன்றிணைந்து, உருவான புதிய வகை பண்பாடாகும். அத்தகைய பண்பாட்டுப் பூங்காவைக் கட்டியமைப்பது, காலத்தின் தேவைக்குப் பொருந்தியது. அதே வேளையில், ஹுய் இனத்தின் பண்பாட்டை அறிந்து கொள்ள விரும்பும் மக்களின் ஆர்வத்தையும் நிறைவு செய்துள்ளது என்றார் அவர்.
அவரது வழிக்காட்டலில், எமது செய்தியாளர், பண்பாட்டுப் பூங்காவிற்குள் நுழைந்தார். வாயிலுக்கு முன் சென்றவுடன், 20 ஆயிரம் பேர் அமரக் கூடிய அரங்கேற்றச் சதுக்கம் தோன்றியது. மேற்கில் நீண்ட விறாந்தையால் சூழப்பட்டதானது, சீன ஹுய் இனத்தின் பண்பாட்டுப் பூங்காவின் முக்கிய வாயிலாகும். அப்பூங்காவைக் கட்டியமைத்ததை பற்றி, அங்குள்ள பணியாளரான, ஹுய் இன Xu Wei, எமது செய்தியாளரிடம் அறிமுகப்படுத்தியதாவது,
பண்பாட்டுப் பூங்காவின் பரப்பளவு, 20 ஹெக்டராகும். இங்கு, ஹுய் இனத்தின் அருங்காட்சியகம், சடங்கு மண்டபம், ஹுய் இன மக்களின் பழக்க வழக்கங்களைக் கொண்ட கிராமம், ஹுய் இன உணவக மையம் மற்றும் ஹுய் இனத்தின் அரங்கேற்ற மையம் ஆகியவை இருக்கின்றன. இங்கு, ஹுய் இனத்தின் பண்பாடு, வரலாறு, ஆடல் பாடல்கள் மற்றும் ஹுய் இனத்தின் நடையுடை பாவனைகளை அறிந்து கொள்ளலாம். இது, சீனாவில் ஹுய் இனத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஒரே இடமாகும் என்றார் அவர்.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails