|
''கிறிஸ்தவ தேவாலங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் மதத் தீவிரவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்'' என்று கூறியுள்ள ராமதாஸ், மத்திய, மாநில அரசுகள் விழிப்புடன் இருந்து மதத் தீவிரவாதிகளின் கோபமூட்டும் நடவடிக்கைகளை தொடக்கத்திலேயே கிள்ளியெறிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதச் சார்பற்ற இந்தியாவில் சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. மத சகிப்புத் தன்மையற்ற, மத வெறியர்களால் பா.ஜ.க. ஆட்சியில் இடம்பெற்றுள்ள ஒரிசாவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் பா.ஜ.க. ஆள்கின்ற கர்நாடகத்திற்கு பரவியிருக்கிறது. இத்துடன் நிற்காமல் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பரவி கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தலைதூக்கியிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் மேலும் பரவிவிடாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பல்வேறு மாநிலங்களிலும் மதத் தீவிரவாத சக்திகளால் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை பார்க்கும்போது, கிறிஸ்தவர்களுக்கு எதிரான இந்த வன்முறை திட்டமிட்ட செயல் என்பதும், இத்தகைய தாக்குதல்களால் மத உணர்வுகளை தூண்டி அரசியல் ஆதாயம் பெற மதத் தீவிரவாதிகள் முயற்சிக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் விழிப்புடன் இருந்து மதத் தீவிரவாதிகளின் கோபமூட்டும் நடவடிக்கைகளை தொடக்கத்திலேயே கிள்ளியெறிய வேண்டும். நாட்டின் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் மதத் தீவிரவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்'' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். | |
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0809/18/1080918002_1.htm
No comments:
Post a Comment