Thursday, September 11, 2008

மெண்டிஸ், தோனி, யுவராஜுக்கு ஐ.சி.சி., விருது

 
lankasri.comஐ.சி.சி., சிறந்த ஒரு நாள் போட்டிக்கான வீரர் விருதை இந்திய கேப்டன் தோனி தட்டிச் சென்றார். "டுவென்டி-20' பிரிவில் சிறந்த வீரர் விருதை யுவராஜ் பெற்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின், இஷாந்த் சர்மாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சர்வதேச கிரிக்கெட் கவுன் சில்(ஐ.சி.சி.,), ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறது. இவ்விருதுக்கு கடந்த 2007, ஆக., 9ம் தேதி முதல் 2008, ஆக. 12ம் தேதி வரையிலான வீரர்களின் செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறந்த வீரர்களை கிளைவ் லாயிட் தலைமையிலான 5 பேர் குழு தேர்வு செய்தது.

கிரிக்கெட் ஆஸ்கார்: கிரிக்கெட் உலகின் "ஆஸ்கார்' என போற்றப்படும் இவ்விருதுக்கு இந்திய கேப்டன் தோனியின் பெயர் ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' என இரண்டு பிரிவுகளில் பரிந்துரை செய் யப்பட்டு இருந்தது. ஒரு நாள் அரங்கில் சச்சின் பெயரும் இடம் பெற்று இருந்ததால் கடும் போட்டி காணப்பட்டது.

சச்சினை முந்தினார்: இந்தச் சூழலில் நேற்று இரவு ஐ.சி.சி., விருது வழங்கும் விழா துபாயில் வண்ணமயமாக நடந்தது. இதில் ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை தோனி கைப்பற்றினார். ஒரு நாள் போட்டி ரேங்கிங் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இவர், விருதுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் 39 ஒரு நாள் போட்டிகளில் 1, 298 ரன்கள் எடுத்துள்ளார். கீப்பராக 62 விக்கெட் வீழ்ச்சிக்கு(46 கேட்ச், 16 ஸ்டம்பிங்) காரணமாக இருந்துள்ளார். இதன் அடிப்படையில் விருதை கைப்பற்றினார். ஒரு நாள் அரங்கில் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட சச்சின் இந்த ஆண்டு ஏமாற்றம் அடைந்துள்ளார்.

சிக்சர் மன்னன்:"டுவென்டி-20' பிரிவில் யுவராஜ் சிங் சாதித்தார். "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் தொடர்ந்து 6 சிக்சர்கள் விளாசிய இவர், சிறந்த "டுவென்டி-20' வீரர் விருதை கைப்பற்றினார்.

சூப்பர் மெண்டிஸ்: வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதை இலங்கையின் சுழல் நாயகன் மெண்டிஸ் பெற்றார். இப்பிரிவில் இடம் பெற்று இருந்த இந்தியாவின் இளம் இஷாந்த் சர்மா வாய்ப்பை இழந்தார்.

சந்தர்பால் அபாரம்: ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த டெஸ்ட் வீரர் விருதை தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டைன் பெற்றார். கிரிக்கெட் உணர்வை சிறப் பாக வெளிப்படுத்தியதற்கான விருதை இலங்கை அணி தொடர்ந்து இரண்டாம் முறையாக பெற்றது. சிறந்த அம்பயருக்கான விருதை ஆஸ்திரேலியாவின் சைமன் டாபெல் தொடர்ந்து 5வது முறையாக வென்றார்.

டெஸ்டில் சேவக்: ஐ.சி.சி., ஒரு நாள் போட்டிக்கான 12 பேர் அடங்கிய உலக லெவன் அணியில் சச்சின், தோனி இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் அணிக்கான 12 பேரில் இந்தியா சார்பில் சேவக் மட்டும் இடம் பெற்றுள்ளார்.

lankasri.com

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails