Tuesday, September 23, 2008

தேவாலய தாக்குதல்: கர்நாடகாவில் மத்திய குழு இன்று ஆய்வு

தேவாலய தாக்குதல்: கர்நாடகாவில் மத்திய குழு இன்று ஆய்வு
கர்நாடகாவில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தவதற்காக, மத்திய உள்துறை அமைச்சக உயர்மட்டக் குழு இன்று விரைகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் உத்தரவுபடி, உள்நாட்டு பாதுகாப்புக்கான சிறப்பு செய்லர் எம்.எல்.குமாவாத் தலைமையில் இந்தக் குழு பெங்களூர் வருகிறது.

குமாவத்துடன் இணைச் செயலர் ஏ.கே.யாதவும் இணைந்து, தலைமைச் செயலர் மற்றும் ஏனைய மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவர்.

கர்நாடகத்தில் மதமாற்றம் நடப்பதாக கூறி, கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது மங்களூர், சிக்மகளூர், உடுப்பி, தும்கூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்து கர்நாடக பாரதிய ஜனதா அரசுக்கு, மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது.

ஆயினும், கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல் நேற்று முன்தினம் பெங்களூருக்கு பரவியது.

இதையடுத்து, நேற்று காலை அமைச்சரவை அவசர கூட்டம் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்தது. இதில், கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின், பெங்களூரில் பேராயர் பெர்னார்டு மோரஸை, அவரது இல்லத்தில் முதல்வர் எடியூரப்பா சந்தித்துப் பேசினார்.

அப்போது, மாநில அரசின் நடவடிக்கைகளில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாக, பேராயர் பெர்னார்டு மோரஸ் தெரிவித்தார். அதற்கு, கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, முதல்வர் எடியூரப்பா உறுதியளித்தார்.
 
(மூலம் - வெப்துனியா)

 

 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails