தமிழகத்தில் ஆங்காங்கே கிறிஸ்தவ ஆலயங்கள் மீது கல்வீச்சு சம்பவம்
வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
கருணாநிதி எச்சரிக்கை
தமிழ்நாட்டில், கிறிஸ்தவ ஆலயங்களை தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார்.
சென்னை, செப்.27-
இந்து மத அமைப்பை சேர்ந்த லட்சுமணானந்தா சுவாமிகள் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, ஒரிசா மாநிலத்தில் கலவரம் மூண்டது.
கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்
அங்குள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டன. கடந்த வாரத்தில், கர்நாடகா மாநிலத்திலும் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பிரார்த்தனை கூடங்கள் மீது தாக்குதல் நடந்தது.
ஒரிசா, கர்நாடக மாநிலங்களை தொடர்ந்து, சமீபத்தில் தமிழ்நாட்டிலும் ஒரு சில இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டன.
கருணாநிதி எச்சரிக்கை
இந்த நிலையில், "தமிழகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்த முற்படுவோர், மத நல்லிணக்கத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவோர் மீது, தமிழக அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும்" என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
"ஒரிசா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது நடைபெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஆங்காங்கு சில கிறிஸ்தவ ஆலயங்களின் மீது கல்லெறிதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வந்துள்ளன.
மத நல்லிணக்கம்
எந்த விதமான மத மாச்சரியங்களுக்கும் இடமில்லாத வகையில் தற்போது தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது.
இதைக் கண்டு பொறுக்காத ஒருசிலர் இது போன்ற வன்முறைகள், அராஜகங்களில் யாராவது ஈடுபட்டு தமிழகத்தில் நிலவிடும் மத நல்லிணக்கத்திற்கும், மனித நேயத்துக்கும் இழுக்கினை ஏற்படுத்துகின்ற வகையில் நடந்து கொள்ள முற்படுவார்களேயானால், அதனை இந்த அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிராது.
கடும் நடவடிக்கை
மேலும் அத்தகைய செயல்களைக் கண்டிப்பாக அனுமதிக்காது என்பதோடு, அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக காவல் துறை தனது கடமை உணர்ந்து உடனடியாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்''.
இவ்வாறு கருணாநிதி கூறி உள்ளார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=440999&disdate=9/27/2008
No comments:
Post a Comment