Sunday, September 21, 2008

மத சுதந்திர சட்டத்தை திருத்தும் ஒரிஸ்ஸா அரசு


 
    

புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநில மத சுதந்திர சட்டத்தை திருத்த அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. மதமாற்றம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரும் கலவரம் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த முடிவுக்கு மாநில அரசு வந்துள்ளது.

ஒரிஸ்ஸாவின் காந்தமால் மாவட்டத்தில் வி.எச்.பியைச் சேர்ந்த சுவாமி லட்சுமாணந்தாவை நக்ஸல்கள் சுட்டுக் கொன்றனர்.

மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றும் பணியில் இவர் ஈடுபட்டிருந்த நிலையில் கொல்லப்பட்டார். இதையடுத்து கிருஸ்துவர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது.

இந் நிலையில் 1967ம் ஆண்டு இயற்றப்பட்ட மத சுதந்திர சட்டத்தை திருத்தி அதை கடுமையாக்க ஒரிஸ்ஸா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் மதமாற்றங்களுக்கு கட்டுப்பாட்டைக் கொண்டு வந்து, இதுபோன்ற மதக் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தம் கிட்டத்தட்ட மத மாற்ற தடை சட்டம் போல இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநில உள்துறைச் செயலாளர் டி.கே.மிஸ்ரா கூறுகையில், காந்தமால் வன்முறை சம்பவங்களுக்கு மதமாற்றமே முக்கிய பின்னணி காரணமாக இருந்தது. எனவே, இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத சுதந்திர சட்டம், உரிய நேரத்தில் திருத்தி அமைக்கப்படும்.

இது தொடர்பாக மத சுதந்திர சட்டத்தில் உள்ள பிரிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இச்சட்டத்தை திருத்தி அமைப்பதற்கு முன், இதை முழுமையாக ஆராய ஒரி்ஸ்ஸா அரசு முடிவு செய்துள்ளது.

இதுபோன்ற முடிவுகள், செயலர்கள் மட்டத்திலான குழுவில் விவாதித்தே இறுதி செய்யப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்னை முக்கியத்துவத்துடன் அணுகப்படும்.

மதக் கலவரங்களுக்கு இன்னொரு பிரச்னையாக, பழங்குடியினர் உரிமை நிலங்களை ஆக்கிரமிப்பதும் ஒன்றாக கருதப்படுகிறது. பழங்குடியினர் நிலத்தை ஆக்கிரமிப்பதை தடுப்பதற்கு, 1992ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிமுறைகள், 2002ம் ஆண்டு கடுமையாக்கப்பட்டாலும், அதில் பல ஓட்டைகள் அடைக்கப்படாத நிலையே தொடர்கிறது.

பழங்குடியினர் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காந்தமால் மாவட்டத்தில் 20,000க்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார் மிஸ்ரா.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails