டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததையடுத்து, பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் 725 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. இதனால், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும்படி எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.. இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளிதியோரா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் முடிவில், பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ஐந்து ரூபாயும், டீசல் ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயு, சிலிண்டர் ஒன்றுக்கு ஐம்பது ரூபாயும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளிதியோரா தெரிவித்தார். இந்த விலை உயர்வு இன்று இரவு முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விலைஉயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது மத்தியில் ஆளும், காங்கிரஸ் கூட்டணி அரசுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. |
No comments:
Post a Comment