1948-2001
காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. இந்தியா, பாகிஸ்தான் என பிரிந்த இரு நாடுகளில் எதனுடன் சேர்வது என சிந்தித்து வந்தவேளையில் பாகிஸ்தான் பதான்கள் எனும் மலையின மக்களை ஸ்ரீநகருக்கு படையெடுக்கும்படி தூண்டியது. பதான்களும் படையெடுத்து வந்தனர். கணிசமான பகுதியையும் பிடித்துக் கொண்டனர்.
இந்நிலையில் காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் இந்தியாவுக்கு ஆதரவு கேட்டு கடிதம் எழுதினார். இந்தியா படைகளை அனுப்பி ஆதரவு கொடுத்தது. அந்நிலையில் காஷ்மீரை இந்தியாவுடன் சேர்க்க அரசர் முடிவெடுக்க, அதனை ஆதரித்தார் செல்வாக்கு மிகுந்த இஸ்லாமிய தலைவர் ஷேக் அப்துல்லா. தில்லியில் இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மகாராஜா சார்பாக அப்போதைய காஷ்மீர் பிரதமர் மெஹர் சந்த் மகாஹன் கையெழுத்திட்டார். இந்திய அரசின் சார்பாக கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் கையெழுத்திட்டார்.
1953
இந்திய அரசியல் நிர்ணய சட்டம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. அதன்படி பாதுகாப்பு, நிதி, தொலைத்தொடர்பு, அயல் நாட்டு விவகாரம் போன்றவை மத்திய அரசிடம் இருக்கும். மீதமெல்லாம் காஷ்மீரிடம். அதற்கென தனி அரசியல் நிர்ணய சட்டம், கவர்னரை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வது, இந்திய உச்ச நீதிமன்றம் மட்டுமே உயர்ந்த சட்ட அமைப்பாக இருத்தல் போன்றவை. இந்த சிறப்பு அந்தஸ்திலும் இந்திய குடியரசு தலைவர்தான் உயர்ந்த அதிகாரம் படைத்தவர். மாநில அரசை அவரால் கலைக்க முடியும். இவையெல்லாம் 1950-ம் வருடம் வரை பேசி முடிக்கப்பட்டன. ஆனாலும் இரண்டு விஷயங்கள் மீதமிருந்தன. ஒன்று அடிப்படை உரிமைகள் எந்தளவிற்கு அனுமதிக்கப்பட வேண்டும், அது மாநில அரசியல் நிர்ணய சட்டத்தில் இருக்குமா? இந்திய அரசியல் நிர்ணய சட்டப்படி இருக்குமா? இரண்டு சமூக சீர்திருத்தம். ஷேக் அப்துல்லா நிலச்சீர்திருத்தங்கள், சமூக சீர்திருத்தங்கள் செய்ய விரும்பினார். மேற்கூறிய அம்சங்களில் சிக்கல்கள் ஏற்பட்டதால் அவை தடைபட்டன. நேருவும், ஷேக் அப்துல்லாவும் பேசி 1953-ல் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். எனினும், 1954-ல் ஷேக் அப்துல்லா இந்திய எதிர்ப்பு போக்கில் செல்வதாக கருதி அவரை கைது செய்ய உத்தரவிட்டார் நேரு.
1954-64
தேசிய மாநாட்டு கட்சியில் மற்றொரு தலைவரான பக்ஷி குலாம் முகம்மது பிரதமரானார். 370-வது பிரிவின்படி முதலமைச்சர் பிரதமர் என அழைக்கப்பட்டார். பக்ஷி குலாம் முகம்மது ஆட்சியை மக்களும், பிற அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. உள்ளூரில் அரசியற் குழப்பம் இருந்தது. பேருக்குத் தேர்தல்களை நடத்தி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார் பக்ஷி குலாம் முகம்மது. எனினும், இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் மீது ஊழல் புகார் தொடுக்கப்பட்டது. நிலைமை மோசமாகவே இவரது ஆட்சி கலைக்கப்பட்டது.
1964
முற்போக்கு சிந்தனை கொண்ட குலாம் முகம்மது சாதிக் பிரதமரானார். திறமையாக, நல்லாட்சியை தந்தவர் என பெயர் பெற்றார். 1964-ல் பிரதமர் நேரு ஷேக் அப்துல்லாவை வருவித்து காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார். இந்த சூழ்நிலையில் திடீரென்று நேரு மறைந்ததால் பாதியிலேயே அம்முயற்சி கைவிடப்பட்டது. 1967-வரை சாதிக் ஆட்சி நடத்தினார். அப்போது ஏற்பட்ட மதக் கலவரங்களால் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது.
1972-83
1972-ல் தேர்தல் நடத்தப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் சட்டப்பிரிவு 370-ன் கீழ் கொடுக்கப்பட்ட சலுகைகள் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பப் பெறப்பட்டன. இதனால் நேரிடையாக தேர்தல் ஆணையமே தேர்தலை நடத்தியது. ஷேக் அப்துல்லா முதல்வரானார். 1975-ல் மீண்டும் இந்திரா காந்தியுடன் ஓர் அதிகார பகிர்வு ஒப்பந்தம் செய்து கொண்டார் ஷேக் அப்துல்லா.
1983
ஷேக் அப்துல்லாவின் மறைவிற்கு பிறகு அவரது மகன் ஃபரூக் அப்துல்லா முதலமைச்சர் ஆனார். எனினும் காங்கிரஸ் கட்சி அவர் கட்சியை உடைத்து குலாம் முகம்மது ஷா என்பவரின் கீழ் புதிய ஆட்சியை அமைக்க உதவியது.
1987
காங்கிரஸ§டன் ஏற்பட்ட மோதல்களை அடுத்து ஷா ஆட்சி கவிழ்கிறது. காங்கிரஸ் ஃபரூக்குடன் இணைந்து செயல்படுகிறது. ஃபரூக் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகிறார். ஆனாலும் பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதம் தலைதூக்குகிறது. மக்களின் விருப்பங்கள் முழுமையாக நிறைவேற்றப்படாததால் தீவிரவாதிகள் செல்வாக்கு ஓங்குகிறது. மத்திய அரசு ஜக்மோகனை ஆளுநராக நியமிக்கிறது. மாநில அரசு இதை ஏற்க மறுத்து விலகிவிட்டது. மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி 1996 வரை நீடிக்கிறது.
1996-2001
96-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஃபரூக் மீண்டும் ஆட்சியமைக்கிறார். ஆட்சிக் காலம் முடிவடையும் சமயத்தில் மீண்டும் மாநில சுயாட்சி தீர்மானத்தை காஷ்மீர் சட்டசபையில் நிறைவேற்றுகிறார்.
No comments:
Post a Comment