Friday, June 20, 2008

இந்தப் படத்துக்கு கண்டிப்பா 'ஆஸ்கர்' விருது கிடைக்கும்

இந்தப் படத்துக்கு கண்டிப்பா 'ஆஸ்கர்' விருது கிடைக்கும் அப்படின்னு எல்லோரும் சொல்லுகிறதை நாம் அடிக்கடி கேட்கிறோம்.ஆனால் இந்த ஆஸ்கார் விருதை பற்றி கொஞ்சம் படிக்கலாமா?


'ஆஸ்கர்' கதை

இன்றைய உலகில் 'போட்டி' இல்லாத இடமேயில்லை என்றாலும்கூட, திறமைக்குத் தனி இடம், மரியாதை இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நாட்டிலும், பிரதேசத்திலும்.... திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு அதன் அடையாளமாக, விருதுகளும் கூட வழங்கப்பட்டுத்தான் வருகின்றன. அந்த வகையில் 'திரைப்படங்கள்' என கூறப்படும் கனவுலகத்துறையில் உலகின் முதல்தர விருதாகத் திகழ்வது 'ஆஸ்கர்' விருது.

ஆரம்பத்தில் - அமெரிக்காவின் ஹாலிவுட் பகுதிகளில் விளையாட்டாகத் தொடங்கிய இந்த விருது வழங்கும்  சம்பவம், இன்றைக்கு உலகம் முழுதும் உள்ள எல்லா நாடுகளிலும் மதிக்கப்படும், திரை உலகின் உன்னத அடையாளமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்துடன் சந்தேகத்திற்கிடமின்றி முதல் தகுதி பெற்றது என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் விருதாகவும் இது உருமாறியிருக்கிறது.

ஆஸ்கர் விருது அறிவிப்பு என்பது இன்றைக்கு இந்தியாவின் கடைக்கோடி கிராமமான 'கோட்டம்பட்டி' கோபண்ணாவிலிருந்து, வாஷிங்டனின் 'வால்ஸ் குட் மென்' வரை... எல்லாரையும் கவரும் விஷயமாக மாறி விட்டாலும் கூட..., இந்த விருதின் பின்னணி, வளர்ச்சி போன்றவற்றில் புதைந்து கிடக்கும் நிறைய விஷயங்கள் பலருக்குத் தெரியவில்லை. இதோ சில தகவல்களின் தொகுப்பு இங்கே.

'ஆஸ்கர்'-தொடக்கம்

'ஆஸ்கர்' என்பதே, இந்த விருதுக்கான பெயர் என்று இன்று மாறிப் போனலும் - இதன் நிஜ... ஆரம்பப் பெயர் - ''அகாடமி விருது'' (அகாடமி அவார்ட்) என்பதுதான்.

1927-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் ஒரு மூலையில் இருந்த திரைப்படத்துறைத் தொடர்புடையவர் பலர் சேர்ந்து அடித்த 'உருப்படியான' அரட்டையில்தான், இந்த ஜடியா உருவானது. இதற்கென அவர்களெல்லாம் சேர்ந்து, 'தி அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ஸ்' என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பு, ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களில் சிறந்தவைகளைத் தேர்ந்தெடுத்து, அந்த படத்திற்கும், அதை உருவாக்கியவர்களுக்கும் கௌரவம் செய்ய... பாராட்ட... விருது வழங்குவது எனவும் முடிவெடுத்தார்கள். அதை இந்த அமைப்பின் பெயரிலேயே 'அகாடமி அவார்ட்' எனவும் குறிப்பிட முடிவானது. இந்த அமைப்பு உரு பெற்ற வெகு விரைவிலேயே, கிட்டத்தட்ட 5000 முதல் 6000 வரையிலான திரைப்படக் கலைஞர்கள் இதில் உறுப்பினர்களாக ஆகிவிட்டனர் எனத் தெரிகிறது. ஆனாலும் அகாடமி தொடங்கியது, வெறும் 36 உறுப்பினர்களுடன்தான். அகாடமியின் முதல் தலைவர் - டக்லஸ் ஃபேர் பேங்க்ஸ் என்பவர்.

இன்றைக்கு அகாடமி உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள், இயக்குனர்கள், செயலாளர், பொருளாளர், தலைவர் என ஒரு பெரும் கூட்டமே இந்த அகாடமியின் செயல்பாட்டை, நிர்வாகத்தை, இதன் சொத்துகளை, வருமானத்தை கவனித்து வந்தாலும் - அகாடமியின் ஆரம்ப நாட்களில்..., ஏன், 1946 வரைகூட.... வாடகைக் கட்டடத்தில்தான் அகாடமி செயல்பட்டு வந்தது.

அகாடமியின் முதல் விருது 1929-ம் ஆண்டு, மே மாதம் 16-ம் தேதியன்று வழங்கப்பட்டது. முதல் முறை இந்த விருது வழங்கப்பட்டபோது, இந்த நிகழ்ச்சியை சீண்டுவாரில்லை. ஹாலிவுட் நகரத்தின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 'ப்ளாசம் ரூம்' என்ற அறையில் நடந்த விருந்து ஒன்றில் இவ்விருது வழங்கல் தொடங்கியது. விருது பெறப் போவது யார் என்பதை முன்னதாகவே முடிவு செய்த அந்நாளைய அகாடமி, இதை அன்றைய தின மாலைப் பத்திரிகைகளுக்கு செய்தியாக கொடுத்திருந்தும், அந்த முதல் விழாவில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 250 மட்டும் தானாம். அந்த நாளிலேயே இதற்கு கட்டணமாக 10 அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்ததுதான் காரணமோ, என்னமோ!

ஆனால் இரண்டாம் ஆண்டிலேயே இந்த விருதுக்கான மவுசு கூடத் தொடங்கி விட்டது. பத்திரிகைகள் இதையும் ஒரு பொருட்டாக கவனிக்கத் தொடங்கி விட்டன என்பது ஒருபுறமிருக்க, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்து வானொலி இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொகுத்து ஒரு மணிநேர நிகழ்ச்சியாக ஒலிபரப்பியது. அன்றிலிருந்து 'அகாடமி அவார்ட்' நிகழ்ச்சி அடுத்தடுத்து வானத்தை பார்த்தபடி வளர்ந்து கொண்டேதான் வருகிறதேயன்று கீழ் நோக்கவில்லை.

இடையில் பல முறை விருது வழங்கும் தினம் முன்னும், பின்னும் மாறிப் போனாலும், சில முறை அறிவிக்கப்பட்ட தேதியே கூட சில அவசரக்காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டாலும்கூட அனைவரது கவனத்தையும் கவர்ந்த முக்கிய செய்தியாக அது மாறியிருந்தது.

முதல் ஆண்டு விருது வழங்கப்பட்டபோது மொத்தம் 15 விருதுகள் கைமாறின. ஆனால் இரண்டாம் ஆண்டு, இது 7ஆக குறைந்து போனது. சிறந்த - நடிகர், நடிகை, படம், இயக்குனர், எழுத்துவடிவம், ஒளிப்பதிவு, அரங்க வடிவமைப்பு (ஆர்ட் டைரக்ஷன்) என்பன மட்டுமே ஆரம்ப நாட்களில் அகாடமி விருதுக்கான துறைகளாக இருந்தன. இவை மட்டுமின்றி சிறப்பு விருது என்று ஒன்றை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டிருந்தாலும், முதல் ஆண்டில் இது இடம் பெறவில்லை. இதனால் இரண்டாம் ஆண்டில் இரண்டு விருதுகளாக வழங்கப்பட்டன.

அச்சிறப்பு விருதுகளில் ஒன்றை, 'சர்வ சிரஞ்சீவி'யாகிவிட்ட நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினும், மற்றொன்றை வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் பெற்றன. ''சர்க்கஸ்'' என்ற படத்தைத் தயாரித்து இயக்கி, நடித்து... என பல்வேறு பணிகளில் வித்தைகள், சாகசம் செய்து காட்டியதற்காக சாப்ளினுக்கும், பேசா மடந்தையாகக் கிடந்த திரைப்படங்களைப் பேச வைக்கும் முயற்சிகள் நடந்த போது, 'தி ஜாஸ் சிங்கர்' எனும் பேசும் படத்தை துணிந்து எடுத்து வெற்றி கண்டதற்காக வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.

அதன்பிறகு திரைப்படத் தொழில் நுட்பம் இன்று எந்தெந்த திரையிலேயே வளர்ச்சியடைந்து, டால்பி...., டி.டீ.எஸ்...களைத் தாண்டி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பது தனி கதை.
 
 

ஆஸ்கர் - பெயர் வந்தது எப்படி?


'அகாடமி' தொடங்கி அதன்மூலம் விருது கொடுப்பதாக முடிவு செய்த பிறகு இந்த விருதுக்கான 'மாடல் - சிலை எப்படியிருக்கலாம்' என்ற கேள்வி எழுந்தது. படம் வரையத் தெரிந்த அகாடமி உறுப்பினர்கள் பலரும், இதற்கான மாடல் என நிறைய வரைந்து தள்ளினார்களாம். இதில் எம்.ஜி.எம் என்ற கம்பெனியின் ஆர்ட் டைரக்டர் 'செட்ரிக் ஜிப்பான்ஸ்' என்பவரும் ஒரு மாடல் வரைந்தார். அந்த மாடல் பலருக்கும் பிடித்துப் போக.... அதுவே இறுதித் தேர்வானது. டேபிள் கிளாத் ஒன்றில் ஜிப்பான்ஸ் வரைந்த மாடலைக் கொடுத்து... 'ஜார்ஜ் ஸ்டான்ஸி' என்பவரை சிலை வடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்டான்ஸி அன்று உருவாக்கிய அந்த சிலைதான், இன்றுவரை அகாடமி விருது சிலையாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில், இந்த சிலை வெண்கலத்தான சிலையாக வடிக்கப்பட்டுதான் விருதாக வழங்கப்பட்டுள்ளது.

ஒருமுறை இந்த சிலை செய்யப்பட்டு அகாடமிக்கு வந்தபோது, அப்போதைய அகாடமியின் செயல் இயக்குனர் மார்கரெட் ஹெரிக் - 'இந்த சிலை, எங்க மாமா 'ஆஸ்கர்' மாதிரியே இருக்குப்பா' என்று கிண்டலடித்துள்ளார். (கிண்டல், இவரது மாமா பற்றியதுதான்) இதனால் சிலையைக் குறிப்பிடும்போது அவர் 'ஆஸ்கர்' என்றே சொல்வது பலரையும் பாதித்து, பிடித்துப் போய்... 'அட... சொல்வதற்கும் கூட, இது எளிதாக இருக்கிறதே' என்பதால், பலரும் இதை 'ஆஸ்கர் விருது' என தப்பிதமாக குறிப்பிடப்போய்... மெல்ல...மெல்ல... 'அகாடமி விருது', 'ஆஸ்கர் விருது' ஆக பெயர் மாறிப் போனது. இன்றைக்கும் ஆஸ்கர் விருது என்றால்..., விளக்கம் ஏதுமின்றி அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் விருதின் நிஜ பெயரைச் சொன்னால் இன்று பெரும்பாலானவர்களுக்குப் புரிவதில்லை. 'எந்த அகாடமி..., எந்த விருது...' என எதிர் கேள்வி கேட்கும் நிலையே உருவாகிவிட்டது.

விருதாக வழங்கப்படும் ஆஸ்கர் சிலையின் மொத்த உயரம், பதிமூன்றரை அங்குலம், அதாவது ஒரு அடி நீளத்திற்கு சற்றே கூடுதலாக! எடையோ, எட்டரை பவுண்ட்.

இடையில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது சிலை செய்ய உலோகம் கிடைக்கவில்லை என ஆஸ்கரை, 'பிளாஸ்டர் ஆப் பாரீஸ்' என்ற - சிலை செய்யும் சுண்ணாம்பினால் செய்து தங்க முலாம் பூசியும் கொடுத்திருக்கிறார்கள். சில நேரங்களில் பிரிட்டானியம் என்ற உலோகக் கலவை சிலை செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடரும்


 

 http://www.ambalam.com/essay/oscar/oscar.html

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails