Thursday, June 26, 2008

நக்மாவும், மனமாற்றம் குறித்த சிந்தனைகளும்

 

 

Bernardo Strozzi 1581 – 1644

நடிகை நக்மா கிறிஸ்தவரானார் என்னும் செய்தி பல தினசரிகளில் முதன்மைப் படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தனது துயரமான சூழலில் பைபிள் தனக்கு ஆறுதல் அளித்ததாகவும் அதுவே தன்னை கிறிஸ்தவ மதத்துக்குள் நுழைய வைத்தது எனவும் நக்மா தெரிவித்திருக்கிறார்.

பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சூழல்களில் நிகழும் இத்தகைய மனமாற்றங்கள் முதலில் ஏற்படுத்தும் அலைக்கும், வேர் விடுதலுக்கும் இடையே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.

பலருடைய மதமாற்றம் வெறும் அடையாளங்களை மாற்றிக் கொள்வதாகவோ, ஏற்றுக் கொள்வதாகவோ இருக்கிறதே தவிர உண்மையான அர்த்தங்களைக் கண்டு கொள்வதாக பல வேளைகளில் இருப்பதில்லை.

எனவே தான் கிறிஸ்தவ மதத்தில் பிறந்து விட்டதாலேயே கிறிஸ்தவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட "மீண்டும் பிறத்தல்" எனும் கிறிஸ்தவத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு இறையில் சரணடைதல் என்பதை நம்புகின்றனர்.

குழந்தையாக இருக்கும் போது அளிக்கப்படும் திருமுழுக்கின் வழியாக கிறிஸ்தவத்தில் நுழைந்தாலும், சுய அறிவு வந்தபின் இயேசுவில் முழுமையாய் சரணடையும் முடிவை எடுப்பதே இந்த இரண்டாவது பிறப்பு.

இத்தகைய இரண்டாம் பிறப்புக்குப் பின் கிறிஸ்தவத்தை விட்டு விலகிச் செல்பவர்கள் மிக மிக மிக அபூர்வம்.

பலர் இக்கரைக்கு அக்கரை பச்சை எனும் கணக்கில் மதங்கள் மாறுகின்றனர். இப்படிப்பட்ட பொருளாதார, அரசியல், செல்வாக்கு, புகழ், பதவி ஆதாயத்துக்காய் மதம் மாறுபவர்களால் எந்த மதமும் வலுவடைவதுமில்லை, மதம் மாறுபவர்கள் வாழ்வடைவதும் இல்லை.

யார் உண்மையாய் மனம் மாறுகிறார்கள் என்பதும், யார் வெறுமனே வேடம் தரிக்கிறார்கள் என்பதும் முழுப் பூசணிக்காய் கணக்காக விரைவில் வெளியே தெரிந்து விடும்.

ஏனெனில் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் இயேசுவின் போதனை மிக மிகத் தெளிவானது

"நீங்கள் மனம் திரும்பியதை செயல்களில் காட்டுங்கள்" என்பதே அந்த போதனை.

உங்களுடைய பழைய வாழ்க்கைக்கும் புதிய வாழ்க்கைக்கும் இடையேயான வேறுபாடு நீங்கள் மதம் மாறியிருக்கிறீர்களா அல்லது வெறுமனே வேறோர் நிறுத்தத்தில் இறங்கியிருக்கிறீர்களா என்பதைச் சொல்லி விடும்.

உதாரணமாக சுயநல எண்ணங்கள் விலகியிருக்கின்றனவா, பொய் பேசுவதை விட்டு விட்டீர்களா, புகழ், பணம், இச்சை என உலக மாயைகள் விலகியிருக்கின்றனவா, பிறருக்காய் செபிக்கிறீர்களா, உங்களைக் காயப்படுத்துபவர்களை கணநேரத்தில் மன்னிக்கிறீர்களா ? இறையில் ஒன்றித்திருக்கிறீர்களா, படைப்புப் பொருட்களை ஒரு பொருட்டாக எண்ணாமல் படைத்தவரையே பற்றிக் கொள்கிறீர்களா ? இவையெல்லாம் நீங்கள் உண்மையான கிறிஸ்தவராகி இருக்கிறீர்களா என்பதை சோதிக்கும் சிற்சில சோதனைகள்.

உண்மையான மனமாற்றம் என்பது உள்ளுக்குள் உருவாகி ஆளை மாற்றியபின்பே வெளியே தெரியும். போலியான மாற்றம் ஆடைபோல புதிதாய் அணியப்பட்டு கழற்றி வீசப்படும்.

ஏனெனின், மன மாற்றம் என்பது எண்ணிக்கைகளின் இலக்கத்தைக் கூட்டுவதல்ல, தூய ஆவியானவரின் இயக்கத்தைக் காட்டுவதே,

 

http://jebam.wordpress.com/2008/05/15/nagma_christianity/

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails