Tuesday, June 24, 2008

ஐரோப்பிய கால்பந்து போட்டி: அரை இறுதியில் ஜெர்மனி- துருக்கி இன்று பலப்பரீட்சை

 

பாசெல், ஜுன்.25-

ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்தில் நடந்து வரும் 13-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி கிளைமாக்சை நெருங்கி விட்டது. இதில் இன்று (புதன்கிழமை) நடக்கும் முதலாவது அரைஇறுதியில் ஜெர்மனியும், துருக்கியும் பாசெல் நகரில் (சுவிட்சர்லாந்து) சந்திக்கின்றன.

3 முறை சாம்பியனான ஜெர்மனி லீக்கில் போலந்து, ஆஸ்திரியா ஆகிய அணிகளை வென்றது. குரோஷியாவிடம் தோற்றது. இதையடுத்து 6 புள்ளியுடன் கால்இறுதிக்கு தகுதி பெற்ற ஜெர்மனி கால்இறுதியில் போர்ச்சுக்கல்லை (3-2) வீழ்த்தியது. இதே போல் `ஏ' பிரிவில் இடம் பெற்ற துருக்கி, லீக்கில் முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கலிடம் தோல்வி அடைந்தாலும் சுவிட்சர்லாந்து, செக்குடியரசுக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்குள் நுழைந்தது. கால்இறுதியில் குரோஷியாவை பெனால்டி ஷூட்-அவுட்டில் தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது.

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் துருக்கி அரைஇறுதிக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். போராட்டம் குணம் கொண்ட துருக்கி அணிக்கு திடீர் பின்னடைவாக காயம் மற்றும் சஸ்பெண்டு பிரச்சினையில் 9 வீரர்கள் சிக்கி உள்ளனர். செக்குடியரசுக்கு எதிரான கடைசி லீக்கில் ஆடிய போது எதிரணி வீரரை தள்ளி விட்டதற்காக துருக்கி கோல் கீப்பர் வல்கன் டெமிரெல் 2 ஆட்டத்திற்கு சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்தார்.

இதன்படி இந்த ஆட்டத்திலும் அவர் விளையாட முடியாது. இதே போல் செக்குடியரசுக்கு எதிராக 2 கோல் அடித்த கேப்டன் நிகாத் காக்வெசி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். எம்ரே ஆசிக், டன்கே சன்லி, அர்தா துரான் ஆகியோர் 2 முறை மஞ்சள் அட்டை பெற்றதால், இந்த ஆட்டத்தில் ஆட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இதனால் துருக்கி சிறிது தடுமாற்றம் கண்டிருக்கிறது. முழு உடல்தகுதியுடன் 13 பேர் கொண்ட அணியை தேர்வு செய்ய துருக்கி பயிற்சியாளர் முயன்று வருகிறார். அதே சமயம் துருக்கி அணியில் விளையாடும் ஹமீத் அல்டின்டாப் மற்றும் ஹகன் பால்டா ஆகியோர் ஜெர்மனியில் பிறந்தவர்கள். சொந்த அணியை எதிர்த்து அவர்கள் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியை பொறுத்தவரை காயம் பிரச்சினை எதுவுமின்றி வலுவான அணியாக களம் இறங்குகிறது. அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

போட்டி குறித்து ஜெர்மனி கேப்டன் மைக்கேல் பல்லாக் கூறுகையில், `துருக்கி எங்களை விட சிறந்த அணி கிடையாது. ஆனால் அவர்களை கணிக்க முடியாது. எனவே எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடமாட்டோம். அவர்களும் எங்களை போன்ற குணாதிசயம் கொண்டவர்கள். துருக்கி அணி எதிர்பார்ப்பே இல்லாமல் அரைஇறுதியில் நுழைந்த அணி. அந்த அணி இழப்பதற்கு என்று எதுவும் கிடையாது. எனவே முடிந்த வரை கடும் போட்டியை அளிப்பார்கள்' என்றார்.

ஜெர்மனியும், துருக்கியும் இதுவரை 17 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 11-ல் ஜெர்மனியும், 3-ல் துருக்கியும் வென்றுள்ளன. 4 ஆட்டம் `டிரா'வாகி இருக்கிறது.

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று 2 அரைஇறுதி (25 மற்றும் 26-ந்தேதி) மற்றும் இறுதிப்போட்டி (29-ந்தேதி) தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றைய ஆட்டத்தை இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணி முதல் தூர்தர்ஷன் மற்றும் இ.எஸ்.பி.என். டெலிவிஷனில் காணலாம்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails