கோயம்பேடு மார்க்கெட்டில் குவித்துப் போட்ட கத்தரிக்காய், தேங்காய் ஸ்டைலில் கும்மிடிப்பூண்டியில் குவியல் குவியலாகக் கிடைத்துள்ள குண்டுகள், தோட்டாக்கள் தமிழகத்தில் குபீர் பீதியைக் கிளப்பி உள்ளன.`ஒருவேளை இது தீவிரவாதிகளின் ஆயுதக்களஞ்சியமாக இருக்கலாம்' என ஜெயலலிதா அவரது வழக்கமான பாணியில் இதை வைத்து அரசியல் செய்ய, ஆரம்பமாகி விட்டது அமர்க்களம். கும்மிடிப்பூண்டி சித்திரராஜ கண்டிகையைச் சுற்றியுள்ள தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக்குழு (சிப்காட்) வளாகத்தில் பதினேழு இரும்பு உருக்காலைகள் செயல்படுகின்றன.இந்த உருக்காலைகள் வெளிநாடுகளில் இருந்து பழைய இரும்புச்சாமான்களை கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்து, அவற்றை உருக்கி இரும்புப் பொருட்களைத் தயாரிக்கின்றன. இதே பகுதியில் தாசில்தார் அலுவலகமும் இலங்கை அகதிகள் முகாம்ஒன்றும் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அகதிகள் முகாமைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் அந்தப் பகுதியில் உள்ள பழைய கிணறு ஒன்றில் குளிக்கச் சென்றிருக்கிறார்கள்.அதில் ஒரு சிறுவன் துண்டுபீடி ஒன்றை அணைக்காமல் அருகில் இருந்த புதரில் தூக்கியெறிய, புதர் தீப்பிடித்து... அடுத்தநிமிடம் ஒரு வெடியோசை! அந்த படுபயங்கர வெடிச் சத்தத்தைக் கேட்டு சிறுவர்கள் அருகே சென்றபோது,மீண்டும் ஒரு வெடியோசை.அவ்வளவுதான். இரண்டு சிறுவர்கள் அதில் காயமடைய, உடனடியாக அவர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். `இலங்கை அகதிகள் முகாம் அருகே குண்டுவெடித்து விட்டது' என்ற செய்தி இதற்குள் காற்றில் பரவ, அந்த மர்மப் பொருள் வெடித்த பகுதிக்கு திருவள்ளூர் மாவட்ட உதவி ஆட்சியர் சங்கீதா, எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. நவீன் சந்திரன் ஆகியோர் வந்து சேர்ந்தனர். அந்தப் பகுதியை ஆராய்ந்தபோது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக,அங்கே குவியல் குவியலாகக் குண்டுகள், தோட்டாக்கள்,ராக்கெட் லாஞ்சர்கள்,கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் மொத்த எடை ஒரு டன்னுக்கும் மேலே. தொட்டுவிடும் தூரத்தில் இலங்கை அகதிகள் முகாம். அதனருகில் குண்டுகள், தோட்டாக்கள். இது போதாதா? உடனே இலங்கை அகதிகளுக்கும், இந்த ஆயுதக்குவியலுக்கும் முடிச்சுப் போட்டு பரபரப்பு இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தது.இது நக்ஸல் இயக்கத்தினரின்ஆயுதக்களஞ்சியம் என்ற வதந்தியும் அமளிதுமளிப்பட்டது. இந்த நிலையில்தான் மேற்படி பிரச்னையை அரசியலாக்கி, அறிக்கை விட்டு பெருமை தேடிக் கொண்டார் ஜெ. `அப்படியில்லை. கும்மிடிப்பூண்டியில் கண்டுபிடிக்கப்பட்டவை அங்குள்ள இரும்புத் தொழிற்சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பழைய இரும்புகள், அதாவது பயன்படுத்தப்பட்ட குண்டுகள்' என்று அவசர அவசரமாக அறிக்கை விட்டார் டி.ஜி.பி. ஜெயின். அதன்பிறகு அந்தப் பகுதியில் உள்ள ஏனைய பதினாறு இரும்புத் தொழிற்சாலைகளிலும் காவல்துறையினர் ஆய்வு நடத்தினர், அதில் `ஷ்ரீவிநாயகா அலாய் ஸ்டீல்' என்ற தொழிற்சாலையில் ஆய்வு நடத்தியபோது, அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய இரும்புகளில் பீரங்கிக் குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள், துப்பாக்கித் தோட்டாக்கள், ஏ.கே. 47 எந்திரத் துப்பாக்கிகளுக்கான குண்டுகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் கிணற்றில் குண்டு மற்றும் தோட்டாக்களைப் போட்டு பதுக்கி வைத்திருந்தவர்களும் இதே தொழிற்சாலைக்காரர்கள்தான் என்பது தெரிய வந்தது. அதையடுத்து, ஆலை உரிமையாளர் அசோக்குமார் ஜெயின், மேலாளர் மனோஜ்குமார் ஜெயின் மற்றும் சூப்பர்வைசர் ராகேஷ்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டியில் உண்மையில் என்னதான் நடந்தது என்பதை அறிய, அங்கு நாம் விசிட் அடித்தோம்.முதலில் சிப்காட் பகுதியில் சில தொழிற்சாலை ஊழியர்களிடம் பேசினோம். ``வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் வரும் இரும்புக்கழிவுகளை இங்குள்ள ஆலைக்காரர்கள் கொதிகலனில் இட்டு உருக்கி கம்பி மற்றும் கட்டுமானப் பணிக்குத் தேவையான இரும்பு உபகரணங்களைத் தயாரிக்கின்றனர். இப்படி வரும் பழைய இரும்புக் கழிவுகளில் பயன்படுத்தப்பட்ட பழைய குண்டுகள், தோட்டாக்களும் இருப்பதுண்டு. தோட்டா மற்றும் பீரங்கிக் குண்டுகளில் இருந்து அதிகஅளவில் தரமான இரும்பை உருக்கி எடுக்க முடியும் என்பதால், இதுபோல குண்டுகள் வந்தால் தொழிற்சாலை உரிமையாளர்கள் குஷியாகிவிடுவார்கள். இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு தொழிற்சாலையில் இப்படி இறக்குமதி செய்யப்பட்ட குண்டுகளை உருக்கும் போது உஷ்ணம் தாங்காமல் அவை வெடித்துச் சிதறின. அந்த விபத்தில் தொழிலாளர்கள் சிலர் இறந்தும் போனார்கள். அந்த அசம்பாவிதத்துக்குப் பின், `இதுபோல குண்டுகள், தோட்டாக்கள் இரும்புக்கழிவுடன் சேர்ந்து வந்தால் அவற்றை எங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும்' என்று போலீஸார் அறிவித்தனர். அதோடு சரி. அதன்பிறகு இது தொடர்பாக போலீஸார் பெரிய அளவில் எந்த முயற்சியும்மேற்கொள்ளவில்லை. இதன்பிறகு பழைய இரும்பில் கலந்து வரும் அபாயகரமான வெடிபொருட்களை என்ன செய்வது என்று தெரியாமல்தொழிற்சாலை உரிமையாளர்கள் திணற ஆரம்பித்தார்கள். அப்படிப்பட்ட குண்டுகளையும் தோட்டாக்களையும் சிலர் பாழடைந்த கிணறுகள், புதர்களில் மறைக்க ஆரம்பித்தார்கள். அந்தநிலையில்தான் இப்படி ஒரு பிரச்னை வெடித்திருக்கிறது'' என்று ஆதங்கப்பட்டனர் அவர்கள். சர்ச்சையில் சிக்கிய ஷ்ரீவிநாயகா அலாய் ஸ்டீல்ஸ் தொழிற்சாலைக்குள் நாம் நமது புகைப்படக்காரருடன் நுழைந்தோம்.போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிக் குண்டுகள், கண்ணி வெடிகள், தோட்டாக்கள் ஆகியவை அங்கு ஆயுதக்கிடங்கு ஸ்டைலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தத் தொழிற்சாலை ஊழியர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். ``இறக்குமதியாகும் இரும்புகளுடன் இதுபோன்ற குண்டுகள், தோட்டாக்கள் வந்துவிட்டால் அவற்றை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் எந்தத் தெளிவான நடைமுறையும் இங்கு இல்லை. யாருக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்றுதான் அவற்றை கிணற்றில் கொட்டினோம்(!) ஆனால், சிறுவர்களின் விளையாட்டால் அசம்பாவிதம் அரங்கேறிவிட்டது. எங்கள் தொழிற்சாலையில் பீரங்கிக் குண்டுகள், தோட்டாக்களைப் பறிமுதல் செய்து எங்களை ஏதோ நக்ஸல் போல போலீஸார் சித்திரிக்கிறார்கள். ஆனால், இங்கே எந்தத் தொழிற்சாலையில்தான் இது போன்ற பழைய குண்டுகள், தோட்டாக்கள் இல்லை? இங்குள்ள மற்ற பதினாறு தொழிற்சாலைகளிலும் போலீஸார் சோதனை நடத்தினால் இதைவிடப் பயங்கர ஆயுதங்கள் வெளிச்சத்துக்கு வரும்'' என்று நம் புருவங்களை உயரச் செய்தனர் அந்த ஊழியர்கள். இதனிடையே, தடய அறிவியல் துறை இயக்குனர் விஜயகுமார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, பறிமுதலான கண்ணிவெடி மற்றும் குண்டுகளின் மாதிரியையும் அதில் ஒட்டியிருந்த வெடி மருந்துகளையும் சேகரித்துள்ளனர். சிப்காட் காவல் நிலையத்தில் டி.எஸ்.பி.யுடன் ஆலோசனையில் இருந்த தடய அறிவியல் இயக்குநர் விஜயகுமாரிடம் பேசினோம். ``பொதுவாக, பீரங்கி, துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் குண்டுகள், தோட்டாக்களில் வெடி மருந்துகள் கலந்திருக்கும். அவற்றை பீரங்கி, துப்பாக்கியில் வைத்து ஒருமுறை சுட்டால் அதிலுள்ள வெடிமருந்து சாம்பலாகிவிடும். அதன்பின் ஆபத்தில்லை. அவை பழைய இரும்புப் பொருட்களாகக் கருதப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் சிலசமயம், அவற்றில் வெடிக்காத குண்டுகள், தோட்டாக்களும் கலந்து வருவதால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புண்டு. இப்போது நாங்கள் சேகரித்துள்ளது வெடிமருந்தா? அல்லது வெறும் மண்ணா? என்பது ஆய்வில்தான் தெரியவரும். இதுபோன்ற பயங்கர ஆயுதங்களை உருக்கி இரும்புப் பொருட்களைச் செய்யவே கூடாது. காவல்துறையிடம் தான் ஒப்படைக்க வேண்டும். இங்கே கிடைத்திருக்கும் கண்ணிவெடிகள், பீரங்கி ஷெல்கள் தற்போது புழக்கத்தில் இல்லாத பழைய ரகங்கள். இவை 1917 முதல் 1967 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். அதில் உள்ள கழுகு சின்னத்தை வைத்துப் பார்க்கும்போது இரண்டாம் உலகப்போரின்போது இவை அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் போலத் தோன்றுகின்றன. இதில் ஏதாவது சதி இருக்கிறதா? என விசாரிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்தது'' என்று முடித்துக் கொண்டார் அவர். தென்னை மரத்தில் தேள்கொட்ட பனை மரத்துக்கு நெறி கட்டிய கதையாக இந்தக் காயலான் கடை சம்பவத்துக்குத் துளியும் சம்பந்தமில்லாத இலங்கைத் தமிழ்அகதிகள் இப்போது பீதியில் இருப்பதுதான் வேதனை. படங்கள்: ஞானமணி ஸீ வே. வெற்றிவேல் |
No comments:
Post a Comment