தமிழன் கொல்லப்பட்ட நாள் தான் தீபாவளி-கருணாநிதி |
கடலூர்: தீபாவளி தமிழன் கொல்லப்பட்ட நாள். அந்த நாளை மறந்து விட்டு, தமிழை ஏற்றி வைக்கும் நாளான பொங்கலை கொண்டாடுங்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார். கடலூரில் நடந்த திமுக மகளிரணி மாநாட்டில் அவர் பேசுகையில், தை மாதம் வரப் போகும் பொங்கலை எப்படி கொண்டாடப் போகிறோம். மகர சங்கராந்தி என்றா?. சங்கராந்தி தேவி 25 கைகளோடும், 45 கால்களோடும், கோரப் பற்களோடு வருவார் என்று பஞ்சாங்கத்திலே போடுவார்களே அந்தப் படத்தைக்காட்டி, இவர்தான் மகர சங்கராந்தி, இவரை வணங்குவோம் என்று நாமும் வணங்கி, நம்முடைய வீட்டிலே இருக்கின்ற குழந்தைகளையும் வணங்கச் சொல்லப் போகிறோமா?. அப்படி என்றால் அது பொங்கல் அல்ல, தமிழனுடைய விழா அல்ல. ஆரியனுடைய மகர சங்கராந்தி. எப்படி வந்தது மகர சங்கராந்தி?. நம்முடைய ஆண்டுக் கணக்கு என்ன?. வெள்ளைக்காரனுக்கு இருக்கிறது ஆண்டுக் கணக்கு, ஜெர்மனிக்கு, பிரெஞ்சுக்கு, தெலுங்குக்கு, கேரளாவுக்கு ஆண்டுக் கணக்கு இருக்கிறது. தமிழா உனக்கு ஆண்டுக் கணக்கே இல்லை என்றால் இதை விட கேவலம் இருக்க முடியுமா?. எப்படி பிறந்து நமக்கு ஆண்டு?. மகா விஷ்ணுவுக்கும் நாரதருக்கும் பிறந்த 60 பிள்ளைகள் அல்லவா நமக்கு ஆண்டாக கூறப்பட்டுள்ளது. சேரன் செங்குட்டுவன் பரம்பரையில் வந்த தமிழன் நீதி கேட்ட கண்ணகியினுடைய சாபத்திற்கு அடிபணிந்த உயிர் துறந்த தமிழன் நெடுஞ்செழிய பாண்டியனுடைய பரம்பரையில் வந்த தமிழன் இன்றைக்கும் இன்னும் அந்த வருடப் பிறப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய ஆண்டு தை முதல் நாள்தான். வள்ளுவன் பிறந்த ஆண்டு தமிழன் ஆண்டு கணக்காக குறிப்பிட்டார்கள். பெண்களான நீங்கள் இந்த செய்தியை எல்லோருக்கும் சொல்லி, வருகிற பொங்கல் திருநாளை தமிழன் திருநாளாக, திராவிட திருநாளாக கொண்டாடுங்கள். எப்படி தீபாவளிக்கு புது ஆடை உடுத்திக் கொண்டாடுகிறீர்களோ அது தமிழன் கொல்லப்பட்ட நாள். அந்த நாளை மறந்து விட்டு, இந்த நாள் தமிழை ஏற்றி வைக்கும் நாள். தமிழனுக்குப் பெருமை சேர்க்கும் நாள். அந்த சுயமரியாதை உணர்வோடு தன்மான உணர்வோடு பொங்கலைக் கொண்டாட புறப்படுங்கள் என்றார் கருணாநிதி. |
No comments:
Post a Comment