விடுதலைப்புலிகள் தலைவர்
பிரபாகரனை பிடிக்க இலங்கை ராணுவம் தீவிரம்
பதுங்கு குழியை குறிவைத்து தாக்குதல்
கொழும்பு, ஜுன்.13-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பிடிக்க இலங்கை ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. முல்லைத்தீவில் அவர் பதுங்கி உள்ள இடத்தை சுற்றிலும் ராணுவம் சூழ்ந்துள்ளது.
30 ஆண்டு போராட்டம்
இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இனப்போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. தரைவழி தாக்குதல் மட்டும் அல்லாமல் கடல் மற்றும் வான் வழியாகவும் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பிடிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. முக்கிய தலைவர்கள் மறைந்து வாழும் பதுங்கு குழிகள் மீது விமானம் மூலமாக குண்டுகள் வீசப்பட்டன. அதில் அரசியல் பிரிவு தலைவர் தமிழ் செல்வன் உள்பட சில முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
ராணுவ தளபதி பேட்டி
இது தவிர, விமானப்படை தாக்குதலில் பிரபாகரனும் பலத்த காயம் அடைந்து விட்டதாகவும் அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்களை பார்க்கும்போது ஆறு மாதத்துக்கு மேல் அவர் உயிருடன் இருக்க மாட்டார் என்றும் கடந்த ஆண்டு ராணுவம் தெரிவித்தது. அதை விடுதலைப்புலிகள் கடுமையாக மறுத்தனர்.
அதை நிரூபிக்கும் விதமாக பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் பிரபாகரன் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களை விடுதலைப்புலிகள் வெளியிட்டனர். இந்த நிலையில் பிரபாகரனை பிடிப்பதற்காக அவர் மறைந்து வாழ்வதாக கருதப்படும் முல்லைத்தீவில் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து இலங்கை பத்திரிகைக்கு ராணுவ தளபதி சரத் பொன்சேகரா கூறியதாவது:-
முக்கிய குறிக்கோள்
இலங்கை ராணுவத்தின் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் மீது விடுதலைப்புலிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது பிரபாகரன் பதுங்கி இருக்கும் முல்லைத்தீவில் பல்வேறு திசைகளில் இருந்தும் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
பதுங்கு குழியில் மறைந்து வாழும் பிரபாகரனை பிடிப்பதே ராணுவத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். இரண்டு அதிரடிப்படை பிரிவினர் உட்பட நான்கு படைப்பிரிவினர் ஏற்கனவே தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
21 கி.மீட்டர்
முல்லைத்தீவை அடைவதற்கு முன் முதற்கட்டமாக, விடுதலைப்புலிகளின் 1-4 வளாகத்தை ராணுவம் நெருங்கி விட்டது. முல்லைத்தீவில் சில 100 சதுர கிலோ மீட்டர் சுற்றளவிலான பரப்பளவு, விடுதலைப்புலிகளிடம் இருக்கிறது. அதை ராணுவம் மீட்கும்.
ராணுவத்தின் இறுதி லட்சியத்தை அடைய மேலும் 21 கி.மீ., தூரத்துக்கு முன்னேற வேண்டும். எங்கள் லட்சியம் உயர்வானது. எனவே, இறுதி வெற்றி எங்களுக்கே கிடைக்கும்.
இவ்வாறு பொன்சேகரா கூறினார்.
அமைதி பேச்சுக்கு தடை
இதற்கிடையே அமைதி பேச்சு நடத்துவதற்கு முன்வந்த நார்வே குழுவுக்கு இலங்கை அரசு தடை விதித்து உள்ளது. அமைதி பேச்சு தொடர்பாக நார்வே சிறப்பு தூதர் ஜான் ஹன்சனை நேரில் சந்திக்க விடுதலைப்புலிகளின் அமைதி செயலக பொதுச்செயலாளர் ஜீவரத்தினம் புலித்தேவன் விரும்பினார்.
இதை ஏற்ற நார்வே குழுவினர், புலித்தேவனை சந்திக்க அனுமதிக்குமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு செல்வதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்து விட்டது.
இதுகுறித்து இலங்கை அமைதி செயலக ஒருங்கிணைப்பாளர் ரஜிவா விஜேசிங்கே கூறுகையில், `விடுதலைப்புலிகளை சந்திப்பதற்கு ஜான் ஹன்சன் விரும்பினார். ஆனால், நாங்கள் மறுத்து விட்டோம். தெளிவான ஜனநாயக அரசியல் தீர்வு இல்லாமல் விடுதலை புலிகளை சந்தித்து பேசுவதில் என்ன பயன் இருக்கிறது' என்றார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=418637&disdate=6/13/2008
No comments:
Post a Comment