Tuesday, June 24, 2008

இயேசு உயிர்த்திருக்க வாய்ப்பே இல்லை என “The Lost Tomb of Jesus”

இயேசு உயிர்த்திருக்க வாய்ப்பே இல்லை என "The Lost Tomb of Jesus" எனும் தனது டாக்குமெண்டரியில் சிம்கா ஜாக்கோபோவிசி என்பவர் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமன்றி .........


தன்னுடைய ஆவணப் படத்தில் அவர் இயேசுவின் கல்லறையைக் கண்டதாகவும் அதில் "யேசேப்பின் மகனாகிய இயேசு" என எழுதப்ட்டிருந்ததாகவும், அது எருசலேமிற்கு அருகில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமன்றி இயேசுவின் D.N.A கூட தனக்குத் தெரியும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் ஆய்வாளர்கள் இதை முழுமையாக மறுதலிக்க, சிலர் உண்மையாய் இருக்கக் கூடும் என விவாதிக்கின்றனர்.

இயேசு என்பதும் யோசேப்பு என்பதும் தெருவுக்குப் பத்து எனுமளவுக்கு அக்காலத்தில் மிக மிக அதிகம் புழங்கியவை என ஒரு சாரார் ஆதாரங்களோடு வாதிட, யோசேப்பின் மகனான இயேசு என்பது இயேசுவைக் குறிக்கலாம் என சிலர் வாதிடுகின்றனர்.

எப்படியோ, இயேசுவின் டி.என்.ஏ வை நிரூபிக்க அவர்கள் விண்ணகம் சென்று இயேசுவிடம் விண்ணப்பிக்க வேண்டி வரலாம்.

அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இத்தகைய ஆராய்ச்சிகள் எதை வலியுறுத்துகின்றன ?

"உயிர்த்தவரை ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள் ?" என்றார் உயிர்த்த இயேசு. ஆனால் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் தினம் ஒரு தகவலை அள்ளி விட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

இவர்கள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் ஒவ்வொன்றும் காலப்போக்கில் இல்லை என்றாகிக் கொண்டே வருவதே இத்தகைய ஆராய்ச்சிகள் எத்தனை வலிமையானவை என்பதன் சான்றுகள். உதாரணம் ஆதாமின் பல் !

இயேசு உயிர்த்துவிட்டார் என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படை.

இயேசு உயிர்த்துவிட்டார் என்பதற்கு அவருடைய அப்போஸ்தலர்களின் வாழ்க்கையை விட ஆழமான ஆதாரம் நமக்குத் தேவையில்லை.

இயேசு இறந்தவுடன் பயந்து போய் அறைகளின் தாழிட்டுக் கொண்ட சீடர்கள், இயேசு உயிர்க்காமல் இருந்திருந்தால் தங்கள் பழைய தொழிலுக்கே திரும்பிப் போயிருப்பார்கள்.

உண்மையைச் சொல்லப்போனால், அவர்களில் சிலர் மீன் பிடிக்கவும் சென்று விட்டனர். இயேசு அவர்களுக்கும் காட்சி கொடுத்தார். அதன் பின்னர் தான் அவர்கள் இறை பணிக்குத் திரும்பினார்கள்.!!!

இயேசுவின் சீடர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அதைப் போன்ற கோரமான, கொடூரமான, மரணத்தை வரலாற்றில் யாரும் பெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்பது புலனாகும்.

ஒரு உதாரணம், ஒருவர் உயிரோடு தோல் உரிக்கப்பட்டு, சிலுவையில் தலைகீழாய் அறையப்பட்டு கொல்லப்பட்டார்.

இயேசுவின் அப்போஸ்தலர்கள் அனைவருக்குமே அந்தந்த காலகட்டத்தைச் சேர்ந்த எதிரிகள் ஒரு கடைசி வாய்ப்பை வழங்கினர். இயேசுவை மறுதலித்துவிட்டு உயிர் பிழைத்துப் போ ! என்பதே அது. அதை அனைவரும் நிராகரித்தனர். இயேசுவின் உயிர்ப்பின் அனுபவம் கிடைக்காமல் இருந்திருந்தால் ஏன் அவர்கள் இயேசுவை மறுதலிக்க மறுக்க வேண்டும் ? இத்தனைக்கும் இயேசு பிடிபட்டபோது பின்னங்கால் பிடறியில் பட ஓடியவர்கள் அவர்கள் !!!

இயேசுவின் அப்போஸ்தலர் பணியில் தேர்வு செய்யும் ஊழியர்கள் இயேசுவின் உயிர்ப்பைப் பார்த்தவர்களாகவே இருப்பதை பல இடங்களில் காண முடிகிறது. சுமார் இரண்டாயிரம் பேர் இயேசு உயிர்த்ததைப் பார்த்ததாக விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர்.

இயேசுவின் வாழ்க்கை மனுக்குலத்தின் மீது அழுத்தமாய் எழுதப்பட்ட ஒரு காவியம் போல, அதன் ஒவ்வோர் பக்கத்திலும் வாழ்வின் பாதைகள் புனிதத்துவமாய் செதுக்கப்பட்டுள்ளன. ]
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails