Thursday, June 19, 2008

பல்கலைகழகம் பெயரில் போலி வெப்சைட்?

 
 

நெல்லை பல்கலைக்கழக `வெப்சைட்' பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யிருக்கிறது. `சட்டத்திற்குப் புறம்பாய் போலி முகவரி கொடுத்து பல் கலைக்கழக வெப்சைட்டை உருவாக்கிய கில்லாடி யார்?' என்பதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் சங்கம் துணைவேந்தரிடம் மனு கொடுக்கவே, விவகாரம் பற்றியெரியத் தொடங்கியிருக்கிறது.

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கென இரண்டு வெப்சைட்டுகள் இருக்கின்றன. முன்னாள் துணைவேந்தர் சிந்தியா பாண்டியன் காலத்தில்தான் பல்கலைக்கழகத்திற்கென்று புதிய வெப்சைட் உருவாக்கப்பட்டது. அண்மையில் சில பேராசிரியர்கள் பல்கலைக் கழகத்தின் வெப்சைட்டுகளைப் பார்க்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், இரண்டு வெப்சைட்டுகளுமே ஓப்பன் ஆகவில்லை. இதனால் அதிர்ந்து போன பேராசிரியர்கள் உடனடியாய் பல்கலைக்கழக வெப்சைட்டுகளுக்கு என்ன ஆயிற்று என்பதைத் தெரிந்துகொள்வதற்காக `இன்ரிஜிஸ்ட்ரி' என்கிற வெப்சைட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள். இந்த இன்ரிஜிஸ்ட்ரி வெப்சைட்டில் உலகம் முழுதும் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கும் வெப்சைட்டுகள், அதை ரிஜிஸ்டர் செய்தது யார்?  என்ற விவரங்களை அக்குவேறு, ஆணிவேறாகத் தெரிந்து கொள்ளலாம்.

எனவே, அந்த வெப்சைட்டைத் திறந்து பார்த்த பேராசிரியர்களுக்கு பயங்கர அதிர்ச்சி. அதில் பல போலி தகவல்கள் இடம் பெற்றிருந்ததே இதற்குக் காரணம். இது குறித்து சில பேராசிரியர்களிடம் பேசினோம். "பல்கலைக்கழகத்தின் `எம்.எஸ்.யு.ஏ.சி.இன்' என்கிற வெப்சைட் கடந்த 2.2.08-ம் தேதியோடு நின்று போயிருக்கிறது. அதாவது, சிந்தியா பாண்டியன் ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெப்சைட் குளோஸ் செய்யப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் இந்த வெப்சைட் 4.12.09-ம் தேதி வரை இயங்க அனுமதி பெற்றிருக்கிறது. எனவேதான் இதில் ஏதோ சதி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு உடனடியாய் இன்ரிஜிஸ்ட்ரி வெப்சைட்டில் நமது பல்கலைக் கழக வெப்சைட் பற்றிய தகவல்களை அலசி ஆராய்ந்தோம். அப்போதுதான் மேலும் சில பகீர் தகவல்கள் கிடைத்தன. அதாவது, `எம்.எஸ்.யு.ஏ.சி.இன்' வெப்சைட்டைப் பதிவு செய்தவரின் இமெயில் முகவரியாக `எஸ்சிதுரை@யாகூ.காம்' என்றும், அதை நிர்வகிப்பவர் எஸ்.சின்னதுரை, தொலைபேசி எண் என்று பல்கலைக் கழகத் தொலைபேசி எண் இல்லாமல் வேறு தொலைபேசி எண்ணும்  குறிப்பிடப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகத்தில் சின்னதுரை என்று யாருமே இல்லை. எனவே இது ஒரு போலி முகவரி. போலி முகவரி கொடுத்து பல்கலைக் கழகத்தின் பெயரில் வெப்சைட் ஓப்பன் பண்ணியது யார், எதற்காக இப்படியொரு காரியத்தைச் செய்தார் என்பது புரியவில்லை. பல்கலைக் கழகத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு முதலாளி பதிவாளர்தான். பல்கலைக்கழகத்தின் எல்லா சொத்துக்கள், வாகனங்களுமே பதிவாளர் பெயரில்தான் இருக்க வேண்டும் என்பது விதி. அப்படியிருக்கும் போது, பதிவாளர் பெயரை விடுத்து தனியார் பெயரில் பல்கலைக் கழக வெப்சைட்டை ஓப்பன் பண்ணியது யாரென்று  எங்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.

அதே மாதிரி `எம்.எஸ்.யுனிவர்சிட்டி.ஏசி.இன்' என்ற இன்னொரு வெப்சைட்டும் பதிவாளர் பெயரில் இல்லை. அதன் நிர்வாகி என்று கிருஷ்ணன் நல்லபெருமாள் என்று பேராசிரியர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வெப்சைட்டும் வரும் 10.11.08-ம் தேதி வரை இயங்க அனுமதி பெற்றிருக்கும் நிலையில், கடந்த 5.12.07-ம் தேதியோடு நிறுத்தப்பட்டிருக்கிறது.

 எங்களைப் பொறுத்தவரை இந்த இரண்டு வெப்சைட்டுகளும் காலாவதியான மாதிரி தெரியவில்லை. யாரோ சிலர் மட்டும் ரகசிய குறியீடுகளைப் பயன்படுத்தி இயக்கி வருகிறார்கள். எனவே, பல்கலைக் கழக வெப்சைட்டுகள் பப்ளிக் வெப்சைட்டாக இல்லாமல் இன்டர்னல் வெப்சைட்டாகச் செயல்படுகிறதோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. தீவிரவாதிகள்தான் இப்படி தங்கள் வெப்சைட்டுகளைப் பயன்படுத்துவார்கள்'' என்றவர்களிடம் `இப்படி சீக்ரெட்டாய் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன?' என்று கேட்டோம்.

 "பல்கலைக்கழகத்துக்கு வெளிநாட்டு நிதிகள் பெறப்பட்ட விஷயம் புதிய துணை வேந்தருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று யாரோ சிலர் திட்டமிட்டுச் செயல்படுத்துற சதிதான் இது. அண்மையில் கூட பல்கலைக்கழகத்திற்கு ஒன்றரைக் கோடி ரூபாய் வந்ததில் பதினைந்து லட்சத்துக்குத்தான் கணக்கு சொல்லப் பட்டிருக்கிறது. இது துணைவேந்தர் சபாபதி மோகனுக்குத் தெரிந்தால் பிரச்னையாகிவிடுமே என்று பயப்படுகிறவர்கள்தான் இத்தகைய காரியத்தில் ஈடுபடுகிறார்கள்'' என்றார்கள்.

இந்தப் பிரச்னையை பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம், துணைவேந்தர் சபாபதி மோகனிடமே நேரில் புகார் செய்திருக்கிறது. பேராசிரியர்கள் சங்கச் செயலாளர் சாமுவேல் ஆசீர்ராஜிடம் பேசினோம். "பல்கலைக்கழகத்திற்கு மறைமுகமாகச் செயல்படுகிற வெப்சைட் எதற்கு?  என்பதே எங்கள் கேள்வி. தவிர, பதிவாளர் பெயரில் வெப்சைட்டைப் பதிவு     பண்ணாதது மாபெரும் தவறு. எனவே இது பற்றி துணைவேந்தரிடம் புகார் கொடுத்திருக்கிறோம். அவர் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்தே எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை அமையும்'' என்றார் சுருக்கமாய். 

பேராசிரியர்களின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு துணைவேந்தர் சபாபதி மோகன் என்ன பதில் சொல்கிறார்? அவரிடமே கேட்டோம். "என்னிடமும் இந்தப் புகார் வந்திருக்கிறது. பல்கலைக் கழகத்திற்கென மூன்று வெப்சைட்டுகள் இருக்கின்றன. பேராசிரியர்களும் தனியாக வெப்சைட்டுகளைப் போட்டிருக்கிறார்கள். இப்போது புதிதாக மா.சு. என்கிற பெயரில் புதிய வெப்சைட்டை பதிவாளர் பெயரில் போடச் சொல்லியிருக்கிறேன். வெளிநாட்டு நிதியெல்லாம் கண்டிப்பாக பதிவாளர் பெயருக்குத்தான் வரும். தனி நபர் பெயரில் வராது. இதெல்லாம்
பேராசிரியர்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட பகையின் காரணமாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் என்று  நினைக்கிறேன். என்றாலும் புகாரை நான் அலட்சியப்படுத்தப் போவதில்லை'' என்றார் பொறுப்புடன்.           ஸீ

ஸீ ஏ.டி.சாமி

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails