பிளீஸ்...மிஸ்டர் போலீஸ் கமிஷனர், காணாமல் போன என் சட்டை எங்கே? குடிகாரர் நடத்திய கூத்து
கோபம் ஒரு பக்கம் வந்தாலும், மறுபக்கம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒரு காமெடி காட்சி பின் வருமாறு:-
திசையன்விளையை சேர்ந்த கோவில்ராஜ் மகன் செல்லத்துரை (வயது40). நெல்லை டவுணில் உள்ள லாரி சர்வீஸ் ஒன்றில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை பணி முடிந்ததும் நேராக "டாஸ்மாக்" சென்று ஒரு "குவார்ட்டரை" உள்ளே தள்ளினார். போதையில் லேசாக "லம்பி"யபடியே அங்கிருந்து கிளம்பி கொக்கிரகுளம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு வந்தார்.
கரையோரத்தில் தனது சட்டையை கழற்றி வைத்து விட்டு குளிக்கச் சென்றார். சுமார் அரை மணி நேரம் நன்றாக குளித்துவிட்டு கரைக்கு வந்த அவருக்கு ஒரு "ஷாக்" காத்திருந்தது. சினிமாவில் வருகிற மாதிரி அவரது மேல் சட்டையை யாரோ எடுத்து சென்றுவிட்டார்கள்.
டேய் எவன்டா என் சட்டையை எடுத்தது? என்று தள்ளாடியபடியே அருகில் இருந்த போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு போனார்.
"வாசலில் நின்ற காவலர் நீங்க யாரு? என்ன வேணும்? என்று கேட்டார்".
நான் இம்மீடியட்டா கமிஷனரை பார்க்கணும். என் சட்டை காணாம போச்சு. அத கண்டு புடிச்சு தரணும். முடியுமா? முடியாதா? என்றார் செல்லத்துரை.
காவலர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் செல்லத்துரை கேட்காததால் மேலும் சில போலீசார் சேர்ந்து அவரை "அலேக்"காக தூக்கிக் கொண்டு வந்து நடுரோட்டில் விட்டனர்.
ஆனால் செல்லத்துரை விடுவதாக இல்லை. ஒரு கை பார்த்து விட முடிவு செய்தார்.
"என்னய்யா நாடு இது? ஒரு சட்டையை கண்டு புடிச்சு தர முடியல. இவங்கள்லாம் பெரிய கொள்ளையை எப்படி கண்டுபுடிக்க போறாங்கே?"
"என் சட்டையில் 125 ரூபா இருந்துச்சு. ஒரு கட்டு பீடியும், தீப்பெட்டியும் கூட காணாம போச்சு... டேய் எவண்டா எடுத்தது?" என்றபடியே மீண்டும் கமிஷனர் அலுவலகத்துக்குள் புகுந்தார்.
கடுப்பாகி போன போலீசார் அவரை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து போட்டனர்.
"கமிஷனரை பத்தி நான் கலெக்டர்கிட்ட உட்கார்ந்து பேசப்போறேன்" என்றபடி செல்லத்துரை அருகில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்தார்.
அங்கு கலெக்டர் இல்லை என்றதும் அருகில் இருந்த டி.ஆர்.ஓ. அறைக்குள் புகுந்தார்.
செல்லத்துரையின் நிலைமையை புரிந்த அவர்கள் "சார்.. உங்க புகாரை மனுவா எழுதிக்குடுங்க" என்றனர்.
"ஆங்... இதுதான் ரைட்" என்றபடியே ஒரு பேப்பரும், பேனாவும் கேட்டு அருகில் இருந்த வினாயகர் கோவில் முன்பாக உட்கார்ந்து தனது காணாமல் போன சட்டை பற்றிய விபரங்களை எழுதி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.
"இன்னும் ஒரு வாரத்தில உங்க சட்டை எப்படியும் கிடைச்சுடும்" என்று அவரை ஊழியர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க... செல்லத்துரை "அடுத்த வாரம் நான் வர்றேன்" என்றபடி கிளம்பி போயிருக்கிறார்.
source:maalamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment