மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிவேம்பு எனும் கிராமத்தில் நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் (10.11.2009) மாலை 4.00 மணியளவில் ஓர் அதிசயம் இடம்பெற்றுள்ளது எனவும் அம்மன் பிள்ளை ரூபத்தில் வந்து விளையாடி விட்டு பின்னர் நாக பாம்பாக மாறி, அரைவாசி வால், உள் நுழைந்தும், மீதி உள் நுழையாமலும் ஒரு பாம்புச் சிலையாக மாறி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. முதலில் நாம் அப்பகுதி மக்களை விசாரித்தபோது இது குறித்து அவர்கள் அறியவில்லை எனத் தெரிவித்தனர். பின்னர் இணையத்தளச் செய்தியை வாசித்துவிட்டு பலர் தமது உறவினர்களை தொடர்புகொண்டு கேட்டதற்கமைவாகவே பலர் அவ்விடத்திற்குச் சென்று பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட நாக பாம்பின் சிலை அங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது எவ்வாறு அங்கு வந்தது என்று யாருக்கும் தெரியாது எனவும் கூறப்படுகிறது. சில இணையத்தளங்கள் கற்பனையின் உச்சத்திற்கே போய், கல்லான பாம்பிற்கு இதயத்துடிப்பும் கொஞ்ச நேரம் இருந்ததாக புலுடா விட்டுள்ளது. சமீபத்தில் 2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட கடல் கன்னி போன்ற உருவமுடைய மீன் ஒன்றையும் கிழக்கு மாகாண மீனவர்கள் பிடித்தார்கள் என்ற பெரும் பொய்யான செய்திகளை பரப்பி இருந்தனர் என்பது யாவரும் அறிந்ததே. அச் செய்தி பொய்யானது எனச் சுட்டிக்காட்டியபோது, அதனை உடனே அகற்றிவிட்டனர். தமிழர்களின் காதில் பூ சுத்த நினைக்கும் இது போன்ற இணையங்கள் தற்போது செய்திகள் ஏதுமின்றி அலைவதால், ஏதாவது ஒரு செய்தியை பரபரப்பாக்க முற்படுகின்றன. அத்துடன் அவர்கள் பரப்பிய அப்பொய்யான செய்திக்கு இதுவரை தமிழர்களிடம் மன்னிப்பும் கோரவில்லை.
ஆக்கபூர்வமான எவ்வளவோ செய்திகள் இருக்கின்றன, வரும் மாவீரர் தினம் பற்றி ஒரு கட்டுரை எழுதலாம், இறந்த மாவீரருக்கு ஒரு கவிதைப் போட்டி நடத்தலாம், இல்லையேல் தமிழீழ சுய நிர்ணய உரிமை பற்றி எழுதலாம், இதை விடுத்து, கிழக்கில் அதிசயம் நடப்பதாக மக்கள் மத்தியில் ஏன் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும், கருணாவிடம் கையூட்டம் எதுவும் பெற்றுவிட்டதா சில இணையங்கள்?. ஏன் பிரதேசவாதத்தை இங்கு புகுத்தவேண்டும்? புலம்பெயர் தமிழர்கள் ஒரு போராட்டப் பாதையில் செல்லும் போது, பிரதேசவாதத்தை தோற்றுவித்து வீண் குழப்பங்களை தோற்றுவிக்கிறது சில இணையங்கள்.
சமீபத்தில் சரத் பொன்சேகா அமெரிக்கா சென்றபோது, அவரைக் காட்டிக்கொடுத்த துரோகச் செயலைச் செய்தவர் ஒரு சிங்கள இனத்தவர் என்ற பொருட்பட ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது ஒரு இணையம். அதாவது சரத் பொன்சேகாவை அமெரிக்கா விசாரணை செய்யப்போகிறது என்றால் அது நல்ல செயல்தானே... அவரை காட்டிக் கொடுப்பது ஏன் துரோகம்? அது சிங்கள ஆதரவாளர்களுக்கு துரோகமாக இருக்கலாம், தமிழர்களுக்கு ஏன் துரோகமாகும்... இதன் பொருள் என்ன, தமிழர்களின் மத்தியில் இவ் வகையான இணையங்கள் எதைச் சொல்ல வருகின்றது, அவர்கள் நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தவேண்டும்.
முருகனால் பணமூடை கிடைத்த சம்பவம், கடவுள் தோன்றிய சம்பவம், கடல்கன்னி சம்பவம், தற்போது பிள்ளை பாம்பான சம்பவம் என அனைத்தையும் கிழக்கில் நடக்கிறது என்று பொய்கூறும் இணையங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என நாம் விவாதிக்கவில்லை. கடவுள் இல்லை என நாம் கூறவும் இல்லை. நமக்கு மிஞ்சிய சக்தி ஒன்று இருக்குமாயின், இந்த பூமியில் மாவடிவேம்பு எனும் கிராமத்தில் ஒரு சிறு பிள்ளையாக வந்து விளையாடிவிட்டு பின்னர் பெரியவர்களை கண்ட உடன் பாம்பாக மாறவேண்டிய அவசியம் என்ன? இச் செயல் மூலம் கடவுள் நமக்கு என்ன சொல்ல வருகிறார். இறைவனின் ஒவ்வொரு திரு விளையாடலிலும் ஒரு அர்த்தம் இருக்கும், அது ஒரு வரலாறாகவோ காவியமாகவோ, அல்லது ஒரு கெட்டதை அழிக்கும் நோக்கமாகவோ இருக்கும், ஆனால் இங்கு நடந்த சம்பவம் எதனை நமக்கு உணர்த்துகிறது? கடவுள் சிறு பிள்ளைகளுடன் விளையாடுவார் என்றா? அது தான் ஞானசம்பந்தர் விடயத்தில் நடந்துவிட்டதே...
கடவுளாக இருந்தாலும் இப்படி ஒரு சிறுபிள்ளைத்தனமாக விளையாடுவாரா கடவுள்.. இதைத்தவிர அவருக்கு வேறு ஒன்றும் வேலை இல்லையா? சமயமும் கடவுள் நம்பிக்கையும் மனிதரை மேம்படுத்தும், நல்ல மனிதராக வாழவைக்கும். அதனை பயன்படுத்தி திருப்பதிகோவில் போல சொத்துகளைச் சேர்க்கிறார்கள் சிலர். அதனைப் பயன்படுத்தி போலிச் சாமியாராகி பணம் சம்பாதிக்கின்றனர் சிலர், அதற்கு மேலே ஒரு படி போய் தம்மையே கடவுள் தமக்கே பாலபிஷேகம் செய்ய வேண்டும் என டென்மார்க்கில் சிலர் அலைகிறார்கள்... அதனைப் போல அந்த வழியை சில இணையத்தளங்களும் கைகளில் எடுத்துள்ளது. ஆக்க பூர்வமான செய்திகளை வெளியிட்டு இக்கட்டான சூழ் நிலையில் உள்ள எம் தமிழீழ மக்களின் போராட்டங்களுக்கு உரம்சேர்க்க நினைக்காமல், பணம் சேர்க்க நினைக்கும் இது போன்ற இணையத்தளங்களை இனம் கண்டு நாம் தவிர்க்கவேண்டும்.
தமிழன் காதில் இதுபோன்ற இணையங்கள் பூ சுத்தப் பார்க்கின்றதை நாம் அனுமதிக்கலாமா ?
source:athirvu
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment