Thursday, November 26, 2009

மாவீரர் தினம் – இலக்கு என்ன?


 

Maaveerarஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் மறக்க முடியாத நாட்களுள் ஒன்றான மாவீரர் தினம் இம்முறை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப் படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளால் மாவீரர் தினம் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக கடந்த வருடம் வரை இடம்பெற்றுவந்த தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை இல்லாத மாவீரர் தினமாகவும் இதுவே அமையப் போகின்றது. அது மட்டுமன்றி, விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களிடையே நிலவும் கருத்து பேதங்கள் தெளிவாகத் தென்படக் கூடிய ஒரு சூழல் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பும் ஒரு சில வட்டாரங்களில் உள்ளது.

* உலகில் இதுவரை தோன்றிய விடுதலை அமைப்புக்களுள் மிகவும் கட்டுக்கோப்பான இயக்கம் எனப் பெருமை பெற்ற அமைப்பு விடுதலைப் புலிகள். கொண்ட கொள்கையில் உறுதி, செய்நேர்த்தி, சமரசமற்ற விசுவாசம் என எதிரிகளால் கூடப் பாரட்டப்பட்ட பண்புகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் அவர்கள்.

மே 19 இல் முள்ளிவாய்க்காலில் நடந்த அனர்த்தத்தின் பின்னர் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் சம்பவங்கள் இன்று விடுதலைப் புலிகள் என்ற அமைப்பொன்று இருக்கின்றதா எனக் கேள்வி கேட்கும் அளவில் உள்ளது.

இன்றைய நிலையில் விடுதலைப் புலிகள் எனத் தம்மைப் பிரகடனப் படுத்துவோரிடையே ஒத்த கருத்து இல்லாமை தெளிவாகப் புலப்படத் தொடங்கியுள்ளது. கட்டுக் கோப்பான இயக்கம் எனப் பெயரெடுத்த அமைப்புக்கா இத்தகைய சீரழிவு என்ற கவலை ஒருபுறமிருக்க யாரை ஆதரிப்பது என்ற குழப்பமும் மக்கள் மத்தியில் உருவாகத் தொடங்கியுள்ளது.

ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலையை வென்றெடுக்க ஆயுதமேந்திய இயக்கம், தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவை உலக அரங்கில் ஸ்தாபித்த இயக்கம், இன்று பொது இலக்கிலிருந்து விலகி பல பாதைகளூடாகப் பயணிக்கப் புறப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகின்றது.

* இத்தகைய சீரழிவு நிலைக்கு யார் பொறுப்பேற்பது?

* இதனைச் சீர்திருத்தி பொது வேலைத் திட்டத்தின் கீழ் அனைவரையும் ஒன்றிணைய வைப்பது சாத்தியமா? அதற்காக ஏதாவது செய்ய முடியுமா?

* மாவீரர் தினம் என்பது, தமிழீழக் கொள்கைக்காக தம்முயுரை ஈகம் செய்த உத்தமர்களை நினைவு கூர்வதற்காக அனுட்டிக்கப்படுவது. இந்த நாளிலே, அனைத்து மக்களும் தமது அன்றாட அலுவல்களை ஒறுத்து, ஓரிடத்தில் ஒன்று கூடி, விதையாகிப் போன அந்த ஜீவன்களை மனக்கண்ணில் நிறுத்தி உணர்வால் ஒன்றுபட்டுப் போவது வழக்கமானது.

துரதிர்ஸ்ட வசமாக இம்முறை தாயக மக்களால் மாவீரர் தினத்தை அனுட்டிக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், புலம்பெயர் நாடுகளிலேயே மாவீரர் தினத்தைச் சிறப்பாக அனுட்டிக்க வேண்டிய தேவை உள்ளது.

* மாவீரர் தினத்தில் அஞ்சலி செய்வது மட்டுமன்றி அடுத்த வருட வேலைத்திட்டம் தொடர்பாக அறிவிக்கப்படுவதும் வழமையானது. வாதப் பிரதிவாதங்களை மறந்து பெருமளவு மக்கள் ஓரிடத்தில் குழுமும் நிலையில், அடுத்த கட்ட வேலைத் திட்டம்; தொடர்பில் தெளிவான அறிவிப்பொன்று வெளியிடப்பட வேண்டும் என்பதே தாயக விடுதலையை நேசிக்கும் அனைவரதும் எதிர்பார்ப்பு.

இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் பலமானது இதுவரை விடுதலைப் புலிகளின் கைகளிலேயே இருந்து வந்தது. அது தொடர்ந்தும் தாயக விடுதலையை நேசிக்கும் சக்திகளின் கரங்களிலேயே தங்கியிருப்பதை உறுதி செய்வது தலையாய கடமையாகும். அது தவறான கரங்களுக்குப் போய்ச் சேர்ந்து விடுவதை அனுமதிக்க முடியாது.

இன்று எம்முன்னே உள்ள தெரிவுகள் மிகச் சொற்பமானவையே. தாயக இலட்சியத்தை நெஞ்சில் ஏந்தி தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு நாம் மனப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்த விரும்பினால், அதற்குச் சிறந்த மார்க்கம் அவர்கள் எந்த இலட்சியத்துக்காக உயிர் விட்டார்களோ அந்த இலட்சியத்தை நிறைவேற்றி வைக்கப் பாடுபடுவதே. அந்த இலட்சியத்தை அடைவதறகுக் குந்தகமாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு வேலைத்திட்டமும் மாவீரர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகவே பார்க்கப்படும்.

சண் தவராஜா



source:tamilspy
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails