Saturday, November 14, 2009

சரத் பொன்சேகா கையளித்த கடிதத்தில் இராணுவப் புரட்ச்சி பற்றி கண்டனம்

 

கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத்பொன்சேகா தான் ஓய்வுபெறுவதாக அறிவித்து எழுதிய கடிதத்தில், தாம் ராணுவ சதிப்புரட்சியை ஆரம்பித்து விடக்கூடுமென்று ஜனாதிபதிக்கு தவறான தகவல்கொடுத்து அவர் தவறாக வழிநடத்தப்பட்டதாலேயே தாம் பதவி மாற்றம் செய்யப்பட்டு, அதிகாரங்கள் அற்ற பதவியில் நியமிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் ஜனாதிபதிக்கு தம்மீது நம்பிக்கை அற்று, தாம் ஓரங்கட்டப்பட்டமையும் தமது பதவி விலகலுக்கான முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார் சரத். இந்தக் கடிதமானது ஏ.எஃப்.பி செய்திச் சேவையில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசிடம் உதவி கேட்ட செயலானது, பயங்கரவாதக் குழுவொன்றை தோற்கடிக்கும் ஆற்றலுள்ள தொழில்சார் நிபுணத்துவம் வாய்ந்த திறமையான அமைப்பு என்று இலங்கை இராணுவம் ஈட்டியிருந்த புகழுக்கு சேறு பூசுவது போல அமைந்துள்ளதாக சரத்தின் கடிதத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் போரில் தேசத்துக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை தேடித்தந்த ராணுவத்தின் மீது சந்தேகம் கொண்டது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும், அப்படி ஒரு புரட்சி நடக்கலாம் என்பதால் ஒக்ரோபர் 15 ஆம் திகதி இந்திய அரசை உஷார் படுத்திய மஹிந்த, இந்திய படையினரை உஷார் நிலையில் வைத்திருக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் சரத் பொன்சேகா எழுதியுள்ளார்.

யுத்தத்தில் வெற்றிபெற்ற பின்னரும் சமாதானத்தை வென்றெடுக்கும் ஆற்றலின்றி அரசாங்கம் இருக்கின்றதென்ற குற்றச்சாட்டுடன் ஊழல் மோசடி, வீண்விரயங்கள் உட்பட பல்வேறு பின்னடைவுகள் தொடர்பாகவும் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்திருக்கிறார். ஊடக சுதந்திரத்தையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் ஜனாதிபதி தடுத்து வைத்துள்ளதாகவும் சரத் பொன்சேகா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

தனது தலைமைத்துவத்தில் கீழ் யுத்தத்தில் வெற்றியடைந்திருக்கின்ற போதும் அரசாங்கம் இன்னமும் சமாதானத்தை வென்றெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ள சரத், தமிழ் மக்களின் மனதை வென்றெடுக்க அரசிடம் தெளிவான கொள்கை கிடையாதென்றும் இதனால் இப்போது கிடைத்துள்ள வெற்றி நிச்சயமாக அழிந்துவிடும் என்றும் மீண்டும் ஒரு கிளர்ச்சி எதிர்காலத்தில் ஏற்பட வழிசமைத்துவிடுமென்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு யுத்தத்தில் இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை அங்கேயே தொடர்ந்து வைத்திருப்பதற்கும் அவர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

இராணுவத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு வைபவம் வரை தான் இராணுவத் தளபதி பதவியிலிருக்க நான் விரும்பியிருந்ததாகவும் கூறிய சரத், ஆனால் அதற்கு முன்னரே தம்மை அதிகாரம் இல்லாத உயர் பதவிக்கு மாற்றப்பட்டதையும் அக்கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். சதிப்புரட்சி தொடர்பான அச்சமானது பாதுகாப்பு வட்டாரங்கள் மத்தியில் நன்கு தெரிந்த விடயமாக இருந்ததாகவும் இலங்கைக்கு ராணுவ சதிப்புரட்சி இடம்பெற்ற வரலாறு இல்லை என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், 1960 முற்பகுதிகளில் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டு முறியடிக்கப்பட்டது


source:athirvu


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails