Sunday, November 22, 2009

ஆவணநூலாகும் ஈழத்தமிழினப் படுகொலைகள்

 

ஈழத்தமிழர்கள்மீது 1956ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு மேமாதம் வரையில், சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்ட்ட படுகொலைகளின் தகவல் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட 'தமிழினப் படுகொலைகள்' என்ற ஆவண நூல் மிகவிரைவில் வெளிவர உள்ளது.

கிளிநொச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வந்த 'வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம்' (North East Secretariat on Human Rights) தன்னியல்பாகவும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களுடன் இணைந்தும் இத்தகவல் தரவுகளை சேகரித்து ஆவணமாக்கியுள்ளது.

ஈழத்தமிழர் மீதான படுகொலைகளில் மிக மோசமான படுகொலைகளின் தொடக்கமான 1956ம் ஆண்டு இங்கினியாகலைப் படுகொலையிலிருந்து 2008ம் ஆண்டு இறுதிவரை சேகரிப்பட்ட விபரங்கள் இந்நூலில் பதிவாக்கப் பட்டுள்ளன.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் 1956 முதல் 2009 ஏப்ரல் வரையில் சுமார் 200க்கும் அதிகமான படுகொலைகள் நடந்தேறின. அவற்றுடன் 2009ம் ஆண்டு மேமாதம் இறுதிக்கட்டம் வரையான தரவுகள் சேகரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டு வருகிறன என்பதும் குறிப்பித்தக்கது.

மேலும் இந்நூலில் இறந்தவர்கள் யார், யார், காயமடைந்தவர்களின் பெயர்கள், எந்த ஊரை சேர்ந்தவர்கள், 14 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் எத்தனை பேர், படுகொலை நடந்த இடம், தேதி ஆகியவற்றுடன் படுகொலை நிகழ்ந்த இடங்களின் வரை படங்களும், படுகொலையில் சிக்குண்டவர்களின் ஒளிப்படங்களும் முடிந்தவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆவணப்புத்தகத்திற்கான முன்னுரையை அமெரிக்காவில் ஈழத்தமிழர்களின் மனித உரிமை மற்றும் விடுதலைக்காக செயற்படும் திருமதி. எலின் சாடார் எழுத உள்ளார். புத்தகத்தின் அட்டை வடிவமைப்பினை, ஈழத்து ஓவியர் நந்தா கந்தசாமி மேற்கொள்கிறார்.

ஏறத்தாழ 350க்கும் மேற்பட்ட பக்கங்களில் தயாராகும் இந்நூல், வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் முக்கிய பொறுப்பாளர்களால் திருத்தம் செய்யப்பட்டு, தமிழ், ஆங்கிலம், பிரன்சு, ஜெர்மன், சிங்களம் மற்றும் இந்தி ஆகிய ஆறு மொழிகளில் வெளிவர உள்ளன.

வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்திடமிருந்து உரிமம் பெற்றுள்ள மனிதம் அமைப்பு மற்றும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்நூலை வெளியிடுகின்றன.

மொழிமாற்ற பணிகளும் நூலாக்க பணிகளும் சீரான வேகத்துடன் நடைபெற்றுவருவதாக வெளியீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.


source:puthinappalakai


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails