Saturday, November 28, 2009
தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு, காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது இங்கிலாந்து எதிர்ப்பு
லண்டன், நவ.28- தமிழர்களை கொன்று குவித்ததன் மூலம் மனித உரிமைகளை மீறிய இலங்கை அரசு, காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். 53 நாடுகள் அமைப்பு இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் ஒன்று சேர்ந்து தங்களின் பொதுநலன்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்புக்கு காமன்வெல்த் என்று பெயர். இந்த அமைப்பில் 53 நாடுகள் உள்ளன. ஆண்டுதோறும் இந்த அமைப்பு ஒவ்வொரு நாட்டிலும் மாநாடு நடத்துவது வழக்கம். அப்போது அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு இந்த மாநாடு டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டில் நடந்தது. அடுத்த ஆண்டு இந்த மாநாட்டை எங்கு நடத்துவது என்பது பற்றிய ஆலோசனையும் நடந்தது. இலங்கை அரசாங்கம் கோரிக்கை அப்போது அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டும் என்று அந்த நாடு கேட்டுக்கொண்டது. இதற்கு இங்கிலாந்து நாட்டு பிரதமர் கார்டன் பிரவுன் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மற்ற தலைவர்களுடன் பேச்சு நடத்துவார் என்றும், இந்த பிரச்சினையில் இங்கிலாந்து உறுதியாக இருக்கிறது என்றும் இங்கிலாந்து அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் முள்வேலிக்குள் உள்ள முகாம்களில் எந்த வசதியும் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இது போன்ற மனித உரிமையை மீறிய செயல்களில் ஈடுபட்டுள்ள நாட்டுக்கு கவுரவம் அளிக்கும் விதத்தில் காமன்வெல்த் மாநாடு நடத்த அனுமதி அளிக்க முடியாது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். மனித உரிமைகளை மதிக்கும் நாட்டில் காமன்வெல்த் நெறிமுறைகளை பிரதிபலிக்கும்படியும் சட்டத்தின்படி ஆட்சி நடத்தும், மனித உரிமைகளை மதிக்கும் ஒரு நாட்டில் தான் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று இங்கிலாந்து விரும்புகிறது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை நடந்து கொண்ட விதம் குறித்து ஏற்கனவே இங்கிலாந்து அரசாங்கம் விமர்சித்து உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment