ரெய்ச்சூர் : கர்நாடகாவில் இன்டர்நெட் வசதியே இல்லாத கிராமத்தின் பெயர் கூகுள் என்ற ஆச்சரியமான விஷயம் தெரிய வந்துள்ளது. பிரபல இணைய தள சேவை நிறுவனத்தின் பெயரும் இதுதான் என்பது அந்த கிராமத்தினருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.
பெங்களூரில் இருந்து 510 கி.மீ. தொலைவில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ளது கூகுள் கிராமம். இன்டர்நெட் வசதியே இல்லாத இந்த குக்கிராமத்தின் மக்கள்தொகை 1,000. கிருஷ்ணா நதிக் கரையில் உள்ள முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள கிராமம் இது.
அங்கு உலகின் முன்னணி இணைய தள சேவை நிறுவனமான கூகுள் பெயரைச் சொன்னால் யாருக்கும் தெரியவில்லை. அது எங்கள் கிராமத்தின் பெயர் என்று பதில் அளிக்கின்றனர்.
இதுபற்றி பசவராஜப்ப கவுடா என்ற விவசாயி கூறுகையில், எங்கள் கிராமத்தின் பெயரில் யாரோ இணைய தள கம்பெனி தொடங்கியிருப்பதாக பேத்தி சொல்லி கேள்விப்பட்டேன் என்றார். இதனால், எங்கள் கிராமத்துக்கு பெருமை என்றார் அவர். ஆனால், இந்த அளவுக்கு கூட மற்றவர்களுக்கு கூகுள் இணைய தளம் பற்றித் தெரியவில்லை. ஆனால், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் மவுன்டைன் வியூவில் உள்ள உலகின் நம்பர் ஒன் இணைய தள சேவை நிறுவனத்துக்கு கூகுள் என்று பெயர் வர காரணம், கர்நாடக கிராமமல்ல என்பது நிச்சயம். எனினும், கிராமத்துக்கு கூகுள் என்ற பெயர் வரக் காரணம் இருக்கிறது.
பழங்காலத்தில் சன்யாசி அல்லமா பிரபு என்பவர் பசவ கல்யாண் என்ற இடத்தில் இருந்து ஆந்திராவின் ஸ்ரீசைலம் நோக்கி செல்லும்போது இந்த கிராமத்தில் தங்கினாராம். அவர் தங்கிய குகைக்கு காவி கல்லு என்று பெயரிடப்பட்டது. நாளடைவில் அது கண்டபடி மருவி கூகல்லு என்று ஆகி விட்டதாம். அதையும் இப்போது சுருக்கி கூகுள் என்று கூறுகின்றனர். எனினும், கிராமத்தில் எங்கும் ஆங்கிலத்தில் கூகுள் இல்லை. ஆங்கிலம் கூடாது என்று மக்கள் போராடியதால், அரசு அலுவலக பெயர் பலகைகளில் கூட கன்னட மொழியில் மட்டுமே கூகுள் இருக்கிறது
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment