கடந்த சில மாதங்களில் வவுனியா தடுப்பு முகாம்களில் பணியாற்றுகின்ற இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் பல கற்பழிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தது 14, 15, 16 வயதான மூன்று தமிழ்ச் சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதாக வவுனியா நீதிபதி முன்னால் ஒக்டோபரில் கூறியுள்ளனர். பல கற்பழிப்புகள் தடுப்பு முகாம்களின் வலயம் 2 மற்றும் வலயம் 3 ஆகியவற்றில் நடந்தாலும் வவுனியா மருத்துவமனையில் வைத்து 14 வயதான மனநிலை குன்றிய சிறுமி ஒருவரையும் ராணுவம் கற்பழித்துள்ள விடயம் தெரிய வந்துள்ளதாக தமிழ்நெட் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகள் இயக்கத்தில் இருந்ததாக கூறப்பட்ட 17 வயதான சிறுமி ஒருவரை புலனாய்வு பிரிவினர் கற்பழித்துள்ளதோடு, அச்சிறுமியை புலிகளை அடைத்து வைத்துள்ள சிறைக்கு அனுப்புவோம் எனவும் மிரட்டியுள்ளனர். பின்னர் அச்சிறுமி தடுப்பு முகாமுக்கு அனுப்பட்டார். அந்த தடுப்பு முகாம்களில் உள்ள 17 மற்றும் 19 வயதான சிறுமிகளும் ராணுவ அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த ஜூலை மாதத்தில் காயப்பட்ட பெண்கள் பதவியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்த பெண்களை சிங்கள ராணுவத்தினர் பார்க்க வேண்டும் என்பதற்காக சிங்க தாதியர் அப்பெண்களை நிர்வாணமாக்கி ஹோஸ் பைப்புகளைப் பயன்படுத்தி குளிப்பாட்டியதாக நேரில் கண்ட சாட்சியின் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக தமிழ்நெட் கூறியுள்ளது.
தமது கணவன்மாரை ராணுவம் எங்கே தடுத்து வைத்துள்ளார்கள் எனத் தெரியாமல் இன்னல் பட்டுக்கொண்டிருந்த பல பெண்களை மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டிருந்த உயர் பணியாளர் ஒருவர் தகாத முறையில் பயன்படுத்தியதாகவும் பல தகவல்கள் கூறுகின்றன. தமிழ்நெட்டுக்கு சான்றுகள் அளித்த ஒருவர் கூறும்போது "சிங்கள ராணுவத்தின் ஆதரவுடன் சில தமிழர்கள் கற்பழிப்புச் செயல்களில் ஈடுபட்டதை அறிந்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டேன்" எனக் கூறியுள்ளார்.
சர்வதேச மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டவர்கள் கற்பழித்ததாக தமக்கு மூன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அச்செயற்பாட்டாளர் கூறியுள்ளார்.
மே மாதத்தில் தடுப்பு முகாமுக்கு அருகே கண்டெடுக்கப்பட்ட மூன்று தமிழ்ப்பெண்களின் உடல்கள் வவுனியா மருத்துவமனையில் கையளிக்கப்பட்டன. அந்த உடல்களில் கடித்ததற்கான காயங்களும், பாலியல் துன்புறுத்தலுக்கான அறிகுறிகளும் இருந்ததாக சாட்சிகள் கூறியுள்ளனர்.
அண்மையில் கற்பழிப்புகளை ராணுவம் ஒரு போர்த்தந்திரமாக பயன்படுத்துவதாக ஹிலாரி கிளின்ரன் கூறியபோது, இலங்கை பிரதமர் அவர்மீது தனிப்பட்ட முறையில் எதிர்க்கருத்துக்கள் சில கூறியிருந்தமை நினைவிருக்கலாம்.
இது கொழும்பின் கடந்த கால செயற்பாடு அல்ல. லட்சக்கணக்கான தமிழர்களை ராணுவத்தில் பிடியில் வைக்க அனுமதித்துள்ளதால் சர்வதேச சமூகத்தாலும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள ஒரு தொடர் குற்றச்செயல் எனக் கூறினார் கற்பழிப்புகள் குறித்த செய்திகளைச் சேகரித்துவரும் தமிழர் ஒருவர்.
இந்த கற்பழிப்புகள் தடுப்பு முகாம்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சிறிய ராணுவ முகாம்களை அமைப்பதன்மூலம் இதை மேலும் விஸ்தரித்து வருகிறது அரசாங்கம். முறைப்பாடுகள் கொடுத்த தமிழர்களுக்குக் கூட நீதிகிடைக்க ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சர்வதேச சமூகமும் சரி, ஐ.நா உம் சரி பேசாமல் இருப்பதாலேயே ஈழத் தமிழர்கள் அவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.
எனவே தான், சான்றுகள் நிரூபிக்கப்பட்டால் சரியான நடவடிக்கை எடுத்து சர்வதேச சமூகமானது தமது நற்பெயரை நிலைநாட்டுமா என மனிதாபிமானப் பணியாளர்கள் சர்வதேச சமூகத்திடமே சவால் விடுகிறார்கள்.
source:athirvu
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment