Wednesday, November 25, 2009

சோக பூமியில் துரோக அரசியல்:சீன அடிமை Vs அமெரிக்க பொம்மை!

 

'போரில் தோற்றவர்களைவிட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்' என்பது புத்தனின் வாக்கு! தனது வலது பக்கத்தில் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவையும் இடது பக்கத்தில் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் தனது தம்பியுமான கோத்தபயவையும் வைத்துக்கொண்டு, ஈழத்தில் இரக்கமற்ற ரத்தக் கொடுமையை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தாவின் அரசியல் ஆளுமை காரணமா... ஃபொன்சேகாவின் ராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்!

மே 18-ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றாகமுடித்து விட்டதாக நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷே அறிவித்த அன்றே, இந்தப் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. ஃபொன்சேகாவைத் திருப்திப்படுத்த நான்கு நட்சத்திரங்களைக்கொண்ட ஜெனரல் பதவி தரப்பட்டது. மகிந்தாவுக்கு இணையாக ஃபொன்சேகாவும்சிங்களர் களால் கொண்டாடப்பட்டார். பத்திரிகைகள் அவரை வானளாவப் புகழ்ந்தன. இதுமகிந்தா வுக்குச் சகிக்கவில்லை. ஃபொன்சேகாவுக்கு நெருக்கமான ஏழு பத்திரிகையாளர்கள் தனியாக அழைக்கப்பட்டு, மிரட்டி அனுப்பப் பட்ட தகவல்தான் முதல் ஆரம்பம். ராணுவத்தளபதி யாக இருந்தால், அவர் தரைப் படை வீரர்களை மொத்தமாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்வைத்து எதையும் செய்துவிடுவார் என்பதால், 'முப்படை களுக்கும் சேர்ந்த பொறுப்பு' தரப்பட்டது. முக்கிய மானதாக அது சொல்லப்பட்டாலும் எந்த அதிகாரமும் இல்லாத பதவி அது. முறைப்படி டிசம்பர் 18-ம் தேதி ஃபொன்சேகா ஓய்வு பெற வேண்டும். அதற்குப் பின்னால் விளையாட்டுத் துறையின் ஆலோசகராக இருக்கலாம் என்று மகிந்தா போட்ட உத்தரவு, தன்னைக் கிண்டல் செய்யும் காரியம் என்று நினைத்து, ஃபொன்சேகா அவமானத்தில் நெளிந்தார்.

பாதுகாப்பு கூட்டுப் படைத் தலைமை அதிகாரி அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த ஃபொன்சேகாவுக்கு எந்தக் கோப்புகளும் அனுப்பவில்லை. பழைய கோதா வில் பல விஷயங்களைக் கேட்டு அனுப்பினார் அவர். 'முப்படைகளும் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்பார்கள். அப்போது விளக்கம் அளித் தால் போதுமானது' என்று விளக்கம் தந்தார்கள். அடுத்த நாள் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய கோத்த பய, 'ஃபொன்சேகாவுக்கு அதிக அதிகாரம் வழங்கி னால், அது ஆபத்தானதாக இருக்கும்' என்றார். ஃபொன்சேகாவுக்கு நெருக்கமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இப்படித் தொடர்ச்சியாக வந்த எந்தத் தகவலும்ஃபொன் சேகாவுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. இந்த மோதலைக் கொழும்பு பத்திரிகைகள் எழுதியது. இதை உற்றுக் கவனித்த எதிர்க்கட்சிகள், ஃபொன்சேகாவை அரசியலுக்கு அழைத்து வந்தால் நல்லது என்று நினைத்தன. 'யூனிஃபார்மைக் கழற்றிவைத்துவிட்டு யாரும் அரசியலுக்கு வரலாம்' என்று வஞ்சகத்தை மறைத்துவைத்துமகிந்தா வும் பச்சைக் கொடி காட்டினார்.

இந்த நிலையில்தான், ஃபொன்சேகாவின் அமெரிக்கப் பயணம் மர்மமான முறையில் நடந்தது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களைச் சர்வதேச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுபோகும் காரியத்தில் மும்முரமாக இருக்கும் நாடு அமெரிக்கா. அதற்கான ஆதாரங்களைத் திரட்டும் வேலையில் அது இறங்கியுள்ளது. அந்த நாட்டின் க்ரீன் கார்டுவைத்திருக்கும் ஃபொன்சேகா, இலங்கையின் ராணுவத் தளபதியாக இருப்பது அதற்கு வசதியாகப்போனது. அவரை அங்கு வரவழைத்து விசாரித்து வாக்குமூலம் வாங்க முடிவெடுத்தார்கள்.

'நாட்டுக்கு விரோதமான எதையும் நான் செய்ய மாட்டேன்' என்று அமெரிக்காவில் இருந்து திரும்பிய ஃபொன்சேகா கொழும்பு விமான நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்தார். தேவையான அளவுக்குத் தகவல்கள் அனைத்தையும் அவர் அமெரிக்காவுக்குக் கொடுத்துவிட்டார் என்றே கொழும்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. 'அதைவிட முக்கியமாக ஃபொன்சேகாவை அதிபர் தேர்தலில் நிற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்கள். அந்தத் தைரியத்தில்தான் அவர் இருக்கிறார்' என்றும் சொல்கிறார்கள். இதன் பின்னணி ரொம்பவே பீதியைக் கிளப்புவதாக இருக்கிறது.

ஜெயவர்த்தனா காலத்தில் அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடாக இருந்தது இலங்கை. ஆனால், இந்தியாவின் நெருக்கடியின்போது தனக்கு அமெரிக்கா எந்த உதவியும் செய்யவில்லை என்று கோபப்பட்டு, உறவைப் புதுப்பிக்காமல் போனார்கள். இதைத் தனக்குச் சாதகமாக சீனா பயன்படுத்திக்கொண்டது. இன்று முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டுப் பிரதேசம்போல இலங்கை மாறியது, அமெரிக்காவுக்கு உறுத்தல். இதை மாற்ற தனக்குக் கிடைத்த துருப்புச் சீட்டாக ஃபொன்சேகாவை அமெரிக்கா இறக்கிவிடக் காத்திருப்பதாகச் சொல் கிறார்கள். 'நான் எப்போதும் சீனச் சார்பு கம்யூனிஸ்ட்' என்று சொல்லிக்கொள்பவர் மகிந்தா ராஜபக்ஷே. அவர் ஆட்சிக்கு வந்ததும் ஆறு ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படாத சீன ஆயுதக் கிடங்கு ஒப்பந்தத்தைப் புதுப்பித்தார். அம்பாந்தொட்டையில் சீனத்துறை முகம், புத்தளத்தில் அனல்மின் நிலையம் அமைக்க வழி அமைத்தார். இந்தியாவும் அமெரிக்காவும் அணுசக்தி ஒப்பந்தம் போட்டதுமே இலங்கை மீது சீனாவுக்கு அதிகமான பாசம் பொங்கியது. சுமார் எட்டு நாட்கள் சீனாவில் தங்கி, தனது நட்பைப் புதுப்பித்தார் ராஜபக்ஷே. இது மட்டுமல்லாமல், அமெரிக்க எதிரியான இரானுக்கு உமா ஓயா அணையில் நீர் மின் நிலையமும் கொழும்பில் பெட்ரோல் சுத்திகரிப்பு மையமும் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. 'யார் என்ன சொன்னாலும், சீனாதான் இலங்கையின் நலனை முழுமையாக விரும்பும் நாடு. அதற்காக இந்தியாவை நாங்கள் பகைக்க மாட்டோம்' என்று மகிந்தா சொல்லி வருகிறார். ஆனால், அருணாசலப் பிரதேசத்தைச் சொந்தம் கொண்டாடுவது முதல் காஷ்மீர் பகுதிகளை ஆக்கிரமித்துவைத்திருப்பது வரை சீனாவுக்கும் இந்தியாவுக்குமான முட்டல் மோதல்கள் அதிகம். எதிரும் புதிருமான இரண்டு பேரை ஒரே நேரத்தில் நட்பு சக்தியாக இலங்கையால் நினைக்க முடியாது. 'ராஜபக்ஷேவுக்குச் சாதகமாக அக்டோபர் 15-ம் தேதி இந்திய ராணுவம் உஷாராக இருந்தது' என்று ஃபொன்சேகா சொன்னதும் அதிர்ச்சி அடைந்துவிட்டது இங்குள்ள மத்திய அரசு. இலங்கைக்குத் தேள் கொட்டினால் இந்தியாவுக்கு நெரி கட்டியது. 'இன்னும் பல ரகசியங்களை ஃபொன்சேகா வெளியிடுவதைத் தடுப்பதற்காகத்தான் பிரணாப் முகர்ஜி கொழும்பு வந்திருப்பதாகச் சொல் கிறார்கள். 'இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்' என்று பிரணாப் சொல்லியிருக்கிறார். தனி ஈழம் கேட்காத, சகோதர யுத்தம் செய்யாத இந்திய மீனவர்களை நித்தமும் அடித்து விரட்டும் சிங்களக் கடற்படையைக் கண்டிக்காத பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசியல் குழப்பங்களைத் தீர்க்கப் போயிருப்பது, அங்குள்ள கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்து மகா சமுத்திரத்தில் அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டுவல் லரசுகளும் நடத்தக் காத்திருக்கும் கோர யுத்தத்தின் முதல் காரியமாக இலங்கையின் அதிபர் தேர்தல்நடக்கப் போகிறது. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளியும் தமிழர்களுக்குநல்லது இல்லை. சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும் நிற்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கே - பிரபாகரன் ஒப்பந்தப்படி பொது மக்கள் வாழும் இடத்தில் இருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற விதியைப் பின்பற்றாமல் கொக்கரித்து புலிகளை முதலாவது கோபப்படுத்தியவர் சரத் ஃபொன்சேகா. அதன் பிறகுதான் மகிந்தா ஆட்சிக்கு வந்தார். அமைதி ஒப்பந்தத்தை அவர் மதிக்கவே இல்லை. எனவே, இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. 'இன்று தமிழர்களுக்கு உரிமை தராமல் போனதற்கு யார் காரணம்?' என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார் ஃபொன்சேகா. தமிழர்களது வாக்கு வங்கியை வாங்க இப்போதே வலை விரிக்க ஆரம்பித்துவிட்டார் அவர். மீள்குடியேற்றம் என்று சொல்லி ஏற்கெனவே வலையை விரித்துவிட்டார் ராஜபக்ஷே.

இவை இரண்டையும் சீனாவும் அமெரிக்காவும் அகலக் கண்கொண்டு பார்த்து இலங்கைத் தீவைக் கொத்தித் தின்னக் காத்திருக்கின்றன. இந்தியாவின் அடிவயிற்றில் என்னவோ நடக்கப்போகிறது!

 source:vikatan
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails