சென்னை:
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிரந்தநாள் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 27 ஆம் தேதி தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவுநாள் மாவீரர் தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாளில் பொதுமக்கள் மத்தியில் தோன்றி பிரபாகரன் உரையாற்றுவது வழக்கம். இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒடுக்கிவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு மாவீரர் நாளில் பிரபாகரன் உரையாற்றுவாரா என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபாகரனின் பிறந்த நாளான 26ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் நாடுகளில் பிறந்தநாள் விழா, மாவீரர் நாள் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிரபாகரனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் பல வண்ண சுவரொட்டிகள் ஏராளமாக ஒட்டப்பட்டுள்ளன.
நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில்...' எங்கள் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள்வாழ்த்துக்கள் இலை உதிர்வது இயற்கை சுழற்ச்சி வேர்கள் உதிர்வதில்லை வேர்கள் இருப்பதை நாளை இயற்கை மீண்டும் உறுதி செய்யும்"என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த சுவரொட்டியினால் உளவுத்துறை போலீசாரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை அமலில் உள்ள நிலையில் அதன் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
source:thenaali.--
No comments:
Post a Comment