Saturday, November 28, 2009
ஈரான் பெண் வக்கீலிடம் இருந்து அமைதிக்கான நோபல் பரிசு பறிமுதல்
டெக்ரான், நவ.28- ஈரான் பெண் வக்கீலும், மனித உரிமை போராளியுமான ஷரீன் எபாடிக்கு கடந்த 2003-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் பெண்கள் குழந்தைகள் உரிமைக்காக பாடுபட்டதற்காக இந்த பரிசு அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த பரிசை இப்போது ஈரானிய அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். இந்த தகவலை நார்வே நாட்டு அரசாங்கம் தெரிவித்து உள்ளது. நோபல் பரிசு சரித்திரத்தில் இப்படி நடப்பது இது தான் முதல் முறை ஆகும். இந்த பரிசை எபாடி லாக்கரில் பத்திரமாக வைத்து இருந்தார். இதை கடந்த வாரம் ஈரான் அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இந்த செயல் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக நார்வே வெளிநாட்டு மந்திரி ஜோனாஸ் கர் ஸ்டோர் தெரிவித்தார். நோபல் பரிசை ஒரு நாட்டு அரசாங்கமே பறிமுதல் செய்வது இதுதான் முதல் முறை ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். நார்வே வெளிநாட்டு அமைச்சரகம் ஈரான் நாட்டு தூதரை அழைத்து தன் எதிர்ப்பை தெரிவித்தது. எபாடியின் கணவரும் கைது செய்யப்பட்டு கடுமையாக அடித்து உதைக்கப்பட்டார். அதோடு அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. அவரது பென்ஷனும் முடக்கப்பட்டன. ஈரான் ஜனாதிபதி தேர்தல் முறைகேடுகள் குறித்து எழுந்த சர்ச்சையின் போது அவர் அகமதினிஜாத்தை விமர்சித்தார். அதோடு உலகம் முழுவதும் சுற்றி வந்து, தேர்தல் முடிவை உலக நாடுகள் ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தினார். மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் என்றும் கோரினார். எபாடியின் இந்த நடவடிக்கை தான் நோபல் பரிசு பறிப்புக்கு காரணம் ஆகும் என்று கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment