சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் "ஆழிப் பேரலை" என்னும் இயற்கையின் கோரப் பசிக்கு ஆயிரக் கணக்கில் மனித உயிர்கள் பறிக்கப்பட்டபோது, அந்த இயற்கையின் சீற்றத்துக்கு எதிராக எதுவும் செய்ய இயலாத நிலையில் மனிதகுலம் அலறித்துடித்தது!
பேரலையில் அள்ளுண்டுபோன மனித உயிர்களுக்காகப் பிரார்த்தனைகளை நடாத்தித் தன் இயலாமைக்குப் பரிகாரம் தேடிக்கொண்டது உலக சமுதாயம். எஞ்சியிருந்தவர்களுக்கு உதவுவதற்காக இனம்-மொழி வேறுபாடின்றி உதவுவதற்கு ஓடோடி வந்தது சர்வதேசம்.
ஆனால்…….மனிதர்களால்…………."ஏகாதிபத்தியப்" பேராசை கொண்ட நாடுகள் சிலவற்றின் உதவியோடு நிகழ்த்தப்பட்ட பல்லாயிரக் கணக்கிலான மனிதப் படுகொலைகளைக் கண்டும், காணாதவர்களைப் போன்று கைகளைக் கட்டிக்கொண்டிருந்தது இதே சர்வதேசம்.
போதாதென்று…. அங்கு மனித அவலங்கள் நடந்தேறுவதற்கான அத்தனை இழுத்தடிப்புகளையும் சாவகாசமாகப் புரிந்து கொண்டிருந்தன 'ஐ.நா'வும் அதன் அங்கத்துவ நாடுகள் சிலவும்!
இயற்கையின் கோபத்தின்போது உயிர்கள் பலியான நிகழ்வு மட்டுமே இடம்பெற்றிருந்தது. அப்போது "இயற்கை" எவரையும் சித்திரவதை செய்யவில்லை பாலியல் துன்புறுத்தல்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கவில்லை! பட்டினிபோட்டுப் பணியவைக்கும் தந்திரத்தையோ, பசியால் பரிதவிக்கும் மக்களைப் பார்த்துக் கைகொட்டி ரசிக்கும் ஈனத்தனத்தையோ இயற்கை செய்துவிடவில்லை.
ஆனால், மனிதனால் நடத்தப்படும் செயற்கை அவலங்களைச் சகமனிதனே வேடிக்கை பார்க்கும் விநோதமும்….. அதற்கு அண்டை நாடுகளே ஆயுதங்களையும், தொழிநுட்ப உதவிகளையும் வழங்கும் வஞ்சகமும் நம் கண்களின் முன்னாலேயே அரங்கேறியிருக்கிறது.
பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அந்த "ஹிட்லரிச" கொடுமைகளை வெளியுலகிற்கு அறிவித்துக் கொனண்டிருந்தன. இவற்றில் சில, தங்கள் வர்த்தக லாபங்களுக்காகச் செயல்பட்டனவாயினும்…. உண்மை நிலையினை உலகிற்கு உணர்த்துவதில் இவைகாட்டிய ஆர்வமும் நேர்மையும் பாராட்டப்பட வேண்டியவையே!
ஆனால்…. இவற்றையெல்லாம் பார்த்துச் "சர்வதேசம்" மசிந்துவிடவில்லை.
கண்களின் முன்னே அரங்கேறிக்கொண்டிருந்த படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும்- தாமும் மனிதர்களாகவே 'தோல் போர்த்தியிருந்த' இவர்கள் பார்த்துக் கொண்டுதானிருந்தார்கள்.
ஆம் இவர்களது கண்கள் இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தன; ஆனால் மூளையோ எதிர்கால அரசியல் சூதாட்டத்தில் உலகை வெல்லப்போகிறவர்கள் யார்?- அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதில் "கண்ணாயிருந்தது".
இதயமோ இறுகிக்கிடந்தது.
பதவி வந்துவிட்டால் அது கண்களை மறைத்துவிடும் என்று சொல்வதுண்டு.ஆனால் இருக்கும் பதவியினைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் சிலர் தங்கள் கண்களை மறைத்துக் கொண்ட "காட்சிகள்" இந்த அவல அத்தியாயத்தில் இடம்பெற்றதையும் மறக்க இயலவில்லை.
இனமானம்-தமிழ் வீரம் பற்றி வாய்கிழியப் பேசிய தலைவர்களது வாய்கள், கூசாமல் தங்கள் "நடுவண்" எசமானர்கள் கூறிய பொய்களை வழிமொழிந்து கொண்டிருந்தன!
தமிழ் மக்கள், சிங்களப் படைகளின் மூர்க்கத்தனமான குண்டுவீச்சுகளுக்கு அஞ்சிப் பதுங்கு குழிகளுக்குள் இருந்தவாறு உயிர்வாழும் கணங்களை எண்ணிக்கொனண்டிருந்த வேளையில்; இலவச உணவுப்பொட்டலங்களை வழங்குவதுபற்றி அக்கரையில் இருந்தவாறு "ஆலோசனை" நடாத்திக்கொண்டிருந்தார்கள். இது ஒரு வகையில் செத்துக்கொண்டிருக்கும் மக்க்களுக்கு "வாய்க்கரிசி" போடுவதற்கு ஒப்பான செயலே என்பது இந்தத் தலைவர்களுக்குப் புரியாமற்போனது "எட்டாவது" உலக அதிசயம்.
இரத்தக் கறைபடிந்த சில நாடுகளும், ஊழல் மாசுபடிந்த ஐ.நா வின் அதிகாரிகள் சிலரும் திட்டமிட்டு நடாத்திய "தமிழினக்கொலை" நாடகம் முற்றுமுழுதாக நிறைவடைந்த சமயத்தில்……சுமார் அரைலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டும், மூன்று லட்சம்பேர் முட்கம்பி வேலிகளுக்குள் சிறைப்பிடிக்கப்பட்டும் இருந்தார்கள்.
ஏற்கனவே முப்பதாண்டுகளாக நீடித்த இனப் போரின் காரணமாக ஈழத்தமிழினத்தின் மொத்த மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் உலகப்பந்தின் நாடுகள் பலவற்றில் ஏதிலிகளாய்த் தஞ்சமடைந்திருந்தார்கள்.
மேலும் சில லட்சம் பேர் கொல்லப்பட்டிருந்தனர். எஞ்சியோர் தங்கள் வாழிடங்களில் இருந்தாலும் சிங்களப் படைகளின் நடுவே "பலியாடுகளாய்" பாதி உயிரைக் கைகளில் பிடித்தபடி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
"சிங்" சொல் அம்பலம் ஏறுமா?
சிங்கள அரசு, தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று பிரகடனஞ்செய்து நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில்.. இன்றுவரை ஈழத்தமிழினத்தின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை அளிக்கும் திட்டம் எதனையும் சிங்கள அரசு முன்வைக்கவில்லை.
விடுதலைப்புலிகளை அழித்துவிட்டால் ஈழத்தமிழினத்துக்குத் தானாகவே உரிமைகள் யாவும் "மடியில் வந்து விழுந்துவிடும்" என்னுமாப்போல் செயலாற்றிய இந்தியமும் இப்போது கையைப்பிசைந்து கொள்ளும் நிலையில்தான் உள்ளது.
மாறாக ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மேற்குலகின் ஆரம்ப முயற்சிகளுக்குக்கூட குறுக்கே நின்றது இந்தியா!
அதுமட்டுமன்றி தனது "சொல் கேட்கும்" நாடுகளையும் 'மனித உரிமை மீறல்'களுக்கு ஆதரவாகச் செயல்படவைத்தது.
ஏற்கனவே அமெரிக்காவால் பாதிக்கப்பட்ட வியட்நாம்; கியூபா; வெனிசுலா போன்ற நாடுகளும்; வெள்ளையர்களின் ஆதிக்கத்தின் கீழ் பல ஆண்டுகளாக இன ஒதுக்கல்களுக்கு உள்ளான தென்னாபிரிக்கா போன்ற- இயற்கையிலேயே விடுதலை உணர்வு கொண்ட ஆபிரிக்க நாடுகளும் கூட மேம்போக்காக "மேற்கு-கிழக்கு" என்னும் பூகோள அடிப்படையில் அமைந்த வேறுபாட்டினையும், மேற்கின் ஆதிக்கத்தின்கீழ் அடிமைப்பட்டிருந்த கசப்பினையும் எண்ணி ஓரணியில் இணைந்து கொண்டன.
இதனால் பேரினவாதச் சிங்கள அரசின் கொடுங்கோன்மைக்கு இலக்காகி, கடந்த முப்பது வருடங்களில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் மக்களைப் பலிகொடுத்துக் கட்டியெழுப்பப்பட்ட ஓர் விடுதலைப் படையினை, சர்வதேச மரபுகள் யாவற்றையும் மதியாது செயல்பட்டு அழிக்கமுனைந்த ஓர் அரசின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கு "நற்சான்றிதழ்" வழங்கும் நாடாகத் தன்னை "உயர்த்திக்" கொண்டது இந்தியம்.
அதன் வழியாகத் தனது "ஆசிய வல்லரசுப் போட்டியில்" தான் வெற்றிபெற்று விட்டதான பொய்ம்மை மயக்கத்தில் அநீதிக்குத் துணைபோயிருக்கிறது இந்த "அஹிம்சா மூர்த்தி"யின் தேசம்!
இப்போது, "ஈழத்தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவதில் இந்தியா ஒருபோதும் பின்னிற்கப்போவதில்லை" என்னும் வாக்குறுதிகள் சிலவும் காதில் வந்து விழத்தான் செய்கின்றன.
என்றாலும், தமிழ்மண்ணில் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்த "ஏப்பிரல் – மே" மாதங்களில் முகர்ஜிகளும், மேனன்களும் கூறிய செய்திகளையும் அதற்குத் "தமிழகத் தலைமை" ஒத்தூதிய சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இப்போது "சிங்" சொல்வதாகச் சொன்னவற்றில் எவ்வளவு உண்மை இருக்கறது என்பதை காலந்தான் தீர்மானிக்கவேண்டும்.
சர்வதேசம் நம்பிக்கை தருமா?
சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்குப் பின், உலகின் ஒரேயொரு வல்லரசாகத் தன்னை நிலைப்படுத்திக் கொண்ட அமெரிக்கா- அல்கைடா தீவிரவாதிகளால் அதன் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதைக் காரணங்காட்டி……… தனக்குப் போட்டியாக அல்லது எதிரியாக நினைத்திருக்கும் நாடுகளின் தலைமைகளை வீழ்த்துவதற்காக கண்டுபிடித்த புதிய "ஆயுதம்" "பயங்கரவாதம்" ஆகும்.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், தனது கூலிப் படைகளின் உதவியோடு தனக்குப் போட்டியாகச் செயல்பட்டு வந்த நாடுகளின் தலைமைகளைப் பதவியிறக்கம் செய்தோ அல்லது கொன்றோ தன்னை உலகக் காவலனாக நிலைநிறுத்திக்கொண்டது அமெரிக்க நாடு!
இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இது நிறைவேற்றிய சதிகள் ஏராளம்.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் அது தன் கையில் எடுத்திருப்பது "பயங்கரவாதம்" அதற்கு ஏதுவாக வந்துவாய்த்தது அல்கைடாவின் தாக்குதல்! (இதுகூட அமெரிக்காவின் கைவண்ணந்தான் என்னும் தகவல்களும் கசிந்ததுண்டு) இந்தச் சம்பவத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட "புஷ்" நிர்வாகம் ஆப்கானிஸ்தான், ஈராக் என்று தனது திட்டங்களை ஏனைய மேற்கு நாடுகளின் உதவியோடும், "கையேந்திப் பிழைக்கும்" வளரும் நாடுகளின் ஆசியோடும் துரிதகதியில் நிறைவேற்றி முடித்தது. தொடர்ந்து அதன் கவனம் வடகொரியா, ஈரான் என்பதில் நிலைத்திருக்கிறது.
இதில் வேடிக்கை யாதெனில், ஈராக் போரின்போது வாக்களிக்கப்பட்ட "பலஸ்தீனம்" தொடர்பான பிரச்சனை இன்னும் இழுபறியாகவே போய்க்கொண்டிருக்கிறது.
மேற்சொன்ன அனைத்துப் போர் நடவடிக்கைகளுக்கும் அமெரிக்காவுக்குக் கைகொடுத்தது "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்னும் சுலோகமே!
ஆனால், தீவிரவாதம், விடுதலைப் போராட்டம், சாதாரண வன்செயல்கள் இவற்றுக்கிடையில் தெளிவான வேறுபாட்டினை வரையறை செய்யும் முன்பாகவே அனைத்தையும் "பயங்கரவாதம்" என்று முத்திரையிட்டு தனது அப்போதைய திட்டத்தினை நிறைவேற்றி முடித்தது அமெரிக்கா. அதே நேரத்தில் தங்கள் நாடுகளில் பாதிக்கப்பட்ட இனங்கள் போராட முயன்றபோது அதற்குப் "பயங்கரவாத" முலாம் பூசி ஈவிரக்கமின்றி அழித்துவிடலாம் என்று "கணக்குப் போட்ட" சீனா, இந்தியா, ஸ்ரீலங்கா போன்றவை இதனைத் தமக்குச்சாதகமாகப் பயன்படுத்த முயன்றதன் விளைவுதான் உலகின் இன்றைய மனிதப் படுகொலைகள்.
உண்மையில் அமெரிக்கா போன்ற வல்லரசு ஒன்று நேர்மையாக மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து நடக்குமேயாயின் ஏனைய நாடுகளும் அதனைப் பின்பற்றவேசெய்யும். ஆனால் உலகம் முழுவதும் அதிகாரப் போட்டியிலும், பொருளாதார வளத்திலும் ஆர்வங்காட்டும் அளவுக்கு "மனித உரிமைகளுக்கு" மதிப்பளிப்பதில்லை என்பதுதான் உண்மை.
அமெரிக்கவின் "பயங்கரவாத" முத்திரை குத்தப்பட்ட விடுதலை இயக்கமான "விடுதலைப் புலிகள்" இயக்கத்தினை, அந்நாட்டின் சிறுபான்மை இனத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமலேயே தடை செய்தன ஏனைய மேற்கு நாடுகள். இத்தனையும் செய்து விட்டு, வேறெந்த அந்நிய நாட்டுடனும் போரிடாத அல்லது போரிட வேண்டிய நிர்ப்பந்தமில்லாத ஸ்ரீலங்காவுக்கு இந்நாடுகள் வேவு விமானங்களையும், அதிவேகக் குண்டுவீச்சு விமானங்களையும், ஆட்லறி ஏவுகணைகளையும் தாராளமாக வழங்கின.அவற்றை இயக்குவதற்குப் பயிற்சிகளையும் அளித்தன.இத்தனை ஆயுதங்களையும் அந்நாடு தனது சொந்தக் குடிமக்களான தமிழருக்கு எதிராகவே பயன்படுத்தும் என்பதை இப்போது "மனிதாபிமானம், மனித உரிமை" என்று பேசும் மேற்குலகம் தெரியாது இருந்திருக்கமுடியாது.
இப்போது இந்நாடுகள் யாவும் ( ஐ,நா உட்பட) ஈழத்தமிழரது துன்பங்கள் பற்றியும், அவர்கள் சிங்கள அரசின் மனிதாபிமானமற்ற செயல்களால் அவதிப்படுவது குறித்தும் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆமாம்….. பேசிக்கொண்டுதானிருக்கின்றன…… இன்னும் செயலில் எதுவும் நடைபெறுவதாகக் காணோம்!
ஏதோவொரு வகையில் கறைபடிந்த கரங்களைக் கொண்டிருக்கும் இவை இதயசுத்தியுடன் ஈழத்தமிழர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது அரசியல் உரிமைகளை மீட்டுத்தர முயற்சி செய்யும் என நம்புவோம்.
இது ஒருவகையில் "கண்களைப் பறித்துவிட்டுக் காட்சி கொடுக்கும் நூதன செயல்தான்". என்றாலும் இதனை விட்டால் ஈழத்தமிழனுக்கு வேறுவழி?
படங்கள் உதவி: ஏஎப்பி
source:tamilspy
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment