Wednesday, September 2, 2009

ஆந்திரா முதல் மந்திரியை காணவில்லை?



ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தேடும் பணி இரவு முழுவதும் நடக்கும் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஐதராபாத்தில் இருந்து சித்தூருக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டரில் சென்றார்.



 காலை 8.35 மணிக்கு அவர் புறப்பட்டார். 9.35 மணி வரை ரேடார் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் சென்ற அரசு ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல் வந்தது. அதன் பிறகு சிக்னல் கிடைக்வில்லை. இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.



முதல்வர் எங்கே ? : காலை 9.35க்கு பிறகு ஆந்திர முதல்வருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அரசு வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. விமானப்படை ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. முதல்வர் எங்கே என்று ஆந்திர மாநிலம் தேடி வருகிறது. ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தரையிறங்கிருக்கலாம் என்றும் இதனால் அவர் ஏதும் பிரச்னையில் சிக்கி இருக்கலாம் என்றும் ஆந்திர ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டு வருகின்றன. 



உள்துறை அமைச்சகம் கருத்து: ‌ முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கிய விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை. ராணுவ ‌ஹெலிகாப்டரும் காணாமல் போன ஹெலிகாப்டரை ‌தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்னை குறித்து ஆழமாக கவனித்து வருகிறது உள் துறை அமைச்சகம் . பிரச்னை இன்னும் முடிவுக்கு வராததால் குழப்ப நிலை நீடிக்கிறது. ஆந்திர முதல்வருடன் தலைமை செயலக அதிகாரிகள் 2 பேர் மற்றும் பைலட்கள் 2 பேரும் மாயமாகியுள்ளனர்.



ஆந்திர நிதி அமைச்சர் ரோசய்யா பேட்டி : ஆந்திர நிதி அமைச்சர் ரோசய்யா அளித்துள்ள பேட்டியில் முதல்வர் ராஜசேகர ரெட்டி நலமாக இருக்கிறார் என நம்புகிறோம். அவரை விரைவில் மீட்போம் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் முதல்வர் சென்ற ஹெலிகாப்டரை தேடும் பணியில், பெங்களூரு, செகுந்தராபாத், கிருஷ்ணபட்டணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ‌‌ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடும் பணி நடந்து வருகிறது. விரைவில் முதல்வர் பத்திரமாக மீட்கப்படுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மேலும் முன்னேற முடியாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டன. ஆள் இல்லாத விமானத்தை அனுப்பி முதல்வரை தேடும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது. காட்டுப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு ஆந்திர அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. முதல்வர் சென்ற விமானத்தை பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் அருகில் உள்ள வன இலாக்கா அதிகாரிகளிடமோ , போலீசாரிடமோ அல்லது வருவாய் துறையினரிடமோ தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறது.



பத்திரிகை மற்றும் டி.வி., நிருபர்களுக்கும் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் கி‌டைத்தால் அரசுக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் மாயாமான சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் முதல்வரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.  ஆந்திர முதல்வர் மாயமானது பற்றி காங்கிரஸ் கட்சியும் கவலை தெரிவித்துள்ளது.



சோனியா கவலை : ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் திடீரென மாயமானது குறித்து காங்கிரஸ் கட்சிதலைவர் சோனியா கவலை தெரிவித்துள்ளார்.  ஆந்திராவில் தற்போது நிலவும் நிலவரங்களை சோனியா தீவிரமாக கண்காணித்து வருவதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறியுள்ளார். மேலும் அவர் ஆந்திராவில் தற்போதைய நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்றும், ரெட்டி மீண்டும் நலமுடன் திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வீரப்ப மொய்லி மற்றும் சவானை ஆந்திரா செல்லவும் சோனியா கேட்டு கொண்டுள்ளார்.



உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேட்டி: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நிருபர்களிடம் இது குறித்து பேசுகையில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் விமானம் மூலம் தேடும் பணி முடிந்துவிட்டது. வனத்துறைகளில் ராணுவ படையினர் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவும் தேடும் பணி தொடர்ந்து நடக்கும் . இது வரை நல்ல தகவல் இல்லை இவ்வாறு அவர் கூறினார்.



இஸ்ரோ உதவி  : ஆந்திர முதல்வரை தேடும் பணியில் இஸ்ரோ உதவி செய்கிறது. இதற்காக இஸ்ரோவின் சிறப்பு விமானமும் தேடும் பணியில் உதவி செய்வதற்க்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தேடும் பணியில் நக்சல் ஒழிப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

நன்றி:தினமலர்



--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails