இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்காக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வரிச் சலுகையை இலங்கை இழக்கவுள்ளது.
இலங்கையில் ஏற்றுமதிகளில் மிக முக்கியமானது ஆடை ஏற்றுமதியாகும். இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகை அளித்து வருகிறது. ஆனால் இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை அடுத்து இச்சலுகையை ஐ.ஒ நிறுத்த முடிவு செய்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி மற்றும் சர்வதேச வணிக அமைச்சு, செயலாளர் ரனுக்கே கூறியுள்ளார்.
இந்த அறிக்கை ஒரு வாரத்துக்கு முன்னரே கிடைத்ததாகவும், அதில் கடந்த 25 வருட போரில் இலங்கையரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த அறிக்கை மிக மோசமாக உள்ளதாகவும் ஜி.எஸ்.பி வரி இனி கிடைக்காது எனவும் அவர் மேலும் கூறினார்.
ஆனால் இந்த அறிக்கை பற்றிய கருத்துக்களை வெளியிட இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் பெர்னாட் சவகே மறுத்து விட்டார். இது ஆரம்ப கட்ட அறிக்கை என்றும், இது இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்டு அவர்களின் மறுமொழிகளையும் சேர்த்து இறுதி அறிக்கை விரைவில் வெளிவிடப்படும் என்று சவகே கூறினார்.
இவ்வாறு வரி சலுகை இழக்கப்படுமிடத்து வருடத்துக்கு 150 மில்லியன் டொலர்கள் இலங்கை அரசுக்கு நட்டமேற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி அறிக்கை ஒக்ரோபர் மாதத்தில் வெளிவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த முடிவென்றாலும் அது மேல் முறையீடு செய்யப்ப்ட முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்:அதிர்வு
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment