கொச்சி : சுறா மீன் இறகுகளை வெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பி, அதிலிருந்து போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. கடலில் காணப்படும் சுறா மீன், பெரிய வகை மீன் இனத்தைச் சேர்ந்தது. பொதுவாக இதைப் பிடித்து, சிலர் வெளிநாட்டுக்கு அனுப்பி வருகின்றனர். சுறா மீன்களின் இறகுகளை அறுத்து காயவைத்து, அவற்றை வெளிநாட்டுக்கு அனுப்புவதும் உண்டு.
கேரள மாநிலம், கொச்சியில், வைப்பின், முனம்பம், மட்டாஞ்சேரி பகுதிகளில், சுறா மீன் இறகுகளை மீன் வியாபாரிகள் வெட்டி எடுத்து அவற்றிற்கு பிரத்யேக விலை நிர்ணயித்து விற்கின்றனர். ஒரு கிலோவுக்கு ஐந்தாயிரம் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு வாங்கப்படும் சுறா மீன் இறகுகள், தாய்லாந்து, கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு, சென்னை வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு, அவை புற்றுநோய், கட்டிகள் ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன்பட்டன. மேலும், அறுவை சிகிச்சைக்கு பின், காயமடைந்த பகுதியில் கட்டப் பயன்படும் துணியில், சுறா மீன் இறகில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை திரவம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதி விரைவாக குணமடையும். இவ்வாறு, பல்வேறு மருத்துவ சிகிச்சைக்காகவும், உணவாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த சுறா மீன் இறகுகள், தற்போது, போதைப் பொருள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
சுறா மீன் இறகில் இருந்து, சமீப காலமாகத் தயாரிக்கப்படும் போதைப் பொருள், கிழக்காசிய நாடுகளில், தற்போது பிரபலமடைந்து வருகிறது. கஞ்சாவை போன்ற ஒருவகை செடியின் இலைகளில் இருந்து கிடைக்கும் சாறு மற்றும் சுறா மீன் இறகில் இருந்து எடுக்கப்படும் திரவம் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து, இப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு, கெட்டியாக தயாரிக்கப்படும் போதைப் பொருள், ஒரு லிட்டர் 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. சுறா மீன்களை பிடிக்கக்கூடாது என, ஸ்பெயின், ஆஸ்திரேலியா நாடுகள் தடை விதித்துள்ளன. அதுபோன்ற தடை ஏதும் இந்தியக் கடல் பகுதியில் இல்லை என்பதால், சுறா மீன்களைப் பிடித்து, அதன் இறகுகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் கும்பல் மகிழ்ச்சியில் உள்ளது.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment