''ராஜசேகர ரெட்டியை காணவில்லை!'' என இந்திய மீடியாக்கள் பதறிக் கொண்டி ருந்த நேரத்தில், ''ஃபொன்சேகாவை காணவில்லை...'' என்கிற பரபரப்பு இலங்கை முழுக்கப் பரவிப் பதற்றத்தைக் கிளப்பியது. ''இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கும் கூட்டுப் படைத்தளபதியான ஃபொன் சேகாவுக்கும் இடையே நடக்கிற பனிப்போர்தான் இந்தப் பர பரப்புக்கு காரணம்...'' என்று கொழும்பிலிருந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இது பற்றி கொழும்பில் இருக்கும் விவரமறிந்த வட்டாரங்களில் பேசினோம். ''புலிகளை ஒழிக்கும் வரை ஃபொன்சேகாவை ராணுவத் தளபதியாக வைத்து தட்டிக் கொடுத்த ராஜபக்ஷே சகோதரர்கள், இப்போது அவரை ஒழித்துக் கட்ட தீவிரமாகி விட்டார்கள். 'புலிகளை அடியோடு அழித்து, 60 ஆண்டு கால சிக்கலுக்கு தீர்வு கண்ட பெருமை எல்லாம் ஃபொன் சேகாவையே சேரும்' என இலங்கையில் உள்ள சில மீடியாக்கள் எழுதியதுதான் மோதலுக்கு முதல் முடிச்சாகவிழுந்தது. அதன் பிறகு, சிங்கள மக்கள் மத்தியிலும் ஃபொன் சேகாவுக்கு மகத்தான செல்வாக்கு உருவாகத் தொடங்கி விட்டது. ராஜபக்ஷேயின் தம்பியான கோத்தபய ராஜபக்ஷேதான் ஃபொன்சேகாவுக்கு அனைத்துவித அதிகாரங்களையும் வழங்கி இருந்தார். அதனால்தான் கடைசி கட்டப் போரில் அதிபர் ராஜபக்ஷேயின் பேச்சையும் மீறி, புலிகளின் முக்கியத் தலைவர்களைகொல்ல ஃபொன்சேகா உத்தரவ போட்டார். ஆனால், போர் முடிவுக் குப் பிறகு இலங்கையில் நிலை மையே தலைகீழாகி விட்டது. அதிபர் ராஜபக்ஷேவுக்கும் அவருடைய தம்பிகளான கோத்தபய ராஜபக்ஷே, பசில் ராஜபக்ஷே ஆகியோருக்கும் இடையிலேயே குடும்ப மோதல் தலைதூக்கி விட்டது. ராஜபக்ஷேயின் மகன் நிமல் ராஜபக்ஷே அரசியலுக்கு வருவதை கோத்தபயவும் பசிலும் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந்த மோதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, ஃபொன்சேகாவை ஒழித்துக் கட்டுகிற வேலையி லும் அவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். போரில் வெற்றி பெற்ற பிறகு ஃபொன்சேகாவுக்கு கூட்டுப் படைகளின் தளபதி என்கிற பதவி உயர்வு கொடுக்கப்பட்டது. இதற்காகத் தனி மசோதாவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உண்மையில் அது பதவி பறிப்பு நடவடிக்கைதான் என்பது ஃபொன்சேகாவுக்கே சில நாட்களுக்குப் பிறகுதான் புரிந்தது. இதற்கிடையில் 'இனி யாரும் ஃபொன்சேகாவின் உத்தரவுக்கு தலையாட்ட வேண்டியதில்லை!' என்கிற உத்தரவும் முப்படைத் தளபதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டது. இது தெரிந்து ரொம்பவே கொதித்துப் போனார் ஃபொன்சேகா. ஆனால், அடுத்த தாக்குதலாக ஃபொன்சேகாவுக்கான பாதுகாப்பைப் பாதியாகக் குறைத்து ஷாக் கொடுத்தார் கோத்தபய. ஒரு கட்டத்தில் ரொம்பவே திண்டாடிப் போன ஃபொன்சேகா 'என்னை அமெரிக்காவுக்கு அனுப்பி விடுங்கள்' என அரசிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், அதுவும் நிராகரிக்கப்பட்டு விட்டது. ஃபொன்சேகா ஏற்கனவே புலிகளால் தாக்கப்பட்டு, நூலிழையில் தப்பித்தவர். இப்போதும் அவருடைய உயிருக்கு புலி ஆதரவாளர்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த நேரத்தில் போதுமான பாதுகாப்பு இல்லாமல் ஃபொன்சேகா நடமாடுவது சாத்தியமான விஷயம் இல்லை. அதனால் அவர் ரகசியமான இடத்தில் பதுங்கி இருக்கிறார். இந்த விஷயம்தான் அவர் காணாமல் போய் விட்டதாகப் பரபரப்பைக்கிளப்பி விட்டது!'' என பனிப்போரின் பின்னணி குறித்து நமக்கு விளக்கினார்கள். இதற்கிடையில் நம்மிடம் பேசிய இலங்கையின் தமிழ் எம்.பி.க்கள் சிலர், ''ஃபொன்சேகாவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் உருவாகி இருக்கும் அபரிமிதமான செல்வாக்குதான் ராஜபக்ஷே சகோதரர்களை பயத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்வருகிற ஜனாதிபதி தேர்தலில் ஃபொன்சேகாவை நிறுத்துகின்ற திட்டத்தில் இறங்கின. இந்த விஷயம்தான் கோத்தபயவைக் கொதிக்க வைத்து விட்டது. இலங்கையின் உளவு அதிகாரிகள் சிலர் மூலமாக ஃபொன்சேகாவுக்கு முடிவு கட்டுகிற திட்டத்தையே சிங்கள அரசு உருவாக்கி விட்டது. ஃபொன்சேகாவின் உயிருக்கு ஆபத்து நேரும்போது, விடுதலைப் புலிகளின் மீது பழி போட்டு, உலகளாவிய பரிதாபத்தை ஈர்க்க சிங்கள அரசு திட்டமிட்டிருக்கிறது. புலிகள் மீதான தடையை நீக்க, உலக நாடுகள் இப்போதுதான் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கின்றன. ஆனால், புலிகள் மீதான தடையை நீட்டிக்கச் செய்வதற்காக ஃபொன்சேகாவை பலி கொடுக்க, எல்லா வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இது தெரிந்துதான் ஃபொன்சேகா அடிக்கடி மர்மமாக மறைந்து விடுகிறார்...'' எனச் சொன்னார்கள். இதற்கிடையில் ஃபொன்சேகா மீதான நடவடிக்கைகள் சிங்கள மக்களுக்கு பட்டவர்த்தனமாகத் தெரிய வந்து விட்டதால், ஃபொன்சேகாவின் மனைவியான அனுமா ஃபொன்சேகாவை ராணுவ அதிகார சபையின் தலைவராக நியமித்து இருக்கிறது சிங்கள அரசு. கூடவே புத்த பிக்குகளை அனுப்பி ஃபொன்சேகாவை சமாதானப்படுத்துகிற முயற்சிகளையும் இப்போது முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறதாம்! | ||||
|
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment