நீங்கள் பிறந்து எத்தனை வருஷம்? உங்கள் வயசு என்ன என்று கேட்டால் நீங்கள் உடனே சொல்லி விடுவீர்கள். நீங்கள் பிறந்து எத்தனை வாரங்கள், எத்தனை நாட்கள், எத்தனை நிமிடங்கள் எத்தனை விநாடிகள் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? சற்று முழிப்பீர்கள். இத எப்படி கணக்கு பண்ணுவது என்று திகைக்கலாம்.
சரி, சென்னை யிலிருந்து மதுரை அல்லது கோயம்புத்தூர் எவ்வளவு தூரம் என்று கேட்டால் இத்தனை கிலோ மீட்டர் என்று சொல்லிவிடலாம். எத்தனை மைல் என்று கேட்டால் சற்று வயதானவர்கள் தங்களின் பழைய கால நினைவிலிருந்து சொல்லலாம்; எத்தனை கடல்மைல் என்று கேட்டால் எப்படி மாற்றிச் சொல்வது?
நீங்கள் பத்து வயசை எப்போது அடைந்தீர்கள் என்று கேட்டால் சொல்லலாம். எப்போது 25 ஆயிரம் நாளைக் கடந்தீர்கள் என்று கேட்டால் எப்படிச் சொல்வது? உங்கள் வயது எப்போது 2000 வாரங்களை அடைந்தது என்று எப்படிக் கணக்கிடுவது?
மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டுமின்றி இன்னும் பல இதைப் போன்ற கணக்குகளுக்கு விநாடிகளில் விடை தரும் இணைய தளம் ஒன்று உள்ளது. இதனைப் பார்த்து பலவகைகளில் நான் அதிசயித்துப் போனேன். இந்த தளத்தின் முகவரி http://www.timeanddate.com. இது குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம்.
நேரம் மற்றும் காலம் இவற்றின் முழு பரிமாணங்களைப் பலவகைகளில் அறிய இது உதவுகிறது. உலகின் எந்த இடத்திலிருந்தும் நேரத்தைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் காலத்தைக் கணக்கிடலாம். இதன் முகப்பு பக்கம் சென்றவுடன் உள்ள பிரிவுகள் நம்மை மலைக்கச் செய்யவில்லை. ஆனால் ஒவ்வொன்றிலும் நுழைந்து கணக்கீடுகளைப் பெறுகையில் இதன் வேகமும் துல்லியமும் நம்மை அதிசயப்பட வைக்கின்றன.
முதல் பிரிவில் உலகக் கடிகாரம் பல்வேறு மண்டல நேரப்படி காட்டப்படுகின்றன. நகரத்தின் பெயரை டைப் செய்து தேடச் சொன்னால், அது உலகின் எந்த நேர மண்டலத்தில், தற்போது எந்த நேரத்தில் உள்ளது என்று காட்டுகிறது.
இந்த மண்டல நேர அட்டவணையைக் கொண்டு ஒருவரைச் சந்திக்கும் நேரத்தினை வரையறை செய்திடலாம்.
சூரியன் மற்றும் நிலவு தோன்றும் காலத்தை ஒவ்வொரு நாடு வாக்கில் கணக்கிடுகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உலகம் அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஊர் உலகத்தின் மற்ற ஊர்களுடன் ஒப்பிடுகையில் பகலா, இரவா, அந்திப் பொழுதா என்று உலகப் படம் போட்டுக் காட்டுகிறது. சூரிய, சந்திர கிரகணங்கள் எங்கு, எப்போது, எப்படித் தோன்றும் என்று விளக்கங்களுடன் காட்டப்படுகிறது.
பன்னாடுகளுக்கும் டயல் செய்திட ஐ.எஸ்.டி.டி. கோட் எண்கள் பட்டியல் கிடைக்கிறது. ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் உள்ள தூரம் என்ன என்று காட்டுகிறது. சென்னைக்கும் மதுரைக்கும் 424 கிமீ, 263 மைல், 229 கடல் மைல் எனத் தருவதுடன், உலக வரைபடத்தில் இரண்டு நகரங்களின் இடத்தையும் குறித்து அந்த நேரத்தில் அங்கு பகலா இரவா என்றும் காட்டுகிறது. சென்னை மீனம்பாக்கத்தில் பதிவான வெப்ப நிலை, அடுத்த 48 மணி நேரத்திற்கு மட்டுமின்றி அடுத்த வாரம் முழுவதும் வானிலை எப்படி இருக்கும் எனத் துல்லிதமாகக் காட்டுகிறது. சூரிய உதயம் வட கிழக்கில் 79 டிகிரி சாய்வாக காலை 5.57க்கு இருக்கும் என்று கணக்கிட்டுச் சொல்கிறது. இந்த தகவல்கள் அனைத்தும் நாசாவின் சாட்டலைட்டிலிருந்து பெறப்பட்டு தரப்படுகின்றன.
சென்னையிலிருந்து மதுரை மட்டுமல்ல, உலகின் எந்த நகரத்திற்குமான தூரத்தைப் பெறலாம். உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் பிளாக்குகளில் பதிந்து வைக்க டிஜிட்டல் கடிகாரத்திற்கான பைலை டவுண்லோட் செய்து இணைக்கலாம்.
எந்த ஆண்டின் எந்த மாதத்திற்குமான காலண்டரை அந்த ஊருக்கேற்ப பெறலாம்.
பிறந்த நாளைக் கொண்டு உங்களின் வயதினைப் பெறும் வசதிதான் நம்மை அசத்துகிறது. அடுத்த ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு இன்னும் எத்தனை நாள், மாதம், வாரம், மணி எனவும் கணக்கிட்டுச் சொல்கிறது. மேலே சொன்ன தகவல்களுடன் இன்னும் பல தகவல்களை இந்த தளம் சென்று பார்க்கலாம். தங்கள் அலுவல்களைத் திட்டமிடுபவர்கள் மிகச் சிறப்பாகவும் துல்லியமாகவும் திட்டமிட இந்த தளத்தை அருமையாகப் பயன்படுத்தலாம்
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment