Friday, September 11, 2009

கே.பி. மூலமாக கிளம்பும் கிடுகிடுப்பு:ராஜீவ் கொலையில் கை நீட்டப்படும் தமிழகத் தலைவர்கள்?

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'எந்திரன்' படத்துக்கு புலிகள் பணம் கொடுத்தனர்', 'தமிழ் திரையுலகத்தினர் பலரும் புலிகளிடம் பணம் பெற்றவர்கள்தான்' என்றெல்லாம் சிங்கள அரசு கிளப்பிய புகார், தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை குறித்த சில விவரங்களை சிங்கள அரசு வெளியிடப் போவதாகவும், விடுதலைப் புலிகளின் தலைவரான கே.பி-யின் வாக்குமூலமாக வெளி யாகப் போகும் அந்த விவரங்கள், தமிழகத்தில் பெரிய அளவில் அதிர்வலைகளை உண்டாக்கப் போவதாகவும் அடுத்த கிடுகிடு முன்னோட்டம் கொடுக்கிறார்கள், கொழும்பில் இருக்கும் சில பத்திரிகையாளர்கள்.

இந்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளை சுட்டிக் காட்டிப் பேசும் அந்தப் பத்திரிகையாளர்கள், ''ராஜீவ் கொலை குறித்து விசாரித்த பல்நோக்குக் கண்காணிப்பு ஏஜென்ஸியின் பதவிக் காலம் கடந்த ஜூன் மாதத்தோடு முடிவடைந்து விட்டது. ஆனால், ஈழ விவகாரத்தை ஊன்றி கவனித்துக் கொண்டிருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்நோக்குக் கண்காணிப்பு ஏஜென்ஸியின் பதவிக் காலத்தை சமீபத்தில் நீட்டித்திருக்கிறார்கள். சிங்கள அரசால் புலிகளின் புதிய தலைவரான கே.பி. வளைக்கப்பட்ட பிறகு, அவரிடம் ராஜீவ் கொலை குறித்த பல கேள்விகளைக் கேட்கும்படி சிங்கள அரசிடம் கேட்டுக்கொண்டது இந்தியாவின் சி.பி.ஐ. அமைப்பு!

கே.பி., இப்போது சிங்கள அரசின் பாதுகாப்புப் படையின் விசாரணையில் எப்படி இருக்கிறார் என்கிற விவரம் முழுமையாக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வரும் கே.பி-யிடம் எக்கச்சக்கமான கையெழுத்துகள் வாங்கப்பட்டு வருகிறது. அதோடு அவருடைய வாக்குமூலமாகச் சொல்லும்படி சில விவரங்களைப் பதிவு செய்கிற வேலையையும் சிங்கள அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கில் கே.பி-க்கு மிக முக்கியப் பங்களிப்பு இருப்பதாகவும், கொலை சம்பவம் நடந்தபோது கே.பி. பெங்களூரில் இருந்ததாகவும் சி.பி.ஐ. சந்தேகிக்கிறது.

2002-ம் ஆண்டு கே.பி-யை வளைப்பதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் நியூஸிலாந்து போனார்கள். ஆனாலும் அவர்களால் கே.பி-யை இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லை. இப்போது சிங்கள அரசிடம் சிக்கி இருக்கும் கே.பி-யை ராஜீவ் கொலை குறித்த விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்பக் கோரி மத்திய அரசு தாராளமாகக் கேட்கலாம். ஆனால், அதைச் செய்யாமல் ராஜீவ் கொலைச் சதி குறித்த கேள்விகளை சிங்கள அரசுக்கு முறைப்படி அனுப்பி வைத்து, ஆதார பூர்வமாக பதில் வாங்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிங்கள அரசு ராஜீவ் கொலை விவகாரத்தில் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டும், பேசியும் வந்த தமிழகத் தலைவர்கள் பலரையும் இழுத்துவிடக் கூடிய அபாயம் இருக்கிறது!'' எனச் சொன்ன அந்தப் பத்திரிகையாளர்கள்... சி.பி.ஐ. அதிகாரிகள் தயாரித்திருக்கும் கேள்விகள் குறித்த தகவல்களையும் நம்மிடம் சொன்னார்கள்.

''ராஜீவ் கொலைச் சதியில் சம்பந்தப்பட்ட இந்தியர்கள் யார் யார்? கொலைத் திட்டத்தை நிறைவேற்ற பண உதவி செய்தது யார்? ராஜீவ் கொலை செய்யப்படப் போகிற தகவல் யார் யாருக்கெல்லாம் தெரியும்? இதுபோன்ற கேள்வி களுக்கு பதில் வாங்க முயல்கிறது சி.பி.ஐ.! அதன்படி, ராஜீவ் கொலையாகப் போகும் தகவல் தமிழகத் தலைவர்கள் சிலருக்கு முன்கூட்டியே தெரியும் எனச் சொல்லியும், அத்தகையவர்களின் பட்டியலை வெளியிட்டும் தமிழகத்தில் பீதியைக் கிளப்புகிற திட்டத்தை சிங்கள அரசு கையில் எடுத்துவிட்டது. புலிகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தலைவர்கள் யார் என்பதையட்டியே இது அமையக்கூடும்!'' எனச் சொன்னார்கள்.

இப்படியரு பேச்சு நிலவுவது குறித்து பழ.நெடுமாறனிடம் நாம் பேசினோம். ''நம்ம ஊர் போலீஸாரிடம் ஒருவர் மாட்டினாலே, என்னவெல்லாம் ஆகும், எப்படியெல்லாம் வாக்குமூலங்கள் தயாரிக்கப்படும் என்பதற்கு மிகச் சமீபம் வரை உதாரணங்கள் உண்டே! கே.பி-யோ துளிகூட நியாய, தர்மங்கள் பார்க்காத சிங்கள அரசிடம் மாட்டியிருக்கிறார். அவருடைய வாக்குமூலமாக பல கட்டுக்கதைகளை சிங்கள அரசு பரப்பத் துவங்கியுள்ளது. முன்பு நியூஸிலாந்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் கே.பி-யைப் பிடித்தபோதே, ராஜீவ் கொலை குறித்து அவரிடம் விசாரித்திருக்க வேண்டியதுதானே... ராஜீவ் கொலை குறித்து சந்திராசாமி மற்றும் சுப்பிர மணியன் சுவாமியிடம் விசாரிக்கும்படி ஜெயின் கமிஷன் சொன்னதே... அவர்களிடம் விசாரணை நடந்ததா? ஈழ எழுச்சியைத் தடுக்கிற விதமாக ராஜீவ் கொலை விவகாரம் குறித்து கே.பி. சொன்னதாக சிங்கள அரசு எதை வேண்டுமானாலும் பரப்பிக் கொள்ளட்டும்! மடியில் கனமிருப்பவர்கள்தானே பயப்பட வேண்டும்?'' என நிதானமாகச் சொன்னார் நெடுமாறன்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோ, ''சிங்கள அரசின் வெறித்தாண்டவ இன அழிப்புக் கோரங்கள் இப்போது வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் வெளியாகி உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய இன அழிப்புத் துயருக்கு இந்திய அரசு தொடர்ந்து துணையாக நின்றது. உலக சமூகமே இந்திய, இலங்கை அரசுகளின் மேல் கடுமையான கோபத்தில் இருக்கிறது. அந்தக் கோபத்தைத் திசை திருப்பும் விதமாகத்தான் கே.பி-யிடம் ராஜீவ் கொலை குறித்து விசாரிக்கப் போவதாக இப்போது மத்திய அரசு பரபரப்பு காட்டுகிறது. கே.பி-யின் வாக்குமூலமாக பழிச் செய்திகள் பரப்பப்பட்டாலும், அதனைக் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். ஈழத்துக்காக எழுகிற குரல்களை எல்லாம் மிரட்டி அடக்க நினைக்கும் சதித்திட்டம் ஒருபோதும் ஈடேறாது!'' எனக் கொந்தளித்தார் வைகோ.

வாக்கு வங்கி, கோஷ்டி அரசியல், பரஸ்பர பழிதீர்ப்பு என்பதெல்லாம் தாண்டி இன்னும் எதற்கெல்லாம் ராஜீவ்காந்தியின் ஆன்மாவை இழுத்துக்கொண்டே இருப்பார்களோ..?!

- இரா.சரவணன்   
 
source:vikatan
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails