Tuesday, September 15, 2009

பெண்களிடம் தவறாக நடக்கும் ஆடவரைக் கைதுசெய்ய ஜப்பானிய பொலிசார் நடவடிக்கை


ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் பொதுப்போக்குவரத்து வாகனங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அந்நாட்டின் பொலிசார் ஒரு வார காலமாக மேற்கொண்டுவருகின்றனர்.

பெண்களிடம் அத்துமீறி நடந்துகொள்ளும் ஆடவரை கையும்களவுமாகப் பிடிக்க சீருடை அணியாத பொலிஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டமான ரயில் வண்டிகளில் பெண்களிடம் சில்மிஷம் செய்த அல்லது பெண்கள் அறியாமல் அவர்களைப் புகைப்படம் எடுத்த சந்தேகத்தின் பேரில் ஆறாயிரத்துக்கும் அதிகமான ஆண்கள் ஜப்பானில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சில ரயில்களில் மகளிர் மட்டும் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கூட்டம் நிரம்பி வழியும் ரயில் வண்டிகளில் அத்துமீறி கைபோடும் ஆண்களைச் சமாளிப்பதென்பது ஜப்பானியப் பெண்களுக்கு அன்றாடப் பெருங்கஷ்டமாக இருந்துவருகிறது.

ஜப்பானில் இளம்பெண்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினருக்கு பொதுப்போக்குவரத்து வாகனங்களில் ஆண்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான அனுபவம் இருப்பதாக ஒரு சுற்றாய்வில் தெரியவந்துள்ளது.

கூட்டத்தில் பெண்களை இடித்து சுகம் காண்பவர்கள் இணைய தளத்தில் ஒருவரோடு ஒருவர் விபரங்கள் பகிர்ந்துகொண்டு ஒரு கும்பலாக உருவெடுத்துவருகின்றனர் என்ற விஷயம் பொலிசாருக்கு கவலை அளிப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

source:bbc
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails