ஐதராபாத் : ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மாயமான ஹெலிகாப்டர் கர்னூல் மலை உச்சி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ விமானபடை அதிகாரி கூறியுள்ளார். இதனையடுத்து ஆந்திராவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆலோசிக்க பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அவசர உயர்மட்டக்குழு கூட்டம் நடக்கவுள்ளது.
நேற்று காலை 8.30 மணிக்கு கிளம்பிய ஹெலிகாப்டர், 9.30 மணிக்கு ரேடியோ தொடர்பை இழந்தது. நல்லமலா வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போதுதான் மாயாமாகி விட்டது. ஹெலிகாப்டரில் பயணித்த அதிகாரிகள் யாரிடமும் செயற்கைகோள் போன் இல்லை. இதுவும் நிர்வாகத்தினருக்கு ஹெலிகாப்டரை தேடுவதில் சிக்கலை ஏற்படுத்தியது.
தற்போது கர்னூலுக்கு கிழக்கே 40 நாட்டிகல் மைல் தூரத்தில் உள்ள இப்பகுதியை ராணுவ ஹெலிகாப்டர்கள் சுற்றிவளைத்துள்ளன. ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை உள் துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.
எந்த நிலையில் ஹெலிகாப்டர்: தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த ஹெலிகாப்டர் எந்த நிலையில் உள்ளது, விமானம் விபத்தில் சிக்கியதா என்ற கேள்விக்கு விமான அதிகாரி உறுதியான தகவல் ஏதும் கூற முடியாது என்றார். ஹெலிகாப்டர் கிடக்கும் பகுதி மிக சிரமமான மலைப்பகுதி என்பதால் அங்கு செல்ல சிரமம் ஏற்படும் என கருதப்படுகிறது.
பேரா கமாண்டர்கள் விரைவு : ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் கிடக்கும் பகுதிக்கு பேரா கமாண்டர்கள் விரைந்துள்ளனர். அவர்கள் ஹெலிகாப்டர் இருக்கும் பகுதியில் இறக்கி விடப்படுவார்கள். இன்னும் 20 நிமிடங்களில் அவர்கள் அங்கு செல்வார்கள் என தெரிகிறது. ஹெலிகாப்டர் கர்னூலுக்கு கிழக்கே ருத்ரகொண்டா - ரோலபெண்டா இடையே உள்ள அடந்த வனப்பகுதியில் இருக்கிறது.
பிரதமர் அவசர ஆலோசனை: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் உயர் மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.சோனியாவும் பங்கேற்கிறார்.
இஸ்ரோ எடுத்த புகைப்படத்தில் எதுவும் சிக்கவில்லை: தேடுதல் பணியில்ஈடுபட்டுள்ள இஸ்ரோ 41 புகைப்படங்களை எடுத்துள்ளது. ஆனால் இதில் ராஜசேகரரெட்டி சென்ற ஹெலிகாப்டர் குறித்து எவ்வித அடையாளமும் சிக்கவில்லை. இது மேலும் கவலையை அதிகரித்தது.
மக்கள் பிரார்த்தனை: 24 மணி நேரமாக எவ்வித தகவலும் கிடைக்காத காரணத்தினால் மாநிலம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் சர்வமத பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏராளமான புதிர்கள் : அவர் பறந்து சென்ற "பெல் 430 ரக ஹெலிகாப்டர், கடந்த சிலமாதங்களுக்கு முன் ,திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமாவை ஐதராபாத்தில் இருந்து குல்பர்க்கா விற்கு அழைத்துச் சென்றது. அப்போது சில தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது, ஆனால் பிரச்னை பெரிதாகவில்லை. சமீபத்தில் இந்த ஹெலிகாப்டர் முகப்பில் உள்ள பகுதியில் லேசான கீறல் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்குப் பின் சீர்செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். இந்த ரக ஹெலிகாப்டரில் இரண்டு ரேடியோ தகவல் தொடர்பு சாதனம், பகல் மற்றும் இரவு நேரத்தில் பறக்க உரிய நவீன சாதனங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.அப்படி வசதிகள் இருக்கும் பட்சத்தில், ஹெலிகாப்டர் வனப்பகுதியில் தரையிறங்கியிருந்தால், உரிய சமிக்ஞைகள் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. இல்லாவிட்டால், அதிக மழைப்பொழிவு காரணமாக, மின்னல் தாக்கியதோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.
source:dinamalar--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment