Sunday, September 13, 2009

விக்கிபீடியா 30 லட்சம் கட்டுரைகள்

 

என்சைக்ளோபீடியா – கலைக் களஞ்சியம்: உலகின் எந்த பொருள் குறித்தும் தேவையான தகவல்களைத் தொகுத்துத் தன்னிடத்தே கொண்டிருக்கும் தகவல் தொகுப்பு. அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்புகள் தொடங்கிய நாள் முதலாக ஏற்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் மாற்றங்களைத், தலைமுறை தலைமுறையாக மக்களுக்குத் தரும் அரிய பொக்கிஷம் இது. ஒவ்வொரு நாடும், இனமும் மக்களும் தங்கள் மொழியில் இதனைக் கொண்டிருந்தாலும், ஆங்கிலத்தில் உள்ள என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தான் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் அமைந்துள்ளது. இதே போல இணையத்தில் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு எழ, எண்ணம் முதிர்ந்து வளர்ச்சி பெற்று விக்கிபீடியா என்ற ஒரு அருமையான தகவல் தளம் நம் சந்ததிக்குக் கிடைத்துள்ளது. இந்த தளம் அண்மையில் ஒரு சாதனை மைல் கல்லை எட்டியுள்ளது. இந்த தளத்தின் கட்டுரைகளின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

உலகத்தின் அறிவுத் தேடல்களையும் அவற்றால் ஏற்பட்ட விளைவுகளையும் ஓர் இடத்தில் குவிக்க வேண்டும் என்ற எண்ணம் மிகப் பழமை வாய்ந்த அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் மூலம் ஏற்பட்டது. ஆனால் அச்சு வடிவில் இதனை ஒரு நூல் தொகுப்பில் வைக்க வேண்டும் என்ற எண்ணம் 18 ஆம் நூற்றாண்டில் தான் ஏற்பட்டது. அதன் முதிர்ச்சி தான் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.



இன்டர்நெட் வளரத் தொடங்கிய போது, பலர் இன்டர்நெட் என்சைக்ளோபீடியா திட்டங்கள் குறித்து சிந்திக்கத் தொடங்கினர். 1993ல் இன்டர்பீடியா (Interpedia) (http://en.wikipedia.org /wiki/Interpedia) என்று தொடங்கியதை இதன் முன்னோடி எனக் கூறலாம். இலவசமாக சாப்ட்வேர் வழங்கும் கோட்பாடினை முன்னுரைத்து அமல்படுத்திய ரிச்சார்ட் ஸ்டால்மேன் 1999ல் உலகளாவிய அளவில் கற்றுக் கொள்ள தொகுப்பாக என்சைக்ளோபீடியா ஒன்று இன்டர்நெட்டில் இருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார். 



முதலில் நுபீடியா (Nupedia)  என்ற பெயரில் இன்டர்நெட்டில் ஓர் இலவச என்சைக்ளோபீடியா உருவாக்கப்பட்டது. இன்டர்நெட்டில் விளம்பரங்களைக் கையாண்டு வந்த பொமிஸ் (Bomis)  என்ற நிறுவம் இதனைத் தொடங்கியது. இதன் உரிமையாளர்கள் ஜிம்மி வேல்ஸ், டிம் ஷெல் மற்றும் மைக்கேல் டேவிஸ் ஆகியோர் இதற்கான முயற்சிகளைப் பல தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பங்களிப்புடன் கொண்டு வந்தனர். கன்னிங்காம் மற்றும் ஸ்டால்மேன் (Ward Cunningham and Richard Stallman)  என்ற இருவர் முதலில் இதனைத் தொடங்கினர். 



Nupedia தங்கள் பங்களிப்புடன் இதனை உருவாக்க எண்ணினார்கள். ஆனால் நுபெடியா துவண்டு போக விக்கிபீடியா உருவானது. 2001 ஆம் ஆண்டு வெப்சைட் உருவாக்குவதில் வல்லவரான ஜிம்மி வேல்ஸ் மற்றும் தத்துவ ஆசிரியரான லாரி சாஞ்சர் ஆகியோர் அடங்கிய குழுவினரால் விக்கிபீடியா தொடங்க விக்கிமீடியா பவுண்டேசன் நிறுவப்பட்டது.



2001 ஆம் ஆண்டில் ஜனவரி 15ல் விக்கிபீடியா (Wikipedia)  என்னும் ஆன்லைன் என்சைக்ளோபீடியா வெளியானது. விக்கி (Wiki) என்ற சொல்லுக்கு ஹவாய் (Hawaii)  மொழியில் விரைவு என்னும் பொருள் உண்டு. விரைவாக மக்களுக்கு அறிவு சார் தகவல்களைத் தருவதால் இதற்கு விக்கிபீடியா எனப்பெயரிட்டனர். பலமுறை இதன் தன்மை, தகவல்களின் நம்பகத்தன்மை குறித்த ஆய்வுகள் வெளியான போதும் தொடர்ந்து இது இணைய வாசகர்களிடையே நம்பிக்கயைப் பெற்று வருகிறது. 2004 முதல் 2007 வரையிலான காலத்தில் இதில் ஏற்பட்ட முன்னேற்றம் புயல் வேகத்தில் இருந்தது. இன்று பல மொழிகளிலும் இது உருவாகி உள்ளது. உலகின் 267 மொழிகளில் விக்கிபீடியா உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்ற ஆகஸ்ட் 17ல் விக்கிபீடியா மிகச் சிறந்த வெற்றி இலக்கை அடைந் துள்ளது. இதில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தொட்டது. இதன் பின்னணியில் ஆயிரக்கணக் கானவர்களின் அயரா உழைப்பு உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் இது நிறைவேறி உள்ளது. மனித இனத்தின் அறிவுசார் முன்னேற்றம் அனைத்தையும் கொண்டு வருவதே இந்த விக்கிபீடியாவின் இலக்காக, நோக்கமாக அறிவிக்கப்பட்டு அதனை அடைவதற்காகத் தொடர்ந்து உழைத்து வருகிறது விக்கிபீடியா.



விக்கிபீடியா தளத்தில் பதிந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல். இவர்களால் ஒரு கோடியே 70 லட்சம் பக்கங்களில் தகவல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரைகள் 32 கோடியே 60 லட்சம் முறை எடிட் செய்யப்பட்டுள்ளன.



முதல் மாதத்தில் விக்கிபீடியாவில் 12 கட்டுரைகளே இடம் பெற்றன. அப்போது இதற்கான சாப்ட்வேர் மற்றும் சர்வர் உதவியினை பொமிஸ் நிறுவனத்தின் ஊழியர் களே தந்தனர். இவ்வகையில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், இதன் பெயருக்கேற்ப மிக விரைவாக அனைத்து பிரிவுகளிலும் வளரத் தொடங்கியது. 2001 பிப்ரவரியில் இதன் கட்டுரைகள் 1000 ஐத் தாண்டின. தொடர்ந்த செப்டம்பர் மாதத்தில் இது 10,000 ஆக உயர்ந்தது. இவ்வாறாக முதல் ஆண்டின் முடிவில் இதன் கட்டுரைகள் 20 ஆயிரத்தைத் தாண்டி இருந்தன. இதுவே 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 40 ஆயிரமாக முன்னேறியது.

தொடங்கிய ஆண்டிலேயே இந்த விக்கிபீடியா திட்டம் உலக மக்களைக் கவர்ந்தது. முதல் ஆண்டிலேயே வேறு மொழி களிலும் விக்கிபீடியா தொடங்கப் பட்டன. மார்ச் 16, 2001ல்deutsche.wikipedia.com  தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகின் முன்னணி மொழிகளில் விக்கிபீடியாக்கள் உருவாக்கப்பட்டன.  ஆங்கிலத்தை அடுத்து இரண்டாவதாக இடம் பெறுவது ஜெர்மன் மொழியில் உள்ள விக்கிபீடியா. இந்த கலைக் களஞ்சியத்தில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை விரைவில் தாண்ட உள்ளது. இதில் அடுத்த நிலையில் பிரெஞ்சு மொழி விக்கிபீடியா உள்ளது. இதில் 8 லட்சம் கட்டுரைகள் உள்ளன. அடுத்ததாக ஜப்பானியம், போலிஷ், மற்றும் இத்தாலிய மொழிகளில் உள்ள விக்கிபீடியா தளங்கள் 6 லட்சத்திற்கும் மேலான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 



மொத்த விக்கிபீடியா தளங் களையும் எடுத்துக் கொண் டால், ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளில் தான் 75% கட்டுரைகள் உள்ளன.



யார் வேண்டுமானாலும், எந்த மொழியிலும், தங்களுக்குத் தெரிந்த பொருள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதி இதில் வெளியிடலாம். அல்லது ஏற்கனவே உள்ள கட்டுரைகளின் வரிகளை எடிட் செய்திடலாம். புதிய விவரங்கள் மற்றும் தகவல்கள் இருப்பின் அவற்றை இணைக்கலாம். 

விக்கிபீடியா தமிழ் மொழியிலும் உள்ளது. 2003 ஆம் ஆண்டில் செப்டம்பர் 30 அன்று தொடங்கப்பட்டது. தொடங்கியவர் தன் பெயரை வெளியிடவில்லை. "மனித மேம்பாடு' என்ற கட்டுரையை இவர் வெளியிட்டார். ஆனால் அதன் பின் தமிழ் சமுதாயம் குறித்த ஒரு சில ஆங்கிலக் கட்டுரைகளே வந்தன. பின் நவம்பர் 2003ல் மயூரநாதன் என்பவர் இதன் முகப்பு பக்கம் முழுவதையும் தமிழில் கொண்டு வந்தார். இவரே பின்னர் தொடர்ந்து கட்டுரைகளை அளித்து வரத் தொடங்கினார். இன்றைய அளவில் மிக அதிகமாகக் கட்டுரைகளை எழுதியவர் இவரே. தமிழில் 2,760 கட்டுரைகளைத் தந்துள்ளார். இவர் இலங்கையில் பிறந்து வளைகுடா நாடு ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரைப் போலவே வெளிநாடுகளில் வாழும் பலர் தமிழ் விக்கிபீடியாவிற்குப் பங்களிப்பு செய்துள்ளனர். கனடாவிலிருந்து நிரோஜன், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் வாழும் பேராசிரியர் வி.கே. (188 கட்டுரைகள் – பெரும்பாலும் கணிதம், வானவியல் மற்றும் தத்துவம்) மற்றும் ஜெர்மனியிலிருந்து எழுதும் இலங்கைத் தமிழ்ப் பெண் சந்திரவதனா ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். தமிழ் நாட்டிலிருந்து தமிழ் விக்கிபீடியாவினை வளர்ப்பவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

தமிழ் தளத்தைக் காண ta.wikipedia.org என்ற முகவரிக்குச் செல்லவும். அங்கு சென்று புதிய அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கவும். கட்டுரைகளை எப்படி எழுதலாம் என்று அறிந்து உங்கள் பங்களிப்பினையும் வழங்கவும். இதுவரை இதில் பதிவு செய்தவர்களின் எண்ணிக் கை ஏறத்தாழ பத்தாயிரத்தைத் தொட உள்ளது. ஆனால் பங்களிப்பவர்கள் என்ன வோ மிகவும் குறைவு தான். தமிழ் விக்கிபீடியா வளர வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவர்கள் பலர், ஆங்காங்கே அறிவிப்பு கொடுத்து இதற்கான பயிலரங் கங்களை இலவசமாக நடத்தி வருகின்றனர். இந்தப் பயிலரங்கங்களில் எப்படி விக்கிபீடி யாவில் கட்டுரை எழுதுவது, உள்ளீடு செய்து பதிவது எப்படி, படங்கள், அட்டவணைகளை உருவாக்கிப் பதிவது எப்படி என்ற விபரங்கள் சொல்லித் தரப்படுகின்றன. இதில் கலந்து கொண்டு பயன்பெற்று இந்த உலக அறிவுத் தேடலில் நீங்களும் உங்கள் தடத்தைப் பதிக்கலாம்.



விக்கிபீடியா வரலாறு



2000: நுபெடியா (Nupedia)  திட்டம் லாரி சாஞ்சர் துணையுடன் தொடங்கப்பட்டது.



2001: Wikipedia.com, Wikipedia.org ஆகிய டொமைன் பெயர்கள் ஜனவரி 12, 13ல் பதிவு செய்யப்பட்டன. ஜனவரி 15ல் விக்கிபீடியா உதயமானது
2001 மார்ச் மற்றும் மே : பிரெஞ்ச் மற்றும் ஜெர்மன் உட்பட பிற மொழிகளில் விக்கிபீடியாக்கள் தொடங்கப்பட்டன. ஆகஸ்ட் 2001ல் இந்த தளங்கள் குறித்து செய்திகள் உலகெங்கும் வெளியாகத் தொடங் கியதால் மக்கள் இவற்றின் மேல் ஆர்வம் அடைந்தனர்.
2002: இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிதி சிக்கல் ஏற்பட்ட போதும் பல தொழில் நுட்ப மேம்பாடுகள் புகுத்தப்பட்டன. 
2003: தொடக்கத்திலேயே விக்கிபீடியாவின் கட்டுரைகள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. நிர்வாகத்திற்கென விக்கிமீடியா பவுண்டேஷன் தொடங்கப்பட்டது. 
2004: உலகளாவிய தன்மையுடன் ஓராண்டில் விக்கிபீடியாவின் கட்டுரைகள் இரு மடங்கு வளர்ச்சியை மேற்கொண்டு, கட்டுரைகளின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது. ஏறத்தாழ 100 மொழிகளில் உருவானது. 
2005: பன்னாட்டு மொழிகளில் விக்கிபீடியா உருவானதால் அதற்கான போர்ட்டல்கள் உருவாக்கப் பட்டன. சிஸ்டங்களை மேம் படுத்த நிதி திரட்டியதில் ஒரு லட்சம் டாலர் கிடைத்தது. அக்டோபர் மாதத்தில் கட்டுரைகளின் எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டியது. சிலர் இதன் கட்டுரைகளின் தகவல்களை வேண்டுமென்றே சிதைத்ததனால் பாதுகாப்பு முறைகள் வடிவமைக்கப்பட்டன. 
2006: கட்டுரைகள் 15 லட்சம் எண்ணிக்கையத் தாண்டின. விக்கிமீடியா பவுண்டேசனின் பதிவு பெற்ற வர்த்தக அடையாளமாக விக்கிபீடியா உரிமை பதிவு பெற்றது. இந்த ஆண்டில் நடந்த விக்கிமேனியா 2006 என்ற கருத்தரங்கில் ஜிம்மி வேல்ஸ், விக்கிபீடியா கட்டுரைகள் தரத்துடன் இருக்க வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டார். 
2007: அனைத்து மொழிகளிலும் உள்ள விக்கிபீடியா தளங்களில் 174 கோடி சொற்கள் இருந்தன. ஏறத்தாழ 250 மொழிகளில் 75 லட்சம் கட்டுரைகள் உருவாகி பதியப் பட்டிருந்தன. ஆங்கில மொழியில் அமைக்கப் பட்ட விக்கிபீடியாவிற்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,700 கட்டுரைகள் வரத் தொடங்கின. 
2008: பல்வேறு விக்கிபீடியா திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன. ஏப்ரல் மாதம் இதன் ஒரு கோடியாவது கட்டுரை வெளியானது. இது ஹங்கேரியன் விக்கி பீடியாவில் பதியப்பட்டது. இதற்குப் பின் சில மாதங்கள் கழித்து ஆங்கில விக்கிபீடியாவின் கட்டுரைகள் எண்ணிக்கை 25 லட்சத்தைத் தாண்டியது. 
2009: மார்ச் 20 ஆம் நாள் ஆங்கில விக்கிபீடியாவின் கட்டுரை எண்ணிக்கை 28 லட்சத்தை எட்டியது. ஜூன் 4ல் இது 29 லட்சம் ஆனது. ஆகஸ்ட் 17 காலை 4 மணிக்கு கட்டுரைகளின் சரியான எண்ணிக்கை 30,03,379ஐத் தொட்டது



source:dinamalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails