Wednesday, September 23, 2009

ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி

 
 

 

போர்ட்பிளேர் : நிக்கோபர் தீவுகளில் அமைந்த தெசீரா தீவிற்கு அருகில் உள்ள கடல் பகுதியில், ஆயுதங்களுடன் பிடிபட்ட பைபர் கிளாஸ் படகில், ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் பயன்படுத்தப் படும் எறிகுண்டுகள் இருந்ததாக போலீசார் நேற்று தெரிவித்தனர். இந்த படகு, கடந்த 11ம் தேதியே கண்டுபிடிக்கப்பட்டாலும், பாதுகாப்பு காரணங்கள் கருதி, அந்தமான் நிக்கோபர் போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், படகு குறித்த தகவல்கள் அனைத்தையும் மிக ரகசியமாக வைத்திருந்தனர்.



அந்தமான் குற்றவியல் புலனாய் வுத் துறை போலீஸ் கண்காணிப் பாளர் அசோக் சந்த் கூறியதாவது: தெசீரா தீவில் வசிப்பவர்கள், இந்த படகை பார்த்து, உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது, அப்படகு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட எறிகுண்டுகள், வித்தியாசமானதாக உள்ளது. அதை பயன்படுத்த, ராக்கெட் லாஞ்சர்கள் தேவை. மேலும், கையெறி குண்டுகள் மற்றும் ஏ.கே-47 ரக துப்பாக்கிகளுக்கான காலி தோட்டாக்கள் அதில் இருந்தன. இவ்வாறு அசோக் கூறினார்.



இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பைபர் படகின் தோற்றத்தை பார்க்கும் போது, அது வெளிநாட்டில் தயாரானதாக இருக்க வேண்டும். அந்தமான் நிக்கோபர் போலீசார் மற்றும் கமாண்டோக்கள் ஆகியோர், படகு உருவாக்கப்பட்ட இடம் குறித்து விசாரித்து வருகின்றனர்' என்றார். தவிரவும், தெசீரா தீவு அமைந்த கடற்பகுதி பயங்கரமான இடமாகும். இப்பகுதி மலாக்கா தீவு என்ற கடற்கொள்ளையர் நடமாட்டம் மிக்க பகுதி என்பதால், முழு விசாரணை தீவிரமாகியிருக்கிறது. கடந்த மாதம் இந்திய கடலோர காவல் படையினரால் பிடிக்கப்பட்ட வடகொரிய சரக்கு கப்பல், இப்பகுதியில் பெரும் பிரச்னையை எழுப்பியது. அதற்கு முன், மியான்மர் மற்றும் வங்கதேச அகதிகள் இருந்த படகை, தாய்லாந்து கடற்படை கப்பல் இப்பகுதியில் நுழைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சந்தேகப்படும் வகையில் ஆயுதங்களைக் கொண்ட படகு பிடிபட்டிருப்பது, அதிக கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அந்தக் கோணத்தில் தீவிர விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.



source:dinamalar
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails