மக்கள் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த பெரு நெருப்பு, காணொளி காட்சிப் பதிவு ஒன்றினுாடாக வெடித்துக் கிளம்பியுள்ளது. கால நீட்சியில், அவையாவும் மறக்கப்பட்டு விடுமென்று பேரினவாதம் எண்ணத் தலைப்படலாம். ஆனாலும் இனப்படுகொலைகள் ஏற்படுத்திய கொடூர வடுக்கள், விடுதலை உணர்வினை உயிர்ப்புடன் வாழவைக்கிறது.
தேசிய நல்லிணக்கமானது, இனத்துவ அடையாளங்களையும், பூர்வீக இனமொன்றின் அரசியல் பிறப்புரிமையினையும் சரணாகதியடையச் செய்து உருவாக முடியாது.
ஜனநாயகப் பூச்சுக்களால், தேசிய இனத்தின் அடியழித்தல் நிகழ்த்தப்படுவதை, கண்டும் காணாதது போல் நாடகமாடுபவர்கள், தேசியமென்பதும் அதற்கான விடுதலைப் போராட்டமென்பதும், மறுபார்வையற்ற போக்கில், ஸ்தாபிதம் உருவாக்கிய குருட்டுத்தனமென்று விளக்கமளிக்கிறார்கள்.
இந்த மறுபார்வைக்குள் பன்முகப் பார்வை, ஜனநாயகச் சொல்லாடல்கள், ஒடுக்கும் பிராந்திய வல்லாதிக்கத்தினை நோக்கிய சரணடைவு, பேசித் தீர்க்கலாமென்கிற பழைய இற்றுப்போன் புராணங்கள் என்பன அடங்கியிருக்கின்றன.
சிறீலங்காவின் படைக்கட்டமைப்போடு மட்டும் விடுதலைப்புலிகள் போராடினார்கள் என்பது போன்று இருக்கிறது இந்த குருட்டுத்தன விரிவுரையாளர்களின் பார்வை.
"வென்றால் சரித்திரம், தோற்றால் தரித்திரம்' என்பதல்ல மக்கள் போராட்டத்தின் சித்தாந்தம். மறு ஆய்வு, மீள்பரிசோதனை, சுயவிமர்சனம் என்பவை ஆரோக்கியமான அரசியல் தளமொன்றினை உருவாக்குமென்பது நிஜமானது.
ஆனாலும், வதை முகாம்களில் வாடும் மக்களை விடுவிக்கும் போராட்டத்தை விட, "தமிழினி' என்ன செய்கிறார். "கே பிக்கும் கி.பிக்கும்" என்ன உறவு. பத்மநாதனிற்கு எதிராகச் சதி செய்வோர் பெயர்ப்பட்டியல் என்பவற்றில் காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் செயற்பாடுகள் தேவைதானா? வென்பதையிட்டு மக்கள் கவலை கொள்கிறார்கள்.
எரிகிற வீடு அணையுமுன்பாக, பிடுங்கிச் செல்ல வேண்டுமென்று சிலர் அவசரப்படுகிறார்கள்.
இவை தவிர, பழையனவற்றைத் தோண்டி எடுத்து புதிய விவகாரங்களை உருவாக்காமல், நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் சகல இன மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டுமென மகிந்தரும் அழைப்பு விடுக்கிறார்.
வதைமுகாமில் இலட்சக் கணக்கான தமிழ்மக்கள் அல்லல்படும்போது, யாழ் நகரில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தத் தேர்தல் நடாத்தியவரல்லவா இந்த பெருந்தேசிய இன சனாதிபதி.
ஆதலால் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களின் உடலங்களைத் தோண்டி எடுக்க, முயற்சிக்க வேண்டாமென மகிந்தர் கூறுவது போலுள்ளது. அதைவிட, இன்னுமொரு முக்கிய அமைச்சர், முகாம் மக்களை அடைத்து வைத்திருப்பதற்காகக் கூறும் வியாக்கியானங்களையும் கேளுங்கள்.
அதாவது வதை முகாமிலுள்ள தமிழர்களை விடுதலை செய்தால், தென்னிலங்கையில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அற்றுப்போய் விடுமாம். தமது பாதுகாப்பிற்கான உத்தரவாதம், தமிழ் மக்களை சிறையில் அடைப்பதால் உறுதிப்படுத்தப்படுகின்றதென சிங்களம் கூறும் விளக்கங்களை, சர்வதேசமும் ஏற்றுக் கொள்கிறதா?
ஊடகவியலாளர்களை கடத்துவதும், பின்னர் படுகொலை செய்து வீதியோரத்தில் வீசுவதும், இத்தகைய பாதுகாப்பு நியாயப்படுத்தலிற்கு உட்பட்டவைபோல் தெரிகிறது.
பத்தி எழுத்தாளர் திசநாயகம் அவர்களுக்கு, 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்குவதன் ஊடாக, சிங்களத்தின் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறதென, பெளத்த சிங்களப் பேரினவாதச் சக்திகள் ஆறுதலடைகின்றன.
ஆயினும், உலகெங்கும் இருந்து கிளம்பும் எதிர்ப்பலைகளையிட்டு சிங்களம் அதிர்ச்சியடையவில்லை. மகாவம்சக் கண்ணாடிக்கென்றொரு ஊடக சுதந்திரவரையறை உண்டு. இன ஒடுக்குமுறை குறித்து எழுதப்படும் எழுத்துக்களை, இக் கண்ணாடி, ஊடுருவிச் செல்ல அனுமதிக்காது.
எழுத்துச் சமராடிய திச நாயகத்தின் மாற்றுச் சிந்தனைகள், பேரினவாத ஊடக கட்டமைப்பிற்குள் உள் வாங்கப்படக்கூடிய கருத்துக்கள் அல்ல என்பதில், சிங்களம் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆகவே, தமது போக்கிற்கு ஒத்திசைவாக இயங்க மறுக்கும் ஊடகத்தாரை, சிறையில் அடைப்பதைத்தவிர, வேறு மார்க்கம் மகிந்த சிந்தனையாளர்களுக்கு இருக்க முடியாது.
இந்த ஆண்டிற்கான சர்வதேச சுதந்திர ஊடகவியலாளர் என்கிற விருதினை திச நாயகத்திற்கு வழங்குவதோடு, உலக ஊடக அமைப்புக்களின் கடமையும் நிறைவு பெறுகிறது. அவரின் பாதுகாப்பினைஉறுதிப்படுத்துமாறு அறிக்கை விடுவதோடு அமெரிக்காவின் ஜனநாயகக் கடமையும் முற்றுப்பெறும்.
சிங்களத்தின் சிறையில் மட்டுமல்ல, இடைத்தங்கல் முகாமில்கூட, தமிழ் மக்களின் உயிருக்கு உத்திரவாதமில்லையயன்பதை, எத்தனை காலத்திற்கு இந்த மேற்குலக ஜனநாயக ஜாம்பவான்கள் கூறிக்கொண்டிருக்கப் போகிறார்கள்.
83ஆம் ஆண்டு தமிழின அழிப்பில், நிர்வாணமாக, தனது இரு கைகளாலும் தலையைத் தாங்கி, அவமானமடைந்து குந்தியிருந்த அந்த தமிழ் இளைஞனின் புகைப்படம், உலகின் மனச்சாட்சியை உலுக்கியது.
அதைவிடக் கொடுமையான வக்கிரத்தின் உச்சப் படிநிலையை, அண்மையில் வெளியான, நாசிப் படுகொலைகள் போன்று அமைந்த கோரக் காட்சிகள், உலக மக்களின் பார்வைக்குச் சென்றடைந்தது.
30 இலட்சம் வியட்னாம் மக்களை, கம்யூனிசத்தின் பெயரால் கொன்றொழித்த உலக நாயகனிற்கும், இந்தக் காணொளி அதிர்ச்சியளித்ததாம். இனியாவது, வன்னிப்படுகொலைகளுக்கு, சர்வதேச ரீதியிலான சுயாதீன விசாரணையயான்று முன்னெடுக்கப்படவேண்டுமென இவர்களால் உறுதிபடக்கூற முடியுமா? சந்தேகந்தான்.
இந்தியா என்கிற பிராந்திய ஜனநாயக வல்லாதிக்கம், அதனையும் தடுத்து நிறுத்தப்படாத பாடுபடுமென்பதை நாம் புரிந்துகொள்வோம். ஆகவே சிங்களப் பேரினவாதச் செயற்பாட்டிற்கு எதிரான மாற்றுச் சிந்தனைகளும், கருத்துக்களுமே மக்களுக்கு இப்போது தேவை.
பிராந்திய வல்லரசுகள் தமது சந்தைப் போட்டிக்காகவும், கேந்திர ஆதிக்கத்திற்காகவும், ஒடுக்குமுறையாளனாகிய சிங்களத்தோடு உறவாடி, தமிழின அழிப்பிற்குத் தொடர்ந்தும் துணை போவார்கள்.
தற்போது உலகப் பொருளாதாரச் சீரழிவு உருவாக்கிக் கொண்டிருக்கும் பிரளயம், ஒடுக்குதலிற்கு உள்ளாக்கப்படும் மக்களின் போராட்டங்களை, இயங்குநிலைக்கு முன் தள்ளிச் செல்கிறது.
அந்த முற்போக்கான வரலாற்று நிகழ்வுகளை உள்வாங்கி, தமிழ்மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தினை அதனோடு இணைத்துக்கொள்ள வேண்டும். எமக்காகப் பேசுபவர்கள், அறிக்கை விடுபவர்கள் எல்லோரும் எமக்காகப் போராட முன்வருவார்கள் என்கிற கற்பிதம் தவறானது.
ஒடுக்கப்படும் மக்களே அதனை உணர்ந்து கொள்வார்கள். அவர்களுடன் இணைந்து போராடுவதே விடுதலையைச் சாத்தியமாக்கும்.
இதயச்சந்திரன்.
ஈழமுரசு (11.09.09)
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment