எதிர்வு கூறலுக்கு எதிர்மாறாக பத்திரிகை விற்பனை அதிகரிப்பு
அச்சு இதழியல்துறை மறைந்துபோகும் என்று ஆரூடங்கள் தெரிவிக்கப்படும் நிலையில், உலகளாவிய ரீதியில் பத்திரிகைகளின் விற்பனை அதிகரித்திருப்பதாக சுவீடனின் கொத்தேபேர்க் நகரில் இடம்பெற்ற சர்வதேச செய்திப் பத்திரிகை மாநாட்டில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆசியாவிலும் தென்அமெரிக்காவிலும் பத்திரிகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2007 இல் பத்திரிகைகளின் விற்பனை உலகளாவிய ரீதியில் 2.7 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
இந்தியா, சீனா ஆகிய நாடுகளிலேயே அதிகளவில் விற்பனை உயர்ந்துள்ளது. இந்த இருநாடுகளிலும் தினமும் 107 மில்லியன் பத்திரிகைப் பிரதிகள் விற்பனையாவதாக வேல்ட் அசோசியேற்றட் ஒவ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஆயினும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பத்திரிகை வாசகர்களின் தொகை வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தக் கண்டங்களில் இலவசமாக விற்பனையாகும் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களால் பாரம்பரிய தினசரிகள் கடும் போட்டியை எதிர்நோக்குகின்றன.
செய்திப் பத்திரிகைகளும் அச்சு ஊடகங்களும் மரணித்து விட்டதாகக் கூறினாலும் நான் அவ்வாறு பார்க்கவில்லை என்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றமாநாட்டில் சங்கத்தின் தலைவர் திமோதி மோல்டிவ் கூறினார்.
இந்த மாநாட்டில் 1800 பிரசுரிப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகைகளின் சிரேஷ்ட நிறைவேற்றதிகாரிகள் கலந்துகொண்டனர். மூன்று நாட்கள் இந்த மாநாடு இடம்பெறுகிறது.
உலகில் அதிகளவு விற்பனையாகும் தினசரிப் பத்திரிகைகளில் 74 பத்திரிகைகள் ஆசியாவிலேயே பிரசுரிக்கப்படுகின்றன. இவற்றின் விற்பனை மிகச் சிறப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் அமெரிக்காவில் பத்திரிகை விற்பனை 3 சதவீதம் வீழ்ச்சி கண்டது. ஐரோப்பாவில் 1.5 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
கடந்த 5 வருடங்களில் அமெரிக்காவில் 8 சதவீதம் பத்திரிகை விற்பனை குறைவடைந்தது.
இதேவேளை, பத்திரிகை விளம்பரங்கள் மூலம் வருமானமும் 2007 இல் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேசமயம், இணையத்தளமுடனான விளம்பர வருமானம் 3 சதவீதம் உயர்வடைந்துள்ளது.
http://www.thinakkural.com/news%5C2008%5C6%5C4%5Cimportantnews_page52080.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment