Sunday, June 1, 2008

தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் ஒடுக்க வேண்டும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் மத தலைவர்கள் வேண்டுகோள்


புதுடெல்லி, ஜுன்.2-

தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் ஒடுக்க வேண்டும் என்று டெல்லியில் நடந்த தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் மதத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

மதச் சகிப்பு நாடு

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் டெல்லியில் `தீவிரவாத எதிர்ப்பு மாநாடு' நடைபெற்றது. அதில் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து மத தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தலாய்லாமா பேசும்போது, `இந்தியாவின் மதச் சகிப்பு தன்மை என்ற சிறப்பு உலக நாடுகளுக்கு சிறந்த உதாரணமாக உள்ளது. உலகில் உள்ள இந்து, புத்தம், ஜைனம், சீக்கிய என்று அனைத்து மதங்களும் இந்தியாவில் தோன்றியவையாகும். தற்போது அனைத்து மதங்களுக்கும் சிறந்த பாதுகாப்பாக இந்தியா இருக்கிறது' என்றார்.

மதரஸாக்களில் பயிற்சி

ஐக்கிய ஜ×ம்மா மசூதி கூட்டமைப்பு தலைவர் செய்யது யாக்யா புகாரி கூறுகையில், `எந்த ஒரு நபராலும், எந்த காரணத்துக்காகவும் தீவிரவாத செயல்கள் நடைபெற்றால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. தீவிரவாதத்தின் கொள்கைகள் கண்டிக்கத்தக்கது. தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் நாம் ஒடுக்க வேண்டும்' என்றார்.

பாகிஸ்தான் அவாமி தேசிய கட்சி தலைவர் முகமது உசேன் பேசுகையில், `பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள மதரஸாக்களில் தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோன்ற மதரஸாக்களை எதிர் கொள்ள நவீன பள்ளிகளை நாம் நிறுவ வேண்டும்' என்றார்.

எய்ட்ஸ் போன்றது

மத்திய மந்திரி கபில் சிபல் பேசும்போது, `தீவிரவாதம் என்பது எய்ட்ஸ் நோயைப் போன்றது. அதற்கு எந்த வரையறையும் கிடையாது. தீவிரவாதத்தை தடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம். தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பணம் சப்ளை செய்யப்படுவதை உலக நாடுகள் தடுக்க வேண்டும்' என்றார்.

காஷ்மீர் முதல்-மந்திரி குலாம் நபி ஆசாத் பேசுகையில், `தீவிரவாதத்துக்கு சில நாடுகள் ஆதரவும் உதவியும் செய்து வருகின்றன. பிற நாடுகளுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவவும் செய்கின்றன. தீவிரவாதம் பல்வேறு வசதிகளை தருவதாக கூறி, ஏராளமான இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாற்றப்பட்டு வருகின்றனர்' என்றார்.

கண்டன தீர்மானம்

சமூகநல ஆர்வலரான தீஸ்தா செடால்வாட், `அரசியல் ஆதாயத்துக்காக வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது வழக்கமாகி விட்டது' என்று குறை கூறினார்.

மேலும், தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டுக்காக வந்த பாகிஸ்தான் முன்னாள் மந்திரி புர்னேயை திருப்பி அனுப்பி வைத்ததற்காக மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இது தவிர, மத்திய அரசை கண்டித்து மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டில் இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மாலத்தீவு, ஜோர்டான், லிபியா, இலங்கை, உஸ்பெகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=416461&disdate=6/2/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails