இந்து மதத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட கிறித்துவம்
10 06 2008இந்து மதத்திற்குள் ஜாதி இருக்கிறது அல்லது ஜாதிதான் இந்து மதமாக இருக்கிறது. அதற்குள் சூத்திரன், பஞ்சமன் என்ற இழிவுகள் இருக்கின்றன. சூத்திரன் என்ற இழிவை அடையாளப்படுத்திக் காட்ட, 'இன்னதுதான்' என்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது.
பார்ப்பன மோகியாகவும், பார்ப்பன சடங்குகளைப் பின்பற்றி நடந்து கொள்வதையும், சுயஜாதி பிரியத்தையும் சூத்திர இழிவாகக் கொள்ளலாம்.
ஆனால், பஞ்சமர் என்று சொல்லுகிற பிரிவுகளைக் கண் திறந்து பார்த்தாலோ, கண்ணை மூடிக் கொண்டு நினைத்தாலோ & தீண்டாமை என்கிற இழிவு தெளிவாகத் தெரியும். புரியும்.
இப்படி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிற தீண்டாமையை ஒழிக்க முடியாதா?
'முடியும்' என்றது கிறிஸ்துவ மதம்.
ஆனால், 'எல்லோரையும் கிறிஸ்தவர்களாக மாற்றிவிட வேண்டும்' என்ற பேராசையால், இந்து மதத்திற்கு 'ஞானஸ்நானம்' செய்து கொண்டது கிறிஸ்துவ மதம். அதனாலேயே ஏசுவை கும்பிடும் இந்துக்களாகவே இருக்கிறார்கள் கிறிஸ்துவர்கள்.
விளைவு, ஜாதிவெறி தலைவிரித்தாடுகிறது தீண்டாமை கொடி, திருவிழாக் காலத்து மாதா கோயில் கொடியை விட உயரத்தில் பறக்கிறது.
ஆம்.ஜாதி அடையாளம் ஒழிந்தால்தான், ஜாதி இழிவு ஒழியும்.
இன்று, இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் பாரம்பரியமாக உள்ளவர்கள் இரண்டு பிரிவு மக்கள்:
1.தலித் மக்கள் 2. முஸ்லீம்கள்.
குறிப்பாக பிராந்திய மொழி பேசும் முஸ்லிம்கள், இந்து மத எதிர்ப்புணர்வுக்காகவே மதம் மாறியவர்கள். இவர்கள் முஸ்லிம்களாக மதம் மாறிய பின் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு மாறினார்கள் என்று சொல்ல முடியாது. மாட்டிறைச்சி உண்ணும் பழக்க முடையவர்களே முஸ்லிம்களாக மாறியிருக்கிறார்கள். அப்படியானால் யார் அவர்கள்?
தாழ்த்தப்பட்ட மக்கள் தானே!
வெள்ளாள கிறிஸ்துவர், கிறிஸ்துவ உடையார், கிறிஸ்துவ தேவர், நாடார் கிறிஸ்துவர், வன்னிய கிறிஸ்துவர் இவர்களுக்குக் கீழே தலித் கிறிஸ்துவர். இப்படியாக கிறிஸ்துவ மதம்.
ஜாதியையே தன் உருவமாகக் கொண்டது இந்து மதம்.
இந்த இந்தியச் சூழலில், நேரடியான ஜாதி அடையாளங்கள் அற்று இருக்கிறது இஸ்லாம்.
எப்படி அவர்களுக்கு மட்டும் இது முடிந்தது?
சுயம்பு சிந்தனையாளர்கள் இது குறித்துச் சிந்திப்பார்களா? சிந்தித்த பிறகு அதை இந்த உலகிற்கு அறிவிப்பார்களா?
பார்ப்போம்.
எழுச்சி தலித் முரசு ஆகஸ்ட் 2002
No comments:
Post a Comment