மெல்போர்ன், ஜூன் 6: ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில், இந்தியாவில் பிறந்த சந்தீப் குமார் (25) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் காவல் துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வந்த சந்தீப், மல்யுத்த விளையாட்டில் மிகவும் திறமையான வீரர். எனினும், இவரது திறமைக்கு இந்தியாவில் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த சந்தீப், தனது நண்பரும் மெல்போர்ன் நகரில் இயங்கி வரும் 'யுனைட்டட் ரெஸ்லிங் கிளப்' நிறுவனருமான குல்தீப் பாஸியின் அழைப்பின் பேரில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் குடியேறினார்.
சந்தீப் குமாரின் திறமையைக் கண்டு வியந்த ஆஸி. தேர்வுக் குழுவினர், ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கும் முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமை சந்தீப் குமாருக்கு கிடைத்துள்ளது.
இது குறித்து சந்தீப் கூறியதாவது: ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் சரியான ஸ்பான்சர் கிடைக்கவில்லை.
டாக்சி டிரைவராக வேலை செய்துதான் செலவை சமாளித்து வருகிறேன். பயிற்சி செய்வதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. ஓய்வு, தூக்கம் இல்லாததால் உடலும் சோர்வடைந்து விடுகிறது. மல்யுத்தப் போட்டி மிகவும் சிரமமானது.
கைகள், கால்கள், மார்பு, வயிற்றுப் பகுதி வலுவாக இருந்தால் மட்டுமே இதில் சாதிக்க முடியும். இவ்வாறு சந்தீப் குமார் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment