Wednesday, June 4, 2008

தமிழில் பெயர் வைத்தால் திரைப்படத்திற்குக் கூட வரிச்சலுகை. ஆனால் தமிழுக்காகவே வாழ்ந்த ஒருவரின் பேத்தி குடும்பம் எப்படியிருக்கிறது தெரியுமா?

 
 05.06.08    மற்றவை
 
மிழில் பெயர் வைத்தால் திரைப்படத்திற்குக் கூட வரிச்சலுகை. ஆனால் தமிழுக்காகவே வாழ்ந்த ஒருவரின் பேத்தி குடும்பம் எப்படியிருக்கிறது தெரியுமா?
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு பெண், தனது இரண்டு சின்னஞ்சிறிய குழந்தைகளுடன் பல்வேறு துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை மனுவோடு அலைந்து கொண்டிருந்தார். பரிதாபத்திற்குரிய அந்தப் பெண், வேறுயாருமல்ல; `தமிழ் ஞாயிறு' என்று சொல்லப்படும் தேவநேயப் பாவாணரின் பேத்திதான்!
1902 முதல் 1981 வரை வாழ்ந்த தேவநேயப் பாவாணர் `தமிழர் வரலாறு', `தமிழ் வரலாறு', 'தமிழர் மதம்...' என்னும் வரிசையில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். பன்மொழி வித்தகரான அவர், தனது ஐந்து வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். தமிழையே தாயாய் நினைத்த அவரது எழுத்துக்களும், பேச்சுகளும் ரத்தச்சிலிர்ப்பை ஏற்படுத்துபவை.
நான்கு மகன், ஒரு மகளைப் பெற்று அனைவருக்கும்,
`நச்சினார்க்கினியன் நம்பி,
சிலுவையை வென்ற செல்வராயன்,
அருங்கலை வல்லான் - அடியார்க்கு நல்லான்,
மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி,
மணி மன்ற மணவாணன்' என்று மணக்க மணக்க தமிழ்ப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தவர். ஆனாலும் அவருக்குப் போதிய வருமானமில்லை. என்றாலும் தன் மரணத்திற்கு முன்தினம்கூட மூச்சிரைக்கத் தமிழ் பேசிவிட்டுத்தான் தனது மூச்சினை நிறுத்தினார்.
அவரது வாரிசுகளுக்கு சொத்தென்று சொல்வதற்கு அவரது புத்தகங்களைத் தவிர வேறொன்றும் இல்லாமல் போனது.
1996-ல் பாவாணரின் நூல்களை கலைஞர் நாட்டுடைமையாக்கி அவரது வாரிசுகளுக்குச் சன்மானம் வழங்கினார். வாரிசுகள் ஒவ்வொருவருக்கும் மூன்றரை லட்ச ரூபாய் கிடைத்தது.
ஆனால், அதற்கு முன்பு வரை சிலுவையை வென்ற செல்வராயன், குடும்பம் நடத்தவே சிரமப்பட்டிருக்கிறார். தனது மகள் எஸ்தரை பத்தாவது வரை படிக்க வைத்து, அதன்பின் பணமில்லாமல் படிப்பை நிறுத்தி விட்டாராம். 1995-ல் எஸ்தருக்கு, மோசஸ் என்பவரை மணமுடித்து வைத்திருக்கிறார்.
அவரது மணவாழ்க்கை தொடங்கியபோது, தாத்தாவின் புத்தகப் பணமும் வர, மனநிறைவுடனேயே இருந்திருக்கின்றனர். மோசஸ் ஆரம்பத்தில் காண்ட்ராக்ட் வேலைகள் எடுத்துச் செய்ய, அதில் அடிக்கடி விபத்துகள் ஏற்படவும், குழம்பிப்போய் அந்த வேலையை விட்டுவிட்டார்.
பெந்தெகொஸ்தே பிரிவைச் சேர்ந்த அவர்கள் மனஅமைதிக்காக, சபையில் ஊழியம் செய்யப் போக, வாழ்க்கையே மாறிப்போய்விட்டதாம். மோசஸ் சபை ஊழியம், பிரசங்கம் என்று போனதால், எஸ்தரின் நாட்கள் வறுமையிலேயே கழிந்திருக்கின்றன.
பத்து வருடங்கள் வருமானமும் - பிள்ளைப் பேறும் இல்லாமல் இருந்து அதன் பின் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. ஜெசி பிரிசில்லா என்ற இரண்டு வயதுக் குழந்தையும், ஜெசிந்தா ஜெபமணி என்ற பதினொரு மாதக் குழந்தையும் எஸ்தரின் குடும்பத்தில் புது வரவாக வர, மோசஸின் ஊழிய வருமானமோ, ஒரு வாரத்திற்குக்  கூட தாக்குப்பிடிக்க முடியாமல் இருந்திருக்கிறது.
அதனால், `வெள்ளைச்சுடு சோறு' என்பதுகூட அவர்களுக்கு அரிய வகை உணவுப் பொருளாகிப் போனதால், உதவி வேண்டி தன் தாத்தா பற்றிய சான்றிதழ்களுடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்குப் படையெடுத்திருக்கிறார் எஸ்தர்.

இந்த நிலையில்தான் நாம் எஸ்தரைச் சந்தித்தோம். நிறையப் புத்தகங்கள், மனுக்கள், பாவாணரின் நாட்காட்டி,  தபால் தலை, புகைப்படங்கள் என வீடே கண்காட்சி போல் இருந்தது.

வறுமையை வெளிக்காட்டாமல் தெளிவாகவே பேசினார். ``தாத்தா இறந்தப்ப எனக்கு பதிமூணு வயசு. அப்பாவோட பிறந்தவங்க நாலு பேர். எல்லாருமே சொற்ப வருமானத்தில்கௌரவமாத்தான் வாழ்ந்தோம். வீட்டுல என்ன இருக்கு, இல்லைன்னே தெரியாது. எங்க தாத்தா தமிழ் மொழி பத்தி முப்பது நூல்கள் எழுதியிருக்கார்னு நினைச்சா பிரமிப்பா இருக்கும். ஆனா அதையெல்லாம் யார் நினைச்சுப் பார்ப்பாங்க? தாத்தா கிட்ட மொழி உணர்வு இருந்த அளவுக்கு வருமானமில்லை. உதவி கேட்கவும் தன்மானம் விடவில்லை. என் கல்யாணத்துக்குப் பின்னாடி எங்க வீட்டுக்காரர் காண்ட்ராக்ட் வேலை எடுத்து, நல்லா லாபமாத்தான் செஞ்சார். ஆனா அடிக்கடி விபத்து. திடீர்னு ஒரு நாள், `நாம சபைக்கு ஊழியம் பண்ணாம, சம்பாதிக்கிறதாலதான் இப்படி நடக்குதோ'ன்னு சர்ச் பிரசங்கத்துக்குப் போயிட்டார்.
நான் பத்தாவது வரை மட்டுமே படிச்சிருந்ததால, எந்த வேலைக்கும் போக முடியலை. வருமானம் பத்தலை. இப்போ இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திடுச்சு. அதுகளை பார்த்துக்கறதுக்கு தினசரியும் போராட வேண்டியிருந்துச்சு. நல்லா சாப்பிடக் கூடிய வயசுல அதுகளுக்கு சாப்பாடே தர முடியாத நிலை ஏற்பட்டிருச்சு. என் கணவர் `யார்கிட்டயும் எந்த உதவியும் யாசகமாய்க் கேட்க மாட்டேன்'னு ஊழியம் பண்ணப் போயிடுவார்.
என்னால இனியும் சமாளிக்க முடியாதுன்னு ஆனதால்தான் ரெண்டு குழந்தைகளோட திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ்  போனேன். தாத்தா போட்டோ, சர்டிஃபிகேட் எல்லாம் காட்டினேன். `அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்'னுதான் எல்லோரும் கேட்டாங்க. பாவாணர் பேத்திங்கற அடையாளம்கூட எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை. எந்த வகையிலாவது உதவி செய்து  இந்த இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றுங்கள் என்றுதான் தமிழக முதல்வரிடமும், தமிழ் உணர்வுள்ள உங்களிடமும் கேட்கிறேன்.
இதோ இந்த இரண்டு வயது மகளிடமாவது ஏதாவது சொன்னால் புரியும். கேட்பாள். கொடுத்ததைச் சாப்பிடுவாள்.
ஆனால், எனது பதினொரு மாத பச்சைக் குழந்தையின் பசிக் குரலை என்னால் கேட்க முடியவில்லை. அதனால் வெளியூரில் உள்ள எனது உறவினர்களிடம் குழந்தையைக் கொடுத்து விட்டு  வந்திருக்கிறேன்!'' என்றார்.
பாவாணரின் பேத்தி வறுமையிலிருக்கிறார் என்று கேள்விப்பட்ட திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வாசுகி, மே 28-ம் தேதி எஸ்தரை திண்டுக்கல்லிற்கு வரவழைத்து, விவரங்களைக் கேட்டுக் கொண்டு, `மேலிடத்திற்குப் பரிந்துரை செய்து எந்த வகையிலாவது உதவ முடியுமா என்று பார்க்கிறேன்' என ஆறுதல் கூறியிருக்கிறார்.
`வாயும்-கையும் தமிழில் புழக்கம்.. வயிற்றுக்குடலோ பசியில் புழக்கம்' என்பதுதான் பாவாணர் வாரிசுகளின் நிலை என்றால்... இதைவிடக் கேவலம் வேறு என்ன இருக்கிறது?

ஸீ க. மருதநாயகம்
படங்கள் : மகேஸ் 
  

 

 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails