20 ரூபாய் சாப்பாட்டில் என்னென்ன கிடைக்கும்?
சென்னை, ஜுன். 4-
தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் உணவு பண்டங்கள் விலை நேற்று முதல் குறைக்கப்பட்டன. 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் ஒரு சில முக்கிய ஓட்டல்களில் 5 சதவிகிதம் மட்டுமே விலையை குறைத்து உள்ளனர்.
250 கிராம் எடை அளவு சாப்பாடு இருக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்தது. அதன்படி சென்னை உள்பட நகரங்களில் மதிய சாப்பாடு நேற்று முதல் ரூ. 20-க்கு வழங்கப்படுகிறது.
வழக்கமாக ஓட்டல்களில் ஸ்பெஷல் சாப்பாடு என்றும், சாதாரண சாப்பாடு என்றும் இரண்டு வகையாக வழங்குகிறார்கள். ஸ்பெஷல் சாப்பாடு எப்போதும் போல வடை, பாயாசத்துடன் 3 வகை கூட்டு, பொரியல், அப்பளம் போன்றவற்றுடன் விற்பனை செய்யப்படுகிறது.
20 ரூபாய்க்கு வழங்கப்படும் சாப்பட்டின் அளவு 250 கிராம். சாம்பார், ரசம், மோர், வத்த குழம்பு, கூட்டு, பொரியல், ஊறுகாய் இடம் பெற்றுள்ளது.
ஹாட் சிப்ஸ் ஓட்டலில் ஜனதா சாப்பாடு என்ற பெயரில் ஏற்கனவே 350 கிராம் எடைக்கு மதிய சாப்பாடு ரூ. 22-க்கு வழங்கப்பட்டது. தற்போது அதை 300 கிராம் எடையாக குறைத்து கூட்டு, பொறியல், சாம்பார், ரசம், மோருடன் வினியோகிக்கப்படுகிறது.
சரவண பவன் ஓட்டல் நிர்வாகம் கூறும்போது, நாங்கள் 5 சதவிகிதம் உணவு பண்டங்கள் விலையை குறைத்துள்ளோம். மதிய சாப்பாடு ரூ. 20-க்கு வழங்குகிறோம். சாம்பார், ரசம், மோர், பொரியல், ஊறுகாய் இவற்றுடன் வழங்கப்படுகிறது. சாப்பாட்டின் தரம், ருசி எதுவும் மாறாது. இதுவரை எந்த ருசியில் வழங்கப்பட்டதோ அதே தரத்துடன் 20 ரூபாய் சாப்பாடு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
அண்ணா நகர் வசந்த பவன் ஓட்டல் நிர்வாகத்தினர் கூறும்போது, "அரசின் வேண்டுகோளை ஏற்று ரூ. 20-க்கு மதிய சாப்பாடு கொடுக்கப்படுகிறது. நேற்று 120 சாப்பாடு விற்பனை ஆகியுள்ளது. 40 ரூபாய் சாப்பாட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள் என்றார்.
சென்னையில் உள்ள சரவண பவன் ஓட்டல் கிளைகளிலும், வசந்த பவன் கிளைகளிலும், ஹாட்சிப்ஸ் கிளைகளிலும் ஒரே விலையில் உணவு பண்டங்கள் விற்கப்படுகிறது.
No comments:
Post a Comment